எதிர்காலப் பாவங்களையும் இயேசு மன்னிப்பாரா?

நீங்கள் எதிர்காலத்தில் செய்யப்போகும் பாவத்துக்கும் சேர்த்து சிலுவையில் இயேசு இரத்தம் சிந்திவிட்டார் என்று பிரசங்கிப்பது சரியா என்ற விவாதம் அடிக்கடி சமூக வலைதளங்களில் எழுவதைக் காணமுடிகிறது. இது பற்றி சற்று தியானிப்போம்.

இப்படி பிரசங்கிப்பதை எதிர்ப்பவர்களிடம் ஒரு நியாயமான கோபம் இருப்பதை உணர முடிகிறது. ஏனெனில் …

 1. நீ தொடர்ந்து இனி பாவம் செய்யலாம் என்ற துணிகரத்தை உண்டாக்குவது போல இருக்கிறது
 2. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சிந்திய இரத்தத்தை அவமதிப்பது போல இருக்கிறது.
 3. பரிசுத்தமாக வாழ வேண்டும் என்ற வாஞ்சையின் வீரியத்தைக் குறைப்பது போல இருக்கிறது.
 4. “இனி பாவம் செய்யாதே” என்ற கட்டளைக்கு எதிராக இருக்கிறது.

இந்தக் காரணங்கள் அத்தனைக்கும் பின்பாக ஒரு நியாயமான நோக்கம் இருப்பதைப் போல தோன்றினாலும் “நீங்கள் எதிர்காலத்தில் செய்யப்போகும் பாவத்துக்கும் சேர்த்து சிலுவையில் இயேசு இரத்தம் சிந்திவிட்டார்” என்று பிரசங்கிப்பது தவறு என்றால் வேறு என்ன பிரசங்கிக்க வேண்டும் என்பதை எதிர்ப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும்.

 1. “இனி பாவம் செய்யாதே” என்று நாம் பிரசங்கிக்கத்தான் வேண்டும். ஆனால், ஒருவேளை நீ எதிர்காலத்தில் பாவம் செய்துவிட்டால் அதை இயேசுவின் இரத்தம் கழுவாது என்று பிரசங்கிக்கலாமா? அது வேதத்தின்படி சரியா?
 2. எதிர்கால பாவத்தையும் இயேசுவின் இரத்தம் கழுவும் என்பது தவறான பிரசங்கமானால், அதற்கு நேர் எதிரான எதிர்கால பாவம் மன்னிக்கப்படாது என்பதுதான் சரியான பிரசங்கமாக இருக்க முடியும். அப்படியானால் இரட்சிக்கப்பட்ட பின்னர் ஒரு மனிதன் சாகும்வரை பாவத்தில் விழாமல் வாழ வேண்டும் என்று கிறிஸ்தவம் எதிர்பார்க்கிறதா? அது சாத்தியமா? அப்படி யாராவது வாழ்ந்திருக்கிறார்களா? ஆவிக்குரிய வளர்ச்சி ஒரு process, அது ஒரே நாளில் நடப்பதல்ல, சாகும்வரை நாம் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவை ஒத்த பூரணத்தை நோக்கி முன்னேறிச் செல்லவேண்டும் என்று நாம்தான் பிரசங்கிக்கிறோம். அப்படியானால் நீ எதிர்காலத்தில் விழுந்து எழ நேரிடும் என்று நாமேதான் மறைமுகமாக சொல்லுகிறோம். அதுதான் உண்மையும்கூட, அப்படியிருக்கும்போது அப்படி எதிர்காலத்தில் விழுந்தவனுக்கான தீர்வும் இயேசுவின் இரத்தம்தானே? அதை வெளிப்படையாக சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே!
 3. ஒரு விசுவாசி விரும்பி பாவம் செய்வான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் எதிர்காலத்தில் செய்யப்போகும் பாவத்துக்கும் சேர்த்து சிலுவையில் இயேசு இரத்தம் சிந்திவிட்டார் என்று அறிந்தவுடன் அவன் சந்தோஷமாக உட்காந்து திட்டமிட்டு, time table போட்டு உற்சாகமாக பாவம் செய்வான் என்று நினைக்கிறீர்களா?
 4. நீங்கள் எதிர்காலத்தில் செய்யப்போகும் பாவத்துக்கும் சேர்த்து சிலுவையில் இயேசு இரத்தம் சிந்திவிட்டார் எனவே இனி தண்டனை குறித்த கவலையே இல்லை, தைரியமா பாவம் செய், Enjoy பண்ணு… என்று உலகத்தில் எந்த மூலையிலாவது, எந்த பிரசங்கியாராவது பிரசங்கிக்கிறாரா? உன் எதிர்காலப் பாவத்தையும் இயேசு மன்னிக்கிறார் என்று போதிப்பதன் உண்மையான நோக்கத்தை நாம் ஆராய்ந்தோமா?
 5. கீழ்படிகிறோமோ இல்லையோ மற்றவர்களை நீ ஏழு எழுபது முறை மன்னிக்கவேண்டும் என்று ஆண்டவர் நமக்கு இட்ட கட்டளையை ஏற்றுக்கொள்கிறோம் (மத் 18: 22). ஆனால் ஆண்டவரும் நம்மை ஏழு எழுபது முறை மன்னிப்பார் என்ற உண்மையை மாத்திரம் ஏன் மற்றவர்களிடம் மறைக்க முயல்கிறோம்?
 6. இன்னும் மூன்று நாட்கள் கழித்து ஏதோ ஒரு சூழலில் பாவம் செய்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இன்றைய தினத்தைப் பொறுத்தபட்டில் அது உங்களுக்கு எதிர்காலப் பாவம்தானே? அதற்காக தேவனிடம் மன்னிப்பு கேட்க மாட்டீர்களா? அல்லது தேவன் மன்னிப்பளித்தால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா? அந்த மன்னிப்பைப் பெற்றுக்கொண்டு, சந்தோஷமாக சாட்சியும் சொல்வீர்கள்தானே? உங்கள் ஆத்துமாவிடம் இலகுவாக இருக்கும் நீங்கள் மற்ற ஆத்துமாக்களிடம் ஏன் கடினமாக இருக்கிறீர்கள்?
 7. மன்னிப்பின் பெருக்கத்தைக் குறித்துப் பேசினால் பாவம் வீரியம் கொள்ளும் என்ற பயமே இந்த சத்தியத்தை பலர் எதிர்க்கக் காரணம். இந்தப் புரிதலே அடிப்படையில் தவறு. மன்னிப்பு பெருகினால் பாவமும் பெருகும் என்பது உலகத்தாரின் நிலைப்பாடு. எவனுக்கு அதிகம் மன்னிக்கப்படுகிறதோ அவனே அதிகம் அன்புகூருவான் (லூக் 7:47) என்பது கர்த்தருடைய நிலைப்பாடு. மன்னிப்பைப் பேசுவது பாவத்தைத் தூண்டுவதாகாது.
 8. உன் எதிர்காலப் பாவத்தையும் இயேசு மன்னிப்பார் என்ற செய்தி சபைக்குள் விசுவாசிகளுக்குத்தான் பிரசங்கிக்கப்படுகிறதே தவிர, இது அவிசுவாசிகளுக்கான செய்தி அல்ல. நீ எதிர்காலத்தில் வியாதிப்பட்டாலும் உன்னை குணப்படுத்த மருந்து தயாராக இருக்கிறது என்று சொல்வது வியாதி வேண்டாம் என்று நினைக்கும் ஒரு மனிதனுக்கு நம்பிக்கை தரத்தானேயொழிய, இனி நீ தாராளமாக வியாதியை விரும்பி அணைத்துக்கொள்ளலாம் என்று லைசன்ஸ் கொடுப்பதற்கு அல்ல. ஒவ்வொரு விசுவாசியும் காலையில் படுக்கையிலிருந்து எழும்போது இன்று தேவனுக்காக வாழ வேண்டும் என்ற ஆசையுடன்தான் எழுகிறான். இன்று எப்படியாவது குறைந்த பட்சம் நான்கு பாவங்களையாவது செய்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் எந்த விசுவாசியும் காலையில் எழுகிறதில்லை. உள்ளே இருப்பது ‘அவருடைய வித்து’ என்பதை மறந்து போகாதிருங்கள்.
 9. மாம்சத்தோடு போராடுகிற போராட்டம் எல்லா விசுவாசிக்கும் பொதுவானது. அவ்வப்போது மாம்சத்தால் மேற்கொள்ளப்பட்டு வீழ்வதுதான் ஒரு விசுவாசியின் போராட்ட வீரியத்தைக் குறைக்கிறது. அப்போதெல்லாம் அவனை தட்டி எழுப்பும் மருந்துதான் மன்னிப்பின் நிச்சயம். நான் விழுந்தாலும் மன்னிக்கப்படுவேன் என்ற நிச்சயமில்லாவிட்டால், என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால் கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் (மீகா 7:8) என்று ஒரு விசுவாசியால் எப்படி முழக்கமிட முடியும்?
 10. கடைசியாக நீங்கள் கருதுவது போலவே, இயேசு எதிர்காலப் பாவங்களையும் மன்னிக்கிறார் என்றவுடன் ஒருவன் பாவம் செய்ய துணிகரம் கொள்வானானால் அவனிடம் நாம் இன்னும் சிலுவையைத்தான் காட்ட வேண்டுமேயொழிய நரக அக்கினியை அல்ல. இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளானாலும் உலகத்தின் முடிவுபரியந்தம் செய்யப்படப்போகும் அத்தனை பாவங்களையும் இயேசுவின் இரத்தம் கழுவத்தான் போகிறது, இது சத்தியம். நாம் அந்த மனிதனைத்தான் மாற்ற வேண்டுமேயொழிய, அந்த மனிதனுக்காக சத்தியத்தை மாற்றக்கூடாது.

Leave a Reply