எந்த சர்ச்சுக்கு போறீங்க? பாகம்-1

முன்னுரை

மனிதரால் தொடங்கப்பட்ட திருச்சபை பிரிவுகள்(denominations) வளரவேண்டுமென்பதல்ல, தேவனுடைய மணவாட்டி சபை (The Church) தரத்திலும் எண்ணிக்கையிலும் பெருகி வளர்ந்து கிறிஸ்துவின் பூரணத்தை அடையவேண்டும் என்பதும்…

மனிதரால் தொடங்கப்பட்ட திருச்சபை பிரிவுகள்(denominations) அழியவேண்டும் என்பதுமல்ல, திருச்சபைகளின் சிங்காசனங்களில் வீற்றிருக்கும் உலகம்(Babylon) வீழ்த்தப்பட்டு மனிதனல்ல, கிறிஸ்துவே சபைக்குதலையாகவும், உலகப்பொருளல்ல, ஆவியானவரே ஜீவனாகவும் மாறி சகோதர ஐக்கியம் ஒருமனமும் பரிசுத்தமும் மேன்மையும் அடைய வேண்டும் என்பதே  இக்கட்டுரையின் அடிப்படை நோக்கம்.

திருச்சபை குறித்த காரியங்களை ஆதியோடந்தமாய் இத்தொடரில் அலசப்போகிறோம். வேதவசனத்தின் வெளிச்சத்தில் திறந்த மனதோடு எங்களோடு சேர்ந்து தொடரின் முதல் கட்டுரைக்குள் வாருங்கள்

சபை என்பது எது?

முதலாவதாக சபை என்றால் என்ன என்பதை பார்ப்போம். சபையும்(The Church), சபை பிரிவுகளும் (denominations) ஒன்றா? அல்லது வெவ்வேறா என்ற புரிந்துகொள்ளுதல் அவசியம்.

சபை என்பதை குறிக்கும் “எக்ளீசியா” என்ற கிரேக்க சொல்லுக்கு “சிறப்பான நோக்கத்துக்காக தெரிந்து கொள்ளப்பட்ட கூட்டம்” என்று பொருளாகும்.

clip art church

சபை என்பது கிறிஸ்து சிலுவையில் தம் விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தி சம்பாதித்த சகோதர ஐக்கியம். அதை மணவாட்டி என்று வேதம் அழைக்கிறது.(யோவா 3:29, வெளி 19:7, 22:2, 22:17) ஒரு மணவாளனுக்கு ஒரே ஒரு மணவாட்டிதான் இருக்க முடியும், சபையும் ஒன்றே ஒன்றுதான். அதைத்தான் நாம் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணத்தில் “பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும்…” என்று சொல்லுகிறோம். அதன் தலை கிறிஸ்து, அதன் ஜீவன் பரிசுத்த ஆவியானவர். விசுவாசிகள் ஒவ்வொருவரும் உலகின் எப்பகுதியில் இருந்தாலும், எந்நாட்டவராய் இருந்தாலும், எந்த இனத்தவராய் இருந்தாலும் எந்த மொழி பேசினாலும் நாம் அனைவருமே வேறுபாடின்றி அந்த தலையுடன் இணைக்கபட்ட உடலின் வெவ்வேறு உறுப்புக்கள். தேவன் நம்மை பார்க்கும்போது அந்த ஒரே சரீரத்தின் அங்கமாகத்தான் பார்க்கிறார் ( 1 கொரி 12:13-27)

ஆதித் திருச்சபையின் முன்மாதிரி:

1. மீட்கப்பட்டவர்களின் ஐக்கியம் இதன் வாசல் இடுக்கமானது

இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார் (அப் 2:47).

இரட்சிப்பு என்பது மதமாற்றமோ மனமாற்றமோ அல்ல, அது மறுபிறப்பு (யோவா 3:3).

ஒருவன் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு சுயத்துக்கு மரித்து, அவரோடு புது சிருஷ்டியாக உயிப்பிக்கப்பட்டு, அவருக்காக, அவரில் நிலைத்திருந்து வாழதொடங்குவதே இரட்சிப்பு ஆகும். அது ஆவியில் நிகழும் ஒரு மாபெரும் நிகழ்வு, அதை புற உலகுக்கு அறிவிக்கும் அடையாளமே திருமுழுக்கு (ரோமர் 6:1-11). இரட்சிப்பு ஒருநாளில் முடிந்துபோவதல்ல, அது மறுபடியும் பிறந்ததில் தொடங்கி, முடிவுபரியந்தம் நிலைத்திருந்து மறுமையில் ஆத்துமா தேவனோடு இணைவதில் நிறைவு பெறுகிறது.

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். (மத் 24:13)

இரட்சிக்கப்படவர்கள் சுய இலட்சியங்களுக்காக வாழமாட்டார்கள், உலகத்தின் போக்கிலும் போகமாட்டார்கள், சுய இச்சைகளை நிறைவேற்ற மாட்டார்கள். மிகுந்த உபத்திரவங்களின் மத்தியிலும் பரிசுத்தத்தில், சகோதர அன்பில் நிலைத்திருந்து, இவ்வுலகில் அந்நியரும் பரதேசியுமாய் வாழ்ந்து தேவன் வாக்குப்பண்ணியுள்ள நித்திய நன்மைகளை ஜெயமாய் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.

2. சபை என்பது கட்டிடமோ மதம் சார்ந்த அமைப்போ அல்ல:

இயேசுகிறிஸ்து ஒரு புதிய மதத்தையோ சித்தாந்தத்தையோ உருவாக்கச்சொல்லி கட்டளை கொடுக்கவில்லை. அவர் சீஷர்களை உருவாக்கச்சொல்லியே கட்டளையிட்டார்.

 நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் “சீஷராக்கி”, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். (மத்தேயு 28:19,20)

சீஷன் என்பவன் யார்? அவன் மதமாற்றம் அடைந்தவனோ மனமாற்றம் அடைந்தவனோ அல்ல ஏனெனில் மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும். அவன் பழைய மனிதனை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தவன். கிறிஸ்துவோடு ஆவியில் உயிர்ப்பிக்கபட்டு மறுபடியும் பிறந்தவன் ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். அவன் ஒரு புது சிருஷ்டி, சுயத்தை வெறுத்து சிலுவை சுமந்து இயேசுவுக்கு பின் செல்லுபவன்.

 ஆக, சபை என்பது ஒரு மதம் சார்ந்த அமைப்பு அல்ல. அல்லது ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தும் வழிபாட்டுத்தலமும் அல்ல. அது சீஷர்களின் ஐக்கியம்

 3. சபைகளை பிரித்தது தூரம் மட்டுமே:

ஆதித்திருச்சபை பெந்தேகொஸ்தே நாளில் முதன்முதலில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றபட்டபோது மறுபடியும் பிறந்த 3000 பேரில் தொடங்கியது. உதித்த சில நாட்களுக்குள் ஆயிரமாயிரமாகப் பெருகியது. அத்தனை பேரும் ஒரே இடத்தில் வசிக்க முடியாது ஒரே இடத்தில் கூடவும் முடியாது என்பதால் அவரவர் தத்தமது இடங்களில் யாரேனும் ஒரு விசுவாசியின் வீட்டில் கூடி கர்த்தரை தொழுதுகொள்ளவும் தங்களுக்குள் ஐக்கியம் கொள்ளவும் தொடங்கினர்.

 ஒவ்வொரு சபையும் அதினதின் மூப்பர்கள் கண்காணிப்பின் கீழ் இயங்கத்தொடங்கியது. எருசலேம் சபை, மக்கதோனியா சபை, அந்தியோகியா சபை, எபேசு சபை, கொரிந்து சபை, கலாத்தியா சபை என்று அந்தந்த இடங்களின் பெயர்களில் சபைகள் அறியப்பட்டன. அவர்கள் தங்களுக்கு சிறப்பான பெயர்களை இட்டுக்கொள்ளவும் இல்லை, வியாபார நிறுவனங்களைப்போல தங்களுக்கென்று லோகோ (Logo) வைத்துக்கொள்ளவும் இல்லை. இரண்டு சபைகளை பிரித்தது தூரமேயன்றி உபதேசமோ, சபைத்தலைவர் அபிமானமோ அல்ல. அத்தனை சபைகளும் மூப்பர்களின் கண்காணிப்பின்கீழ் இருந்தன, மூப்பர்கள் எல்லோரும் அப்போஸ்தலர்களின் கண்காணிப்பில் இருந்தனர். மூப்பர்கள், அப்போஸ்தலர்கள், விசுவாசிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சபையும் பிரதான மேய்ப்பரான இயேசுகிறிஸ்துவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

 4. வரலாறு காணாத ஒருமனமும் கட்டுப்பாடும்:

உடலில் உறுப்புக்கள் பல இருந்தும் அவை ஒவ்வொன்றும் மூளையோடு நேரடியாக இணைக்கபட்டுள்ளதுபோல, கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கங்களாக இருக்கும் விசுவாசிகள் அனைவரும் தலையாகிய கிறிஸ்துவோடு நேரடியாக இணைக்கபட்டிருந்தனர். அப்போஸ்தலர்கள், மேய்ப்பர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள் யாவரும் இயேசுவின் அடிமைகளாக சபைக்கு ஊழியம் செய்தார்களேயன்றி சபைக்கும் கிறிஸ்துவுக்கும் மத்தியஸ்தராக செயல்படும் ஆபத்தான வேலையில் இறங்கவில்லை.

 எல்லோரும் தலையாகிய கிறிஸ்துவோடு நேரடியாக இணைக்கப்பட்டிருந்ததால் வரலாறு காணாத ஒருமனம் அங்கே நிலவியது.

 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமும் உள்ளவர்களாய் இருந்தார்கள் (அப் 4:32).

 உபதேச மாறுபாடுகள் வெளியிலிருந்து திணிக்க பிசாசானவன் முயன்றபோதெல்லாம். அப்போஸ்தலர்கள் அதை ஒருமனமாய் கூடி நின்று முறியடித்தார்கள் ஒவ்வொருமுறையும் ஒருமனப்பாட்டை நிலைநாட்டினார்கள் (அப் 15).

எப்படிப்பட்டவர்களை எந்தெந்த சபைப்பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்ற கண்டிப்பான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன (1 தீமோ 3)

 5. இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை:

அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை வாசித்துப்பாருங்கள்; ஆதித்திருச்சபையில் நடந்த நிகழ்வு ஒவ்வொன்றும் வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியவை. அற்புத அடையாளங்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவங்கள் அவர்களுக்கு அனுதின நிகழ்வாயிருந்தது. மேகஸ்தம்பத்துக்கும் அக்கினி ஸ்தம்பத்துக்கும் கீழிருந்த இஸ்ரவேல் மக்களைப்போல அவர்கள் தேவனுடைய பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் நடத்தப்பட்டார்கள்.

 6. சபை ஒரு குடும்பம்

சபை என்பது குடும்பங்களின் குடும்பம். சபையை குடும்பம்போல பாவித்த மூப்பர்களும் குடும்பத்தை சபையை போல நடத்திய தகப்பன்மார்களும் உள்ள அங்கமாக இருந்தது. குடும்ப அங்கத்தினருக்குள் தியாகம் இருக்குமேயன்றி வியாபாரம் இருக்காது. ஆதிச்சபையில் ஆவிக்குரியதாய் கருதப்பட்ட எதுவும் விற்கபடவில்லை. ஊழியர்கள் பணம் பெற்றுக்கொண்டு ஊழியம் செய்யவில்லை. யாரும் யாரையும் அதிகாரத்தைக் கொண்டு கட்டுப்படுத்தவில்லை. ஆனால் தேவ அன்பில் எல்லோரும் கட்டுண்டு கிடந்தார்கள்.

 காணிக்கை பணம் தரித்திரரின் தேவைகளையும். இறைப்பணியில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்ட மூப்பர்களின் தேவைகளையும் சந்தித்ததேயன்றி அது யாரையும் பொருளாதாரத்தில் ஐசுவரியவான்களாக்கவில்லை.

 பெரும் தொகை பணம் வசூலித்து அதில் பெரிய திட்டங்கள்போட்டு  நிகழ்ச்சிகள் நடத்தி அந்த நிகழ்ச்சிகளின் வழியாக ஆத்தும ஆதாயங்கள் செய்யப்பட்ட முன்மாதிரியும் அங்கு இல்லை. நிகழ்ச்சிகளல்ல, காட்சிகளல்ல… சாட்சிகளே ஆத்துமாக்களை இயேசுவின்பால் சுண்டி இழுத்தது.

 ஆடம்பரத்தேவைகளுக்காக பணம் வசூலிக்கபடவுமில்லை, செலவழிக்கப்படவுமில்லை. பணத்தில் வலிமையால் அல்ல பரிசுத்த ஆவியின் வல்லமையாலேயே அன்றைய சபைகள் வாழ்ந்தன, வளர்ந்தன.

 ஆதி அப்போஸ்தலர்களுடைய வாழ்க்கையும் சாட்சியுள்ளதாகதான் இருந்தது. விசுவாசிகள் காணிக்கையாக கொடுத்த சொத்துக்களை தங்களுடையது என்று கருதி தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்தாருக்கோ எடுத்துக்கொள்ளவில்லை. தியாகம்தான் ஊழியத்தின் அஸ்திபாரமாக இருந்தது. கிறிஸ்துவுக்குள் இருந்த தியாக மனப்பான்மையே ஆதி அப்போஸ்தலர்களுக்குள்ளும் இருந்தது அந்த தியாக மனப்பான்மையே விசுவாசிகளுக்கும் வந்தது.

 சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது (அப் 4:32)

இன்றைக்கு ஊழியம் என்பது தனி மனித குடும்ப சொத்தாக மாறிப்போய்விட்டது. அதனால்தான் ஊழியங்கள் லாபகரமாக இயங்க வியாபார தந்திரங்கள் புகுக்கப்பட்டுவிட்டது. அதாவது தியாகம் என்பது வெளியேறி சுயநலம் என்பது நுழைந்துவிட்டது. இன்றோ நிலைமை மாறி பொருளாசையானது விசுவாசிகளின் மனதில் விஷமாக விதைக்கப்பட்டு வருகின்றது.

 ஆதித் திருச்சபையில் குழப்படிகளே இல்லையா? பிரச்சனைகளே இல்லையா? பின்னடைவே இல்லையா?

தொடர்ந்து தியானிக்கலாம்..

5 thoughts on “எந்த சர்ச்சுக்கு போறீங்க? பாகம்-1”

  1. அன்புள்ள அண்ணா இதன் தொடர்ச்சியை எழுதுங்கள்….

  2. good bro ithanai sabaikalum avatrirkendru sila nadaimuraikalum sariya thavara..??pala naatkala yen manathin kelvi …innum saatharana nadaiyil vilakungal..praise the lord

    1. நிச்சயமாக எழுதுகிறேன் சகோ…மிக்க நன்றி!

Leave a Reply