உன்னால் பறிக்க முடியாது

நீ தேவாலயத்தை இடித்துப் போடு
நான் மூன்றே நாட்களில் எழுப்புவேன்
உலகத்தையே கலைத்துப்போடு
ஏழே நாட்களில் கட்டியெழுப்புவேன்!

நீ திருடிச்செல், நான் ஏழுமடங்காய் மீட்டுத்தருவேன்
நீ கொன்றுபோடு, நான் நித்திய ஜீவனோடு உயிர்ப்பிப்பேன்
நீ அழித்துப்போடு, நான் அழியாமையால் அலங்கரிப்பேன்

நீ ஒளித்து வை, நான் பிரபலமாக்குவேன்
நீ சேற்றில் அமிழ்த்து, நான் தூக்கி சிங்காசனத்தில் வைப்பேன்
நீ ஆழத்துக்கு இழுத்துச் செல், நான் உயரத்தில் உலவ வைப்பேன்
நீ ஒரு வழியை மூடு, நான் ஏழு வழிகளைத் திறப்பேன்

நீ அவர்களை வனாந்திரத்துக்குள் இழுத்துச்சென்றால்
அந்த வனாந்திரத்தை வயல்வெளியாக்குவேன்
நீ அவாந்திரவெளிகளில் அலையவிட்டால்
அந்த இடத்தையே நான் விருந்து சாலையாக்குவேன்…

நீ அவர்களை புதருக்குள் சிக்க வைத்தாலும்
நான் அங்கு மேய்ப்பனாய் தேடி வருவேன்
நீ அவர்களை வியாதியில் வீழ்த்த நினைத்தாலும்
நான் அங்கு பரிகாரியாய் வந்து நிற்பேன்!
நீ அவர்களைப் பாவத்தில் கட்டிவைத்தாலும்
நான் இரட்சகராய் இறங்கி வருவேன்!
அவர்கள் உலந்த எலும்புகளாய்க் கிடந்தாலும்
உயிர்ப்பிக்கும் காற்றாய் வந்து வீசுவேன்!

மரணமே அவர்களை விழுங்கினாலும்
அவர்கள் கல்லறைகளை திறக்க
தோளில் சிலுவை சுமந்து கொல்கதாவுக்கு ஏறுவேன்!
அவர்கள் கொலைக்கே நியமிக்கப்பட்டிருந்தாலும்
நான் அவர்களை கொள்ளைப்பொருளாய் அள்ளிச்செல்வேன்!

நீ பிடிக்க பார்வோனை அனுப்பினால்
நான் மீட்க மோசேயை அனுப்புவேன்!
நீ பயமுறுத்த கோலியாத்தை அனுப்பினால்
அவனை இகழ தாவீதை அனுப்புவேன்
நீ வஞ்சிக்க சர்ப்பத்தை அனுப்பினால்
அதன் தலை நசுக்க குமாரனை அனுப்புவேன்

நீ இடித்துப்போட்டால்
கட்டியெழுப்ப அப்போஸ்தலனை அனுப்புவேன்
நீ பொய்களை ஊதினால்
அம்பலப்படுத்த தீர்க்கதரிசியை அனுப்புவேன்
நீ ஆடுகளைத் திருடினால்
அவைகளை மீட்க மேய்ப்பனை அனுப்புவேன்
நீ அந்தகாரப்படுத்தினால்
நற்செய்தி ஒளியோடு சுவிசேஷகனை அனுப்புவேன்
நீ பிள்ளைகளை பேதைகளாக்கினால்
பேதைகளை ஞானிகளாக்க போதகனை அனுப்புவேன்

நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
இவர்கள் என் ஜனங்கள், என் மேய்ச்சலின் ஆடுகள்
என் குமாரனைத் தந்து நான் சம்பாதித்த பிள்ளைகள்
இவர்களை நான் எப்படி மறப்பேன்?
எப்படிக் கைவிடுவேன்?
இவர்களை என் கைகளிலிருந்து பறிப்பவன் யார்?

Leave a Reply