உத்தரகண்ட் வெள்ளத்துக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் சம்பந்தமுண்டா? – பாகம் 2

M_Id_395382_temple

இக்கட்டுரையின் முதல் பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்

சகோ.உமாசங்கர் அவர்களின் பேட்டி நக்கீரனில் வெளிவந்து அவரை கிண்டல் செய்தும் திட்டியும் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் கொந்தளித்த இமாலய சுனாமிகள் இப்போது அடங்கி விட்டன. அடுத்து யாரை வைத்து என்ன காமெடி பண்ணலாம் என்று அவரவர்கள் கிளம்பிவிட்ட நிலையில் நாமும் அவ்வாறான மனநிலையிலேயே இப்பிரச்சனையை அணுகாமல் இனி ஒருபோதும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையோ திருச்சபையையோ மூன்றாம் மனிதர்கள் வேடிக்கைப் பொருளாக்க விடாமல் இப்பிரச்சனைக்கு விசுவாசிகளிடையே ஒரு ஒருமித்த புரிந்துகொள்ளுதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த இரண்டாம் பாகத்தையும் எழுத வேண்டியதாயிற்று. முதல் பாகம் இணையத்தில் பிரசுரமானவுடன் பொதுவாக பல விசுவாசிகள் கட்டுரையின் கருத்தை ஏற்றுக்கொண்டாலும் சில நியாயமான கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் எங்களை நோக்கி வீசப்பட்டன. இக்கட்டுரையின் உண்மை பிரதியை வாசிக்காமல் அவசரப்பட்டு எழுதிவிட்டதாக சில குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. இல்லை, பேட்டியை படித்து கருத்தை நன்கு உள்வாங்கிக்கொண்டே முதல் பாகம் எழுதப்பட்டதென்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

கேள்வி: சகோ.உமாசங்கர் அவர்கள் இயற்கையை வைத்து இந்துக்களை தண்டிப்பேன் என்று சொல்லவில்லை இந்து தெய்வங்களைத்தான் தண்டிப்பேன் என்று சொல்லியுள்ளார் அதற்கு ஆதாரமாக யாத்திராகமம் 7-12 அதிகாரங்களை சுட்டிக்காட்டியுள்ளார். இது வேதத்தின்படி சரிதானே?

பத்திரிக்கையில் சகோ.உமாசங்கர் சொன்னது: 2011 மார்ச் 8-ந் தேதி தமது தீர்க்கதரிசி மூலம் எனக்கு ஒரு தகவலை அனுப்புகிறார் இயேசு. அப்போது, “யாத்திராகமத்தில் 7 முதல் 12 வரையுள்ள அதிகாரங்களில் சொல்லப்பட்டிருப்பது போல, எகிப்தின் தேவர்களை (கடவுள்கள்) எப்படி தண்டித்தாரோ அதேபோல இந்திய கடவுள்களையும் தண்டிப்பேன் எனவும், எகிப்தின் தேவர்கள் எல்லாம் எப்படி பொய்க்கடவுள்கள் என்று நிரூபித்தாரோ அதேபோல இந்திய தேவர்கள் அனைவரும் பொய் என நிரூபிப்பேன்’ எனவும் தெரிவித்தார்.

பதில்: சகோ.உமாசங்கர் சொல்லுவதுபோல எகிப்தின் நிகழ்வையும் உத்தரகண்ட் நிகழ்வையும் ஒப்பிட முடியாது. சற்று நன்கு சிந்தித்துப்பாருங்கள் எகிப்தின் தேவர்களை கர்த்தர் நியாயம் தீர்த்தநாளில் எகிப்தில் மாத்திரமா விக்கிரக ஆராதனை இருந்தது? எகிப்தை சுற்றியிருந்த அத்தனை நாட்டு மக்களும் விக்கிரக வணக்கக்காரர்களே! எல்லோரையும் விட்டுவிட்டு ஏன் தேவன் எகிப்தின் தேவர்களை மட்டும் தண்டிக்க வேண்டும்? அதற்கு ஒரு ஸ்பெஷல் காரணம் இருந்தது. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் 400 ஆண்டுகாலம் கொத்தடிமைகளாய் இருந்தார்கள். அவர்களை விடுவிக்க தேவன் எகிப்தின் மீது இயற்கைக்கு அப்பாற்பட்ட பத்து வாதைகளை அனுப்பவேண்டியது இருந்தது. அவைகள் என்னென்னவென்று பார்ப்போம்

1. நைல்நதி இரத்தமாக மாறுதல்

2. நைல் நதியிலிருந்து தவளைகள் படையெடுப்பு

3. குழவிகள் படையெடுப்பு

4. ஈக்கள் படையெடுப்பு

5. கால்நடைகள் திடீர் மரணம்

6. பயங்கர கொப்புளங்கள்

7. கல்மழை

8. விளைச்சலை பட்சிக்கும் வெட்டுக்கிளிகள்

9. முன்று நாட்கள் கும்மிருட்டு

10. தலைப்பிள்ளைகள் மரணம்

மேலே உள்ள பத்து வாதைகளையும் பாருங்கள், ஏதேனும் ஒன்றாகிலும் வழக்கமாக உலகில் நடைபெறும் இயற்கை சீற்றமாக இருக்கிறதா? இவை பத்துமே தேவனுடைய தனித்தன்மையையும் சர்வவல்லமையையும் காட்டும்படிக்கு அனுப்பப்பட்ட அதிசயவிதமான வாதைகள். இதை உத்தரகண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கும், குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட பூகம்பங்களுக்கும் ஒப்பிடமுடியுமா? அவை உலகின் எந்தப் பகுதியிலும் எந்த நேரத்திலும் நடக்கக்கூடிய இயற்கை பேரழிவுகள். கேதார்நாத்தில் இயேசு வெள்ளத்தை அனுப்பி சிவனை தண்டித்தார் என்றால் அமெரிக்காவில் கத்ரினா, ஐரீன், சாண்டி போன்ற புயல்களை அனுப்பி சிவன் இயேசுவை தண்டித்தாரா என்று ஒருவர் முகநூலில் கேட்கிறார் என்ன பதில் சொல்லுவீர்கள்?

மனிதர்கள் மீதோ, தேசங்கள் மீதோ தேவன் செலுத்தும் எந்த ஆக்கினையும் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத விந்தையான விஷயங்களாகவே இருக்கும். சமகால அறிவியல் கொண்டு அவர்கள் யாரும் அதை புரிந்துகொள்ள முடியாது. அதற்கான அறிவியல் விளக்கங்களே பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தர இயலும். அதுதான் கர்த்தர்!  எகிப்தில் வாதையை அனுப்பியது கர்த்தர்தான் என்ற அறிவு இஸ்ரவேலருக்கு மட்டுமல்ல கம்யூனிகேஷன் இல்லாத காலத்திலேயே உலகம் முழுக்க பரவியிருந்தது.  எங்கோ இருந்த பெலிஸ்தியர்கள் எத்தனையோ  வருடங்களுக்குப் பிறகு எகிப்தின் வாதை குறித்து இப்படிப் பேசுகிறார்கள்: “தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே (1 சாமு 4:7,8)”. ஆனால் இன்றோ உத்தரகண்ட் சம்பவத்தை கர்த்தரால் வந்தது என்று சொன்னால் நமது சக கிறிஸ்தவன் கூட நம்பமாட்டான். ஏனென்றால் இயற்கை சீற்றத்தை, இயற்கை சீற்றமாகத்தான் பார்க்கவேண்டும்.

இந்த வாதைகளின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இந்த பத்து வாதைகளாலும் எகிப்துக்குள்ளேயே இருந்த இஸ்ரவேலர் ஒருவரும் பாதிக்கப்படவில்லை, வாதிக்கபட்டவர்கள் அனைவரும் எகிப்தியரே! தேவன் ஒவ்வொரு முறை வாதையை அனுப்பும்போதும் தன் ஜனங்கள் பாதிக்கபடாதபடி அவர்கள் வீடுகளில் அடையாளமோ, நெற்றிகளில் முத்திரையோ போடும்படி சொல்லுகிறார். வேதத்தில் நோவா பேழை முதல் வெளிப்படுத்தல் முத்திரைவரை பல இடங்களை இதேபோன்ற நிகழ்வுகள் இருக்கின்றன. உத்தரகண்டில் ஒரு விசுவாசிகூட பாதிக்கப்படவில்லையா? 2004 சுனாமியில் ஒரு விசுவாசிகூட மரிக்கவில்லையா? எந்த அடிப்படையில் இதையெல்லாம் தேவகோபாக்கினை என்கிறீர்கள்?

அதுமட்டுமல்ல, எகிப்தில் தேவன் வாதையை அனுப்பி முடித்தவுடன் கிடைத்தது மாபெரும் வெற்றி, அதற்கு பின்பு இஸ்ரவேலர் அங்கு அடிமைகளாக இல்லை, அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். மாபெரும் வரலாற்று மாற்றம் நிகழ்ந்தது. ஆனால் உத்தரகண்டில் நடந்தது என்ன? அப்பாவி மக்களின் உயிர்ச்சேதம். இதனால் யாருக்கு லாபம்? ஆயிரக்கணக்கான அப்பாவிகள் உயிர் பறிபோய்விட்டது அதனால் விக்கிரக வணக்கம் இத்தோடு அங்கு ஓயப்போகிறதா?  உடைந்த வழிபாட்டுத்தலங்கள் மறுபடியும் கட்டியெழுப்பபடும், யாத்திரிகர்கள் மறுபடியும் வரத்தொடங்குவர்கள் சகஜநிலை மீண்டும் திரும்பும்.  இதுதான் அந்த விக்கிரகத்தின் மீது செலுத்தப்படும் தண்டணையா? இதனால் நஷ்டப்பட்டது யார்? இப்படிப்பட்ட அநீதியான, ஞானமற்ற, பெலவீனமான தண்டணையை செலுத்துகிறவர் நிச்சயம் இயேசுவாக இருக்கமாட்டார்.

நோவா கால வெள்ளத்தின்போது பெருமழை பெய்தது, வானத்தின் மதகுகளும், பூமியின் ஊற்றுக்கண்களும் திறவுண்டன. அக்கால மக்கள் மழையைக்கூட பார்த்ததில்லை, பூமியில் பனிமாத்திரமே பெய்துகொண்டிருந்த காலமது. வானத்து மதகுகள் என்ன என்பதை இன்றுவரை ஆராய்ந்து water cenopy என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஜலப்பிரளயமாகட்டும், எகிப்தின் பத்து வாதைகளாகட்டும், இஸ்ரவேலர்மீதும், பிறதேசத்தார் மீதும் செலுத்தப்பட்ட ஆக்கினைகளாகட்டும், செலுத்தப்பட்ட அந்த ஆக்கினைகள் நீங்கும்படி அவரே தந்த மருந்துகளாகட்டும் அவை மனித அறிவுக்கு சவால் விடுபவையாகவே இருந்து வந்துள்ளன. வெண்கல சர்ப்பத்தை உற்றுப்பார்த்தால் வாதை நீங்கிவிடும் என்பதை இன்றைய அறிவியல் கொண்டுகூட உங்களால் புரிந்துகொள்ள இயலுமா? பேரரசன் நேபுகாத்நேச்சாருக்கு என்ன வியாதியை தேவன் தண்டனையாகத் தந்தார் என்பதை இன்றுகூட  நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறதா? உலகின் மாபெரும் வல்லரசுடைய தலைவனுக்கு வந்த வியாதியை சமகாலத்தில் உலகிலிருந்த எந்த பெரிய மருத்துவனாலும் சரிசெய்யவோ அதை புரிந்துகொள்ளவோ முடியாத சூழலில் நேபுகாத்நேச்சார் தேவனிடத்தில் சரணடைந்ததைத் தவிர வேறெதுவும் செய்ய வழியில்லை (தானியேல் 4). அதுதான் கர்த்தர்!

உத்தர்கண்ட் போன்ற மண்சரிவு நிகழ்வுகளையோ, சுனாமி, பூகம்பம்,எரிமலை வெடிப்பு, வெள்ளம், புயல் போன்ற காரியங்களையோ வருமுன்னே எளிதில் கண்டறிய முடியும், பூமியில் எந்தந்த பகுதிகள் எப்படிப்பட்ட இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே நிதானிக்க முடியும். கள்ளத்தீர்க்கதரிசிகள் எப்போதுமே புத்தாண்டு தீர்க்கதரிசனம் சொல்லும்பொது இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என்பதைத்தான் தீர்க்கதரிசனமாக சொல்லுவார்கள். அது இயற்கையாக நடந்தவுடன் ஆஹா! நான் சொன்னது நடந்துச்சா? நடந்துச்சா? என்று மார்தட்டிக்கொள்வார்கள். இழிவடைவதோ இயேசுவின் நாமம்தான்!

சகோ.உமாசங்கர் சுட்டிக்காட்டிய மற்ற வசனங்கள் அனைத்தும் (ஆகாய் 2:6, செப் 1:3, எரே 25:33) இவை அனைத்துமே குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த குறிப்பிட்ட மக்களுக்கு அக்கால சூழலுக்கு ஏற்றவகையில் சொல்லப்பட்ட செய்தி/தீர்க்கதரிசனங்கள். “…தேசத்தில் உண்டான மனுஷரை சங்காரம் பண்ணுவேன்”என்று செப்பனியா 1:3-இல் சொல்லுவது இஸ்ரேல் தேசத்தை குறிக்குமேயன்றி இந்தியாவை அல்ல, அவர் அங்கு இந்தியனிடம் பேசவில்லை, இஸ்ரவேலனிடம் பேசிக்கொண்டிருக்கிறார். வேதவசனங்களை இஷ்டத்துக்கு எடுத்து பயன்படுத்தக்கூடாது. தயவுசெய்து அந்த அதிகாரங்கள் முழுமையையும் வாசித்து ஆராய்ந்துபாருங்கள். எல்லாவற்றிற்கும் விளக்கம் சொன்னால் கட்டுரை புத்தகமாகிவிடும்.

தேவன் அந்நிய தேவர்களை தண்டிக்கிறாரா? புதிய ஏற்பாட்டிலும் அது நடக்குமா?

ஆம், மோசே காலத்து எகிப்திய கடவுள்களாகட்டும், எலியா காலத்து பாகாலாகட்டும். தேவன் தம்முடைய ஜனங்களை அடிமைப்படுத்தி தம்மை நெருங்கவிடாமல் தனிமைப்படுத்தி வஞ்சித்து வைத்திருக்கும் அந்நிய தேவர்களை தண்டிக்கிறார். மற்றபடி அவர் பொழுதுபோகாமல் எல்லா விக்கிரங்கங்களோடும் நீயா நானா என்று சண்டையிடுகிறவர் அல்ல. ஆனால் அவர் அனுப்பும் வாதை அவரிடமிருந்துதான் வந்தது என்பதை எல்லோரும் உணர்ந்து அறிக்கையிட்டு தாழ பணிந்துகொள்ளும்படி இருக்கும். முடிவு சுபமாகவும் இருக்கும்.

புதிய ஏற்பாட்டில் இயேசு இன்னொரு எஜமானாக சுட்டிக்காண்பிக்கும் ஒரே அந்நிய தேவன்“உலகப்பொருள்” . வேறு எந்த விக்கிரகங்களையும் அவர் தேவனோடு ஒப்பிட்டு அவர் பேசவில்லை. சகல ஜாதிகளையும் வஞ்சித்து தன் கட்டுக்குள் வைத்து தேவனை நெருங்கவிடாமல் வைத்திருக்கும் ஒரே விக்கிரகம் உலகப்பொருள்தான்.

எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது (லூக்கா 16:13 )

இந்த உலகப்பொருள் என்னும் விக்கிரகத்தை தேவன் நியாயம் தீர்க்கப்போகிறாரா? ஆம், வெளிப்படுத்தல்-18 ஆம் அதிகாரத்தில் உலகப்பொருளை மையமாக கொண்ட வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்ட பாபிலோனிய மார்க்கத்தை தேவன் நியாயம் தீர்க்கப் போகிறார். பொருளை ஆதாரமாக சார்ந்துகொண்ட ஒட்டுமொத்த உலகமும் அந்நாளில்  புலம்பி அழப்போகிறது.  புதிய ஏற்பாட்டின்படி அந்நியதேவன்மேல் தேவன் செலுத்தும் ஒரே ஒரு ஆக்கினை இதுதான். அந்த அதிகாரம் முழுவதையும் வாசித்துப்பாருங்கள். அது புரியாவிட்டால் அது கீழ்கண்ட வீடியோவில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சற்று நேரம் எடுத்தேனும் அதை வேதத்துடன் ஒப்பிட்டு ஆராய்ந்து பாருங்கள் சத்தியம் என்னவென்பது புரியும்

புதிய ஏற்பாட்டில் விக்கிரகம் நிறைந்த பட்டணம் ஒன்றை பார்க்கும்போது இயேசு என்ன செய்திருப்பாரோ அதையேதான் பவுல் அன்று செய்தார்.

அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான் (அப் 17:16,17).

பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருப்பது கண்டு பவுல் தேவனை நோக்கி அந்தப் பட்டணத்தில் அழிவை அனுப்பி, மக்களைக் கொன்று அந்த விக்கிரங்கங்களை நியாயந்தீர்க்கச் சொல்லவில்லை, மாறாக அம்மக்களுக்கு சத்தியத்தை பிரசங்கித்தார்.

வேறு ஒரு தருணத்தில் இயேசுவின் சீஷர்கள் ஒரு பட்டணத்தின்மீது வானத்திலிருந்து அக்கினியை இறக்கி அதை அழிக்கும்படி இயேசுவுக்கு யோசனை சொன்னபோது இயேசு அவர்களை அதட்டி அவர்களுக்கு சொன்னது என்ன?

அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார் (லூக்கா 9: 55,56). இந்த இயேசுதான் சகோ.உமாசங்கர் கனவில்வந்து என்னை சரணடையாததின் நிமித்தம் இந்த உத்தரகண்ட் மக்களை அழிக்கப்போகிறேன் என்று சொன்னாராம், நம்பும்படியாய் இருக்கிறதா?

இந்தக் கட்டுரை இந்துக்கள் மனதை புண்படுத்தினால் பிரச்சனையாகிவிடுமோ என்று கருதியதால் எழுதப்பட்டதல்ல. இந்துக்கள், இஸ்லாமியர், கத்தோலிக்கர், நாத்திகர், அரசியல்வாதிகள், மத்திய அரசு, மாநில அரசு, யாருக்கும் நாம் பயப்படத்தேவையில்லை. அவர்கள் புண்பட்டாலும் சரி, பண்பட்டாலும் சரி, நாம் நெஞ்சை நிமிர்த்து யாருக்கு முன்னும் நின்று கர்த்தருடைய சத்தியத்தை சொல்லலாம், ஆனால் சொல்லுவது சத்தியமாக இருக்கவேண்டும், விதண்டவாதமாக இருக்கக்கூடாது.

3 thoughts on “உத்தரகண்ட் வெள்ளத்துக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் சம்பந்தமுண்டா? – பாகம் 2”

 1. // மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார் (லூக்கா 9: 55,56).//

  கிறிஸ்துவின் சொந்த வார்த்தைகளான இவைகளுக்கு மேல் என்ன பெரிய ஆதாரமும், தரிசனமும் வேண்டும்? கடவுளைப்பற்றிய புரிதலும், சரியான வேத தியானமும் இல்லாததே இம்மாதிரி சர்ச்சையான, தவறான கருத்துகளுக்குக் காரணம்.

  ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.”
  2 பேதுரு 3:9

  அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக்கா 15:10)

  ஒவ்வொருவரும் மனந்திரும்பவேண்டும் என்பதே தேவனின் சித்தம். அழிவதல்ல!

 2. Thanks for this part 2, brother. Need an open heart and open mind to make sense out of this article.

  It is hard for fault finders to become path finders.

  Best wishes!
  Mathew

Leave a Reply