சங்கீதம் முதல் அதிகாரத்தில் இரு நபர்களைக் குறித்துப் பார்க்கிறோம். ஆரம்பத்தில் இருவருடைய மனங்களும் இருவேறு விஷயங்களால் நிரம்பப்படுகிறது. ஒருவனுடைய மனம் துன்மார்க்கருடைய ஆலோசனையினாலும், இன்னொருவனுடைய மனம் கர்த்தருடைய வார்த்தையினாலும் நிரம்பப்படுகிறது.
அப்படி இருவேறு மனநிலையில் வளரும் இருவரும் இருவேறு இடங்களில் செட்டில் ஆகிறார்கள். ஒருவன் பாவிகளின் வழியில் நிற்கிறான் அதாவது பாவ வாழ்க்கையில் செட்டில் ஆகிறான். இன்னொருவன் நீர்க்கால்களின் ஓரமாய் செட்டில் ஆகிறான்.
நாம் செட்டில் ஆகும் இடம் கடைசியில் நாம் யாராக உருவாகிறோம் என்பதை தீர்மானிக்கிறது. முதலாமானவன் பரியாசக்காரனாகி அவர்கள் கூட்டத்தில் கலந்துவிடுகிறான். பரியாசக்காரன் திரும்பிவர முடியாத இடத்தில் இருக்கிறான்,எனவேதான் பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான் நீதிமொழிகள் 9:8 கூறுகிறது. பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான் என்று நீதி 13:1 கூறுகிறது.
பரியாசமும் தூஷணமும் இரட்டைப் பிறவிகள் போன்றது. பரியாசக்காரன் வாயில் தூஷணம் எளிதாக வரும். இதன் மொத்த உருவம் அந்திகிறிஸ்து. பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது என்று வெளி 13:5 கூறுகிறது. அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன என்று அதே அதிகாரம் முதல் வசனம் சொல்லுகிறது. அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான் என்று நீதி 21:24 அவனை நமக்கு அடையாளம் காட்டுகிறது.
ஒரு மனுஷன் எப்பொழுது பரியாசக்காரனாக வளர்ந்து நிற்கிறானோ அப்பொழுது அவன் தண்டனைக்கான முழுத் தகுதியும் உடையவனாகிறான். நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று நீதி 9:12-ஆம் வசனமும், பரியாசக்காரருக்குத் தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது என்று நீதி 19:29-ஆம் வசனமும் கூறுகின்றன. பரியாசக்காரனை அடி, அவன் திருந்தமாட்டான் ஆனால் அதைப்பார்த்து பேதை எச்சரிக்கப்படுவான் என்று நீதி 19:25 கூறுகிறது.
நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட இரண்டாம் நபரோ தன் காலத்தில் தன் கனியைத் தந்து இலையுதிராதிருக்கிற மரமாக உருவாகிறான். நீதிக்கேற்ற கனிகொடுத்தல் அவன் சுபாவம். இது கிறிஸ்துவின் சாயலில் வளர்வதாகும். நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் என்பது நீடித்த நிலைத்தன்மையைக் குறிக்கிறது.
ஆனால் முதலாமானவனையோ வேதம் “பதருக்கு” ஒப்பிடுகிறது. பதர் எப்படி பறக்கடிக்கப்படுமோ அவனும் அப்படி பறக்கடிக்கப்படுவான். அந்திகிறிஸ்து ஒரு பதர் பறக்கடிக்கப்படுவதுப்போல ஆட்டுக்குட்டியானவரின் நாசியின் சுவாசத்தினால் அழிக்கப்பட்டு, அவரது வருகையின் பிரசன்னத்தினால் நாசம் பண்ணப்படுவான் (2 தெச 2:8)
மொத்தத்தில் கடைசி காலத்தில் மக்கள் இரு பிரிவாகப் பிரிந்து இரு நபர்களாக உருவாக்கப்படுகிறார்கள். ஒருகூட்டம் அந்திகிறிஸ்துவின் சாயலில் வளரும். அவர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள் (2 தீமோ 3:1-5). கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே(யூதா 1:18). கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து…(2 பேது 3:3)
இன்னொரு கூட்டம் இயேசுவின் சாயலில், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் ஆகிய சுபாவங்களை பெற்று வளரும். மொத்தத்தில் கர்த்தராகிய இயேசு திரும்பி வரும்பொழுது இரண்டே இரண்டு நபர்கள்தான் பூமியில் இருப்பார்கள் ஒன்று “கிறிஸ்து” இன்னொன்று “அந்திகிறிஸ்து”. ஒன்று “செம்மறியாடு”, இன்னொன்று “வெள்ளாடு”.
எனவேதான் அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று வேதத்தின் கடைசி அதிகாரம் 11, 12 வசனங்களில் கர்த்தர் கூறுகிறார்.
இவை அத்தனையும் ஆரம்பத்தில் மக்கள் தங்கள் மனதை எதனால் நிரப்புகிறார்கள் என்பதில் தொடங்குகிறது. துன்மார்க்கரின் ஆலோசனையினாலா அல்லது வேத வார்த்தையினாலா?
பிரியமானவர்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு என்ன input-ஐக் கொடுக்கிறீர்கள்? வேத வசனத்தையா அல்லது துன்மார்க்கரின் ஆலோசனையையா? உங்கள் பிள்ளைகளை அந்திகிறிஸ்துவாக வளர்த்தெடுக்க நீங்கள் அவர்கள் கையில் Satanic Bible-ளையோ, அல்லது மந்திரவாத பில்லி சூனிய புத்தகங்களையோ கொடுக்க வேண்டியதில்லை. ஒரு மொபைலைக் கையில் கொடுத்தாலே போதும், ஒட்டுமொத்த உலகத்தையும் அதுவே அவர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிடும்.
பிள்ளைகளை மொபைலைப் பயன்படுத்த அனுமதிக்கவே கூடாது என நான் சொல்லவரவில்லை. ஆனால் மொபைல் அவர்களுக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்கும் ஆசானாக மாற அனுமதித்துவிடாதீர்கள்.
மீண்டும் சொல்கிறேன், ஆரம்பத்தில் துன்மார்க்கரின் ஆலோசனையால் மனதை நிரப்புகிறவர்கள் இறுதியில் அந்திகிறிஸ்துவின் சாயலைச் சுமந்து பதர்களைப்போல பறக்கடிக்கப்படுகிறார்கள். வேதவார்த்தையால் மனதை நிரப்பினவர்கள் இறுதியில் கிறிஸ்துவின் சாயலைச் சுமந்து தண்ணீர்களண்டை நாட்டப்பட்ட மரமாக நீடித்த நாட்களாய், நித்திய காலமாய் நிலைத்திருக்கிறார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இப்போது உங்கள் மனங்களை எதனால் நிரப்பிக்கொண்டிருக்கிறீர்கள்?