எதுவெல்லாம் நம்மை கிறிஸ்துவைப்போல அவரது திவ்விய சுபாவத்துக்கு உரியவர்களாக மாற்றுமோ. அதுவெல்லாம் நல்ல உபதேசம். அந்த உபதேசத்தைக் கேட்டால் நான் நரகத்துக்குக்தப்பி பரலோகம் செல்ல மாத்திரமல்ல, இந்த பூமியில் ஏதோ ஒன்றை அடைய அழைக்கப்பட்டிருக்கிறேன் என்பதை விளங்கிக் கொள்வேன். பரலோகம் மாத்திரமே குறிக்கோளாக இருந்தால் நான் மீட்கப்பட்ட நாளே எனக்கு மரண நாளாகவும் இருந்திருக்கலாமே? நான் இரட்சிக்கப்பட்ட பின்னும் என்னை ஏன் தேவன் இந்த பூமியில் உயிரோடு வைத்திருக்கிறார்? நான் இந்த பூமியில் அடைய வேண்டியது என்ன? கிறிஸ்து எனக்குள் உருவாக வேண்டும், நான் கிறிஸ்துவின் திவ்விய சுபாவத்தில் பங்கு பெற வேண்டும். இதை எனக்குக் கற்றுக் கொடுக்கும் உபதேசமே ஆரோக்கியமான உபதேசம். இதுவே என்னை வெறும் கிறிஸ்தவனாக அல்ல மணவாட்டியாக மாற்றும்.
எதுவெல்லாம் என்னைப்போல் தானும் கிறிஸ்துவின் அங்கமாக உள்ள ஒரு சக சகோதரனை அதிகமாக (கிறிஸ்துவுக்குள்) நேசிக்க வைக்குமோ அதுவெல்லாம் நல்ல உபதேசம். வாய் நிறைய பரலோக பாஷை பேசுபவர்கள், நாங்கள்தான் உண்மையான சகோதர ஐக்கியம் என்பவர்களெல்லாம் கூட தனக்கு அடுத்த தெருவில் உள்ள இன்னொரு சபையை நேசிக்க முடியாத மாயையில் சிக்குண்டிருக்கிறார்கள். அப்படியானால் இவர்கள் கேட்கும் உபதேசம் என்ன உபதேசம்? ஆராதிப்பது என்ன ஆராதனை?? தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; (1யோவான்4:20).
எதுவெல்லாம் கிறிஸ்துவுக்குள் நான் யாராயிருக்கிறேன் என்பதைக் கற்றுக்கொடுத்து அதே வேளையில் அதைவிட அதிகமாக எனக்கு மனத்தாழ்மையையும் கற்றுக்கொடுக்குமோ அது நல்ல உபதேசம். நான் சில காரியங்களைக் கற்றுவைத்திருக்கிறேன் என்பதற்காக நான் அதை அறியாதவர்களை அற்பமாய் எண்ணினேனானால் என் மேட்டிமையே எனக்கு எமனாகிவிடும்.
எதுவெல்லாம் பிசாசோடு மல்லுக்கு நிற்க வைக்குமோ அதுவெல்லாம் நல்ல உபதேசம். அந்த உபதேசம் வெறும் சுய முன்னேற்ற வகுப்பைப் போலல்லாமல் என்னை ஜெபத்திலும், உபவாசத்திலும், வேத தியானத்திலும் ஊன்றக்கட்டும். நான் கிறிஸ்துவை இறுகப் பிடித்துக்கொள்ள அவரோடு ஜெபத்திலே உறவவாடுவதைப்போல் வேறு எனக்கு எது உதவப் போகிறது? பிசாசு நமது மூளையைக் கண்டு நடுங்கமட்டான் நம் முழங்காலுக்கே நடுங்குவான்.
எதுவெல்லாம் மாம்சத்தோடு மல்லுக்கு நிற்க வைக்குமோ அதுவெல்லாம் நல்ல உபதேசம். அந்த உபதேசத்தைக் கேட்டால் நான் என் சுயத்தை சிலுவையில் அறைந்துவிட்டு என் சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவைத் தொடர ஆரம்பித்துவிடுவேன். இனி நான் எனக்காகப் பிழைக்கப் போவதில்லை என்று தீர்க்கமான முடிவெடுத்துவிடுவேன்.
எதுவெல்லாம் எனக்கானவைகளையல்ல தேவனுக்கானவைகளையும், பிறருக்கானவைகளையும் தேட வைக்குமோ அதுவெல்லாம் நல்ல உபதேசம். எந்த உபதேசத்தைக் கேட்டால் நான் அடுத்தவருக்காக பாரப்பட்டு முழங்காலை முடக்குகிறேனோ அதுவெல்லாம் நல்ல உபதேசம்.
எதுவெல்லாம் உலகத்தோடு மல்லுக்கு நிற்க வைக்குமோ அதுவெல்லாம் நல்ல உபதேசம். அந்த உபதேசத்தைக் கேட்டால் நான் இவ்வுலகிற்கு உரியவனல்ல என்றும் இங்கு நான் அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன் என்பதை உணர்ந்து எனது பொக்கிஷத்தை பரலோகத்தில் சேர்க்க ஆரம்பித்து விடுவேன்.
எதுவெல்லாம் சரியான குடும்பத்தைக் கட்டியெழுப்ப என்னைத் தூண்டுகிறதோ அதுவெல்லாம் நல்ல உபதேசம். நீ குடும்பத்தை நன்கு நடத்த அறியாதவனாக இருந்தால் ஊழியம் செய்ய தகுதியற்றவன் என்று தயவு தாட்சிணியமின்றிச் சொல்லும் போதகரே எமக்குத் தேவை!
எதுவெல்லாம் என் மனதை ஏழைகள் பக்கம், தரித்திரர் பக்கம், திக்கற்றோர் பக்கம் திருப்புமோ அதுவெல்லாம் நல்ல உபதேசம். ஏனென்றால் என் நேசர் அப்படிப்பட்டவராம். இந்த மக்களைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளம் மெழுகு போல உருகிவிடுமாம். எந்த சபை தன்னை உலகத்தின் வேஷத்துக்கு விலக்கிக் பரிசுத்தமாகக் காத்துக்கொள்வது மட்டுமல்லாமல். தன்னிலுள்ள ஏழைகளைப் போஷிக்குமோ அதுவே உண்மையான சபை. அந்த சபைக்குள் கிறிஸ்து இருக்கிறார், ஏனெனில் இந்த இரண்டும் இருந்தால்தான் அது சுத்தமான தேவபக்தி என்று யாக் 1:27 சொல்லுகிறது.
எதுவெல்லாம் என்னை கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுத்துமோ, எதுவெல்லாம் எனது பரமவீட்டைக் குறித்து தினந்தோறும் களிகூற வைக்குமோ, எதுவெல்லாம் உபத்திரவத்தின், பாடுகளின் மத்தியிலும் என்னை ஆறுதல்படுத்தி, அவரை முகமுகமாக தரிசித்து அவரது பாதத்தைத் தழுவி முத்தமிடும் நாளையும், தூதர்களோடு சேர்ந்து அவரை ஆராதிக்கும் நாளையும், மோசே, தாவீது, ஓசியா, பவுல், ஸ்தேவான், பேதுரு, வில்லியம் கேரி, சீகன்பால்க், ரிங்கல் தோபே, ஹட்சன் டேலர் இன்னும் பல ஆவிக்குரிய முன்னோரைக் கண்டு ஓடிப்போய் அவர்களைக் கட்டியணைத்து எனது நன்றியை அவர்களுக்குத் தெரிவிக்கும் நாளையும் காண ஆவலாய் ஏங்கவைக்குமோ அதுவெல்லாம் நல்ல உபதேசம்.
எதுவெல்லாம் என்னை பெரேயா கிறிஸ்தவனைப் போல மாற்றுமோ அதுவெல்லாம் நல்ல உபதேசம். ஏனெனில் கடைசி நாட்களில் கள்ளப்போதகம் கடலலை போல பெருகிவரும் என்று ஆண்டவர் முன்னுரைத்திருக்கிறார். சிலர் சிலரையல்ல, சிலர் பலரையல்ல, பலர் சிலரையல்ல, பலர் பலரை வஞ்சிப்பார்களாம்(மத் 24:11). நான் கேட்கும் உபதேசம் ஆரோக்கியமானதாக இருந்தால் என்னிடம் வந்து பேசுவது ஆடா அல்லது ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயா என்று எளிதில் இனங்கண்டு விடுவேன்.
எதுவெல்லாம் எனக்கு நியாயப்பிரமாணத்துக்கும் கிருபைக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாகக் கற்றுக்கொடுத்து, என்னை புதிய உடன்படிக்கையின் இடுக்கமான பாதையில் நடக்கக் கற்றுக்கொடுக்குமோ அதுவெல்லாம் ஆரோக்கியமான உபதேசம். கிருபையைக் கற்றுக்கொடுத்து என்னை உலகப் பிரகாரமான பொருளாதாரச் செழிப்புக்குள் நடத்தும் உபதேசம் கள்ள உபதேசம்.
கடைசியாக எதுவெல்லாம் என்னை பிரதானக் கட்டளையை நிறைவேற்ற துண்டி விடுகிறதோ அதுவெல்லாம் நல்ல உபதேசம். அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காக பரிதபிக்கவும், இரட்சிக்கப்பட்ட ஆத்துமாக்களுக்குள் கிறிஸ்து உருவாகும்வரை கற்பவேதனைப்படவும் எந்த உபதேசம் என்னைத் தூண்டுகிறதோ அது தேவரகமான உபதேசம்.
கர்த்தர் உங்களையும் என்னையும் அப்படிப்பட்ட ஐக்கியத்தில் நிறுத்துவாராக! ஆமேன்.
எங்கே இருந்து பிடிக்கிறீர் ஐயா இது போன்ற தலைப்புகளை!!!!!!????????
Amen…
[[வாய் நிறைய பரலோக பாஷை பேசுபவர்கள், நாங்கள்தான் உண்மையான சகோதர ஐக்கியம் என்பவர்களெல்லாம் கூட தனக்கு அடுத்த தெருவில் உள்ள இன்னொரு சபையை நேசிக்க முடியாத மாயையில் சிக்குண்டிருக்கிறார்கள். அப்படியானால் இவர்கள் கேட்கும் உபதேசம் என்ன உபதேசம்? ஆராதிப்பது என்ன ஆராதனை?? தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; (1 யோவா 2:22).]]
இது ஒரு மிக மிக துக்கமான ஒரு காரியம். இந்த சபைப் பிரிவினைகள் என்று ஒழியும்? பிற சபையார்/ஊழியர்கள் நடத்தும் கூட்டங்கள் பற்றி அறிவிப்புகள் சபையில் கொடுக்கப்படுவதில்லை. அன்பு சுத்தமா இல்லை. பொறாமை நிறைய இருக்கு. தன் இராஜ்யத்தின்(சபையின்) ஜனங்களும், ஜனத்தின் காணிக்கையும் தனக்கு மட்டுமே சொந்தம்,வேற இடத்துக்கு போய் விடக் கூடாது என்ற பயம் நிறைய இருக்கு. சொன்னால் தான் போகணும் என்ற மிரட்டலும் சபையாருக்கு விடப்படுகிறது. மாய்மாலம் தான் அதிகம் சபைகளிலும் காணப்படுகிறது. விசுவாசிகளை ஊழியர்கள் பால் தரும் மாடாய்/ஆடாய் பார்ப்பது தான் எல்லாவற்றுக்கும் காரணம்.
சமீபத்தில் தங்கத்தைக் கேட்கவில்லை, வைரத்தை கேட்கவில்லை என்ற பாடலுக்கு சொந்தக்காரர் ராஜூ(பெங்களூர்) எங்க ஊருக்கு வந்திருந்தார். You must be Dead to Sin, Alive For Christ – பாவத்திற்கு மரிக்கணும். இயேசுவுக்காய் வாழணும் என்ற கருத்தைதான் வலியுறுத்திச் சொன்னார்.காதல் கூடாது என்று, ஆபாச சினிமா படங்கள், பாடல்கள் பார்ப்பதை/கேட்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் இளம் உள்ளங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மிகவும் அருமையாக பேசினார். பரிசுத்த வாழ்க்கைதான் அதி முக்கியம் என்று பரிசுத்தத்தை மிகவும் வலியுறுத்திப் பேசினார்.கூட்டத்துக்கு வந்திருந்தது ஒரு 200 பேர்தான். ஏன் பலர் வரவில்லை? பல சபைகளில் அறிவிக்கவில்லை. நீ நடத்துற கூட்டத்துக்கு நான் ஏன் வரணும் என்ற நல்ல மனப்பான்மைதான் காரணாம். Don Moen கச்சேரிக்கு சென்னக்குப் போவாங்க, Benny Hinn பார்க்க பெங்களுர் போவாங்க. ஆனால் உள்ளூரில் பிறர் நடத்தும் கூட்டத்துக்கு வர மாட்டாங்க. இதைக் கண்டு என் உள்ளம் நொறுங்கியது என்று சொன்னால் அது மிகையல்ல.
நல்ல உபதேசம் எது கள்ள உபதேசம் எது என தெளிவாக எளிமையாக இனங் காட்டியிருக்கிறீர்கள். அருமையான குறிப்புகள்.
May god be with us and guide us gard us and keep us safe from bad messages which may keep us away from God Read our bible.Obey His command and love our neibours and help our needy people tell the good news about our loving God Jesus christMay god bless you and your good work amen
மிக அருமையான கட்டுரை சகோதரரே…