கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், அதனால் நாள் இளைப்பாறுதலில் இருக்கிறேன். நான் இளைப்பாறுதலில் இருக்கிறபடியால் நான் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். நாம் சிறுவயது முதல் அறிந்துள்ள பிரபலமான சங்கீதம் 23-இன் சுருக்கம் இதுதான். இளைப்பாறுதலில் இருப்பது என்றால் சும்மா வேலை செய்யாமல் படுத்துக் கிடப்பதல்ல. பதட்டமும், பரபரப்பும் இல்லாமல் நிதானமாக செயல்படுவது.
வேகமான பரபரப்பான உயிரினங்களின் வாழ்நாள் குறைவு. ஆனால் நீண்டகாலம் உயிர்வாழும் ஆமைகளை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் உடலின் வளர்ச்சி, மெட்டபாலிசம் ஆகியவை மெதுவாக, நிதானமாக நடைபெறுவதுதான் அதன் நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. அது அனுதினமும் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்க்கிறது. ஆனால் அதனிடம் நம்மிடம் இருப்பதுபோல கடிகாரமும், காலெண்டரும் இல்லை.
ஆமையிடம் ஒரு வேலையைக் கொடுத்து அதன் முன்னங்காலில் ஒரு வாட்சைக் கட்டி, அதன் கழுத்தில் ஒரு காலெண்டரை மாட்டி, அதையும் மனஅழுத்தத்துக்குள் தள்ளிவிட்டால் அதுவும் சீக்கிரம் செத்துப்போகும்.
கர்த்தர் ஆதாம் ஏவாளிடம் உலகத்தைக் கீழ்ப்படுத்தி ஆண்டுகொள்ளுங்கள் என்றார், சீஷர்களிடம் நீங்கள் உலகமெங்கும் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் என்று சொன்னார் ஆனால் இந்த காலவரையரைக்குள் இதை செய்து முடியுங்கள் என்று சொல்லவில்லை. ஒரு கிராமத்திலிருக்கும் விவசாயி சர்க்கரைநோய், பிரஷர் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்தோடு வெகுகாலம் உயிர்வாழ்வதற்கு அவர் கம்மங்கூழும், கேப்பைக் கூழும் சாப்பிடுவது மட்டும் காரணம் அல்ல, அவர் பரபரப்பில்லாமல் நிதானமான ஒரு வாழ்க்கை முறைக்குள் இருக்கிறார். நகரத்தில் இருக்கும் ஒரு ஐடி இஞ்சினியர் 40 வயதிலேயே மாரடைப்பு வந்து சாவதற்குக் காரணம் அவர் பீட்சா, பர்கர் சாப்பிடுவது மட்டுமல்ல, அவர் மனஅழுத்தத்திலேயே அனுதினமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான்.
நாம் அரசு வேலையில் இருந்தாலும், தனியார் நிறுவனத்தில் இருந்தாலும், சொந்தத் தொழில் செய்தாலும் ஒரு குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வேலையில் எப்படி ஜெயித்து, லட்சலட்சமாய் சம்பாதித்து, சொத்துக்களை வாங்கிக் குவித்து, உயர்வுகளை அடைவது என்பதற்காகத்தான் நாம் ஜெபத்தையும், வசனத்தையும், ஆவிக்குரிய ஞானத்தையும் பயன்படுத்திக் கொள்கிறோமே தவிர, இளைப்பாறுதலைக் கற்றுக்கொள்வதற்கு அல்ல. தேவன் நமக்கு ஓய்வுநாள் என்ற ஒரு விஷயத்தை முக்கியப்படுத்தியதற்குக் காரணமே நமக்கு இளைப்பாறுதலைக் கற்றுக்கொடுக்கத்தான்.
நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மெத்தூசலா போல 969 வருடங்கள் வாழப்போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை எவ்வளவு நிதானமானதாக இருக்கும் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் சொந்தவீடு வாங்கிவிட வேண்டும் என்பதற்காக இப்போது செய்வது போல உங்களை Loan,EMI, over-time என்று அதிகபட்சமாக வருத்திக்கொள்ள மாட்டீர்கள். உங்கள் மகன் பள்ளியில் இந்த வருஷம் ஃபெயிலானாலும் அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளலாம் என்று அதை சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்வீர்கள். அவனை டியூஷன், ஐஐடி கோச்சிங், நீட் கோச்சிங் என்று அனுப்பி, சுமக்க முடியாத சுமைகளை அவன் முதுகில் ஏற்றி அவனைத் துன்புறுத்த மாட்டீர்கள்.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள், குறிப்பிட்ட காரியத்தை முடிக்க வேண்டும் என்ற அழுத்தம்தான் நமது வாழ்நாளைக் குறைக்கிறது. குறிப்பிட்ட கால வரையறைக்குள் நாம் நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்க வேண்டும்தான். அதை மறுப்பதற்கில்லை. நான் கடிகாரத்தையும் காலெண்டரையும் தூக்கி எறியச் சொல்லவில்லை. கிறிஸ்துவும் இதே போன்ற சூழலில்தான் இந்த பூமிக்கு வந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்டது வெறும் 33 ஆண்டுகளே! ஆனாலும் கிறிஸ்து எவ்வளவு நிதானமாக வாழ்ந்து செய்யவந்ததை செய்து முடித்தார் என்பதை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர் பரபரப்படைந்ததாக நாம் வேதத்தில் எங்குமே வாசிக்க முடியவில்லை. நடுக்கடலில், கடும் புயலில்கூட நிதானமாகத்தான் உறங்கிக் கொண்டிருந்தார்.
அவர் முழுக்க முழுக்க பிதாவைச் சார்ந்திருந்தார், இளைப்பாறுதலில் இருந்தார். அதுதான் அவரது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தின் இரகசியம்.
சாவாமையை நம்பும் ஒரு விசுவாசி தனது பார்வையை விசாலப்படுத்துகிறான். குறிப்பிட்ட காலத்துக்குள் இதை இதையெல்லாம் சாதிக்க வேண்டும் என்கிற அழுத்தம் அவனை விட்டு நீங்குகிறது. அதன் விளைவாக அவன் இயல்பாகவே ஒரு நிதானமான வாழ்க்கை முறைக்குள் பிரவேசித்துவிடுகிறான். அதுவே அவன் வாழ்வு நீடிக்கக் காரணமாகிவிடுகிறது. தனக்கு இன்னும் கொஞ்ச காலமே உண்டென்று அறிந்து பரபரப்பாக இயங்க வேண்டியது பிசாசின் தலையெழுத்து. ஏனெனில் தனக்கு அழிவு நியமிக்கப்பட்டிருக்கிறது என்பது அவனுக்குத் தெரியும். நித்திய ஜீவனைப் பெற்ற நாம் ஏன் அதுபோன்ற ஒரு வாழ்க்கை முறைக்குள் நம்மை நாமே தள்ளிக்கொள்ள வேண்டும்?
இப்போதைக்கு உங்களால் சாவாமையை விசுவாசிக்க முடியாவிட்டாலும் நீடித்த ஆயுளோடு இந்த பூமியில் இருக்கப் போகிறோம் என்பதையாவது விசுவாசியுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இதை இதையெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்ற அவசரத்தையும் அழுத்ததையும் மரணமும், மரண பயமும்தான் கொடுக்கிறது. அதனால்தான் சாவதற்குள் சாதித்துவிட வேண்டும் என்று மனிதன் துடிக்கிறான். சாவதுக்குள் வெல்வதல்ல, சாவை வெல்வதே சாதனை!