ஒரு திருச்சபையில் செய்தியளிக்க ஒரு பிரசங்கியார் வந்திருந்தார். இதற்கென வெகுநாட்கள் ஜெபத்தில் அவர் ஆயத்தம் செய்து வைத்திருந்த செய்தி “பாவத்தின் மேல் வெற்றி” என்பதாகும். கூட்டத்துக்கு முந்திய நாள் சபை இளைஞர்கள் சிலர் அவரை சந்திக்க வந்தனர். அவர்கள் அவரிடம் “நாளைக்கு எது குறித்து போதிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்க அவர் “பாவத்தின் மேல் ஜெயம்” என்றார்.
இளைஞர்களில் ஒருவன் பிரசங்கியாரிடம், “ஐயா உலகம் அழிவை நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தி கிறிஸ்துவின் அதிகாரபூர்வ ஆட்சி மிகவும் நெருங்கிவிட்டது போல தெரிகிறது… ஏதேதோ வடிவங்களில் அரசாங்கங்கள் அடையாள அட்டைகளை மக்கள் மீது திணிக்கத் துவங்கியிருக்கின்றன. இந்த அடையாள அட்டைகள் எப்போது வேண்டுமானாலும் 666 முத்திரையாக மாற்றப்பட்டு நம் நெற்றிகளிலோ அல்லது வலக்கரங்களிலோ பதிக்கப்படலாம். இதுபோன்ற சூழலுக்கு எப்படி தப்புவது என்று கற்றுக்கொடுங்கள் அதுதான் இன்றைய உடனடித் தேவை” என்றானாம்
அதற்கு பிரசங்கியார் “அந்தி கிறிஸ்துவின் முத்திரையை தரித்தால் நித்தியத்தை எங்கே கழிப்பீர்கள்?” என்று கேட்க அதற்கு அந்த இளைஞன் “நரகத்தில்” என்று பதிலளித்தான். “பெயர் கிறிஸ்தவராக பாவத்தில் வாழ்ந்து மரித்தால் உங்கள் நித்தியத்தை எங்கே கழிப்பீர்கள்?” என்று கேட்க “அதே நரகத்தில்தான்” என்று பதிலளித்தான்.
பிரசங்கியார், “நம்மை பாவத்துக்குள் தள்ளும் சரீரத்தை மேற்கொள்ளுவது எளிதா? அல்லது இராணுவங்களையும், சட்டங்களையும், ஆயுதங்களையும் வைத்து தனது முத்திரையை ஏற்க நம்மை மிரட்டும் உலக வல்லாதிக்கத்தை மேற்கொள்ளுவது எளிதா? என்று கேட்க சற்று யோசித்த அந்த இளைஞன், “நமது சொந்த சரீரத்தையே சமாளிக்க முடியவில்லை என்றால் ஒரு உலக வல்லாதிக்கத்தை எப்படி சமாளிக்க முடியும்?” என்று அவரையே திருப்பிக் கேட்டான்.
பிரசங்கியார் சிரித்தபடியே, “அதனால்தான் ‘பாவத்தின் மேல் வெற்றி’ என்ற செய்தி மிகவும் முக்கியமானது. நீங்கள் இன்று உங்கள் சொந்த சரீரத்தை சிலுவையில் அறைந்து பரிசுத்தமாக வாழ்ந்து கொண்டிருந்தால் வரப்போகும் வல்லாதிக்கத்தைக் குறித்தோ அந்திகிறிஸ்துவின் முத்திரை குறித்தோ அச்சப்படவேண்டியதில்லையே” என்றாராம்.
Pro 25:11 A word fitly spoken is like apples of gold in pictures of silver.