இரண்டில் ஒன்று (பாகம்-1)


ஜீவவிருட்சமாம், வானத்து மன்னாவாம், மகிமைராஜனாம் இயேசுவின் நாமத்துக்கே மகிமை உண்டாவதாக!

இதோ, இங்கே ஒரு மாபெரும் நாடக அரங்கு! ஹாலிவுட் போல பிரமாண்டமான செட்டுகள். நடிகர் நடிகையர் பலர். கதை-வசனம், இயக்கம் இயேசுகிறிஸ்து. இந்த நாடகத்துக்கு ஒரே ஒரு பார்வையாளன் அவன் பெயர் “இன்றைய கிறிஸ்தவன்”. நாடகத்தின் தலைப்பு “இரண்டில் ஒன்று”. இந்த முழு நாடகமும், காட்சிகளும் அவனுக்காக அவனுக்காக மட்டுமே! இந்நாடகத்தின் மூலம் இயக்குனர் “இன்றைய கிறிஸ்தவனுக்கு” ஏதோ சொல்ல விழைகிறார். என்னவென்று பார்க்கலாமா?

முதல்காட்சி:

ஜீவமரக்கனி கசக்கிறதோ?

 

<திரை விலகுகிறது>

ஏதேன் தோட்டம்!…

கண்களை கொள்ளை கொள்ளும் கவின்மிகு வனம்! மலர்ந்த மலர்களும் கனிந்த கனிகளும் கூட்டணி சேர்ந்து தரும் நறுமணம், பறவைகளின் பரவசப் பாடல்! அதற்கு சுருதி சேர்க்கும் வண்டுகளின் ரீங்காரம். அருகே ஓடும் ஐபிராத்து நதியின் சலசலப்பு. மனதைத் தாலாட்டும் தென்றல் காற்று, வனப்புமிக்க பூக்கள், இனிப்புமிக்க கனிகள்… இவையாவும் ஆதாம் ஏவாளுக்கு தேவன் அருளிய அன்புப் பரிசுகள்.

இந்த இன்பமயமான வாழ்க்கைக்கு நடுவே ஒரு தேர்வும் வருகிறது. “இரண்டில் ஒன்றை தெரிவு செய்க”

தோட்டத்திலுள்ள இரண்டு கனிமரங்களில் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒன்று ஜீவமரம் மற்றொன்று நன்மை தீமை அறியும்கனி தரும் மரம். முந்தயது ஜீவன் பிந்தையது மரணம். கனியிருப்பக் காய்கவரும் மனிதஇனத்தின் முதல்வனான ஆதாம் மரணத்தையே தெரிந்து கொண்டான்.

விளைவு….

தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டார்கள், ஏதேனை விட்டு தள்ளப்பட்டார்கள். சாத்தானுக்கு அடிமைகளானார்கள். சிங்கார வாழ்க்கை சின்னாபின்னமானது. ஆதாமே! ஆதாமே! உனக்கு மீறுதல் இனிக்கிறதோ!! தேவன் அருளும் ஜீவன் கசக்கிறதோ? சம்பத்தை விற்று சாபத்தை வாங்கினாய்!..ஆளுகையை விற்று அழுகையை வாங்கினாய்!! ஏன்…ஏன்…ஏன் இதைச் செய்தாய்???……

>திரை மூடுகிறது<

(இன்றைய கிறிஸ்தவன் துக்கதோடு நெற்றியில் அடித்துக் கொண்டு சொல்கிறான்) “என்ன ஒரு முட்டாள்த்தனமான தெரிந்தெடுப்பு?!! இதுவே இந்நேரம் நானாக இருந்திருந்தால் முதல் நாளிலேயே ஜீவவிருட்சத்தின் கனியை என்ன! இலை, பூ பிஞ்சு எல்லாவற்றையுமே சேர்த்து மேய்ந்து விட்டிருந்திருப்பேனே!!!

இரண்டாம் காட்சி:

அந்த வானம் சாட்சி, இந்த பூமி சாட்சி!

<திரை விலகுகிறது>

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வனாந்திரம்! ஆங்காங்கே அழகழகான சிறு வண்ணக் கூடாரங்கள். வானத்து முகில் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த சிறு முகில்த் துண்டொன்று கூடாரங்களின் நடுவே மையமிட்டிருந்தது. மேகக் கூட்டம் பஞ்சு மிட்டாயைப் பிய்த்துப் போட்டது போலல்லவா இருக்கும்? இதுவோ காலைக் கதிரவனின் கிரணங்கள் பட்டு அந்தரத்தில் மிதக்கும் தங்கத்தூணாய்ப் பளபளக்கிறதே! என்ன இது???

அடடே! இஸ்ரவேலர் பாளயம்!! நடுவே மேகஸ்தம்பம் (யாத் 13:22).

எகிப்தியக் காளவாயில் எருதுகள் போல உழைத்தவர்கள் இப்போதுதான் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆளோட்டிகளின் சவுக்குச் சத்தம் ஓய்ந்து ஆடல், பாடல், சங்கீதங்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறது. அப்பப்பா! என்னே அற்புதம்! எத்தகைய விடுதலை!! பத்து வாதைகளில் ஒரு வல்லரசின் வரலாற்றையே மாற்றி எழுதிவிட்டாரே!! தங்கள் குதிரைப்படைப் பெருமையை பரணிபாடிக் கொண்டிருந்த எகிப்தியப் பேரரசை வெறும் தவளைப்படை அனுப்பி தவிடுபொடி ஆக்கிவிட்டாரே!! அந்தோ!… பூதமாய்க் காட்சியளித்த பார்வோன் பூச்சியாய் சிறுத்துப் போனான். உம்மைப்போல் இரட்சிக்கத்தக்க தேவன் ஒருவரும் இல்லை. உமக்கொத்த வல்லவர் வையத்தில் இல்லை.

அடிமை நுகத்தினின்று விடுவிக்கப்பட்டு பாலும் தேனும் ஓடும் தேசத்திலுள்ள வீடு நோக்கி பிரயாணம் செய்து கொண்டிருக்கையில்…

ஒருநாள்…மீண்டும் அதே குரல்: “இரண்டில் ஒன்றை தெரிவு செய்க”

”இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.

நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப்பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால், நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.

நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்” (உபாகமம் 30:15-19)

உபாகமம் 28-இல் ஆசீர்வாதத்தை லிஸ்ட் போட்டு எழுதிக் கொடுத்தாலும் கூட இந்தக் கூட்டம் ஏனோ சாபத்தின் பக்கமே சாய்கிறது. ஆனாலும் எல்லோரும் அல்ல தேவனுக்காக நிற்க யோசுவா, காலேப் போன்ற நல்மணிகளும் உண்டே!! ஆனால் இஸ்ரவேலில் பெருங்கூட்டமோ சாபத்தையே தெரிந்து கொண்டது.

விளைவு….

கானானுக்குள் புகுந்து களிநடனம் பண்ணவேண்டிய பிள்ளைகள் வனாந்திரத்திலேயே வதம் பண்ணப்பட்டார்கள். கர்த்தர் கொடுத்த பொன்னாபரணங்களைக் கொண்டே கன்றுக்குட்டி செய்து அதைக் கும்பிட்டார்கள் (யாத் 32). ”யோவ், மோசே! நீ என்ன பெரிய கொம்பனா?? என்றார்கள் (எண் 16). மன்னா சலித்துப் போயிற்று, மணக்க மணக்க காடை65 கொண்டுவா… என்றார்கள் (எண்11). சகல பரிபூரணங்களும் நிறைந்த பரமபிதா உடனிருக்க உரிக்க உரிக்க ஒன்றுமில்லாமல் போகும் வெங்காயத்துக்காக ஏங்கினார்கள் (எண் 11:5). தின்று கொழுத்தார்கள், சபிக்கப்பட்ட மோவாபியப் பெண்களோடே சம்போகத்தில் உழன்றார்கள்(எண் 25:1). செய்வதெல்லாம் அருவெறுப்பு வாயிலோ எப்போதும் முறுமுறுப்பு.

 நீ……………………………………………………………..டிய பொறுமையுள்ள (சங் 86:15) தேவனே ”இந்தச் சபையை விட்டுப் பிரிந்துபோங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன்” (எண்16:21) என்று கொந்தளிக்கும் அளவுக்கு மிஞ்சிப் போனார்கள். கானானில் செளபாக்கியமாய் வாழ வேண்டியவர்கள் வனாந்திரத்தில் சவமாய் விழுந்தார்கள்.

>திரை மூடுகிறது<

நாடகத்தின் பார்வையாளனான “இன்றைய கிறிஸ்தவன்” முகம் சுழித்தான், “சே! இப்படி ஒரு முரட்டாட்டமுள்ள ஜனங்களா? ஏன் இவ்வளவு அறிவில்லாதவர்களாக அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

மூன்றாம் காட்சி:

வானம் திறந்து வெப்பம் உமிழ்ந்தாலும் பாகால் மீதே எம் காதல்!

 

<திரை விலகுகிறது>

யோசுவா, காலேப் தவிர எகிப்திலிருந்து புறப்பட்ட யாருக்கும் கானான் சேரும் பாக்கியம் கிடைக்கவில்லை. அவர்கள் பிள்ளைகளுக்கோ கர்த்தர் கண்களில் தயை கிடைத்தது. திக்கித் திணறி தட்டுத் தடுமாறி ஒருவழியாக கானான் வந்தாயிற்று.

வாவ்! கட்டாத வீடுகளில் சுகவாசம், நாட்டாத தோட்டத்திலிருந்து கனிரசம். ஆசீர்வாதமென்றால் இதுவல்லவோ ஆசீர்வாதம்!! இன்றும் கூட இதைச் சுட்டிக்காட்டி, கர்த்தர் உங்களையும் இப்படியே ஆசீர்வதிப்பார் என்று சொல்லியே பலருடைய பாக்கெட்டுகள் நிரம்புகிறதல்லவா??

சொத்துக்களை வாரிக் குவித்தார்கள் சத்துருக்களை சொல்லி அடித்தார்கள். இராணுவங்களைப் பந்தாடினார்கள். இராட்சதர்களைப் புழுவைப் போல நசுக்கினார்கள். அண்டை தேசத்தார் பொறாமையால் துடித்தார்கள்.

ஆனால் இவர்களுடைய இருதயமோ கர்த்தரிடத்தில் செம்மையாய் நெடுங்காலம் இருக்கவில்லை. தங்கள் கண்களை ஏறெடுத்து சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அது யாரது??? பாகாலாமே!! அவர் செழிப்பின் கடவுளாம், பருவ நிலைகளைக் கையில் வைத்திருப்பவராம். மழை வேண்டிய நேரத்தில் மழை தருவாராம்! வெயில் வேண்டிய நேரத்தில் வெயில் தருவாராம். இந்த சீதோனியரைப் பாருங்கள் எப்படி வளமாய் வாழுகிறார்கள் எல்லாம் அந்தப் பாகால் அருளால்தான். யெகோவா நமக்கு வனாந்திரத்தில் உதவி செய்தார் சரி! ஆனால் இப்பொழுதோ விவசாய பூமியில் இருக்கிறோமல்லவா?. எனவே விவசாயக் கடவுளான பாகாலை சார்ந்து கொள்வதே சரி! அது மட்டுமல்ல பாகால் ஆராதனை கூட செம கிளுகிளுப்பா இருக்குமாம்!!

சோரம் போனார்கள்! புருஷனை விட்டு மனைவி சோரம் போவது போல். கர்த்தருடைய இருதயம் அவருக்குள் துடியாய்த் துடித்தது. என் பிரியமே! பாகால் மழைக்கு அதிபதி என்று நினைத்தா அவன் பின்னால் போகிறாய்!!… எலியா! என் உத்தம ஊழியனே எங்கே இருக்கிறாய்..இந்தா பிடி வளிமண்டலச் சாவி மழைக்கு அதிபதி யார் என்று என் ஜனத்துக்குக் காட்டு…

”கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். (1 இரா 17:1)”

எலியா எழுதிய தீர்ப்பின் படியே வானம் அடைக்கப்பட்டது. முழு இஸ்ரவேல் சபைக்கும் முன்பாக பாகாலின் பகல் வேஷத்தைக் கலைக்கும்படி எலியா அவன் குடுமியைப் பிடித்து கர்மேல் பர்வதத்துக்கு இழுத்துக் கொண்டு வந்தான்.

இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி உரத்த சத்தமாய் கூறினான்: “இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்க”

”நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான்,” (1 இரா 18:21)

நீதான் வானத்தின் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவனோ? வர வையடா வானத்திலிருந்து அக்கினியை பார்க்கலாம்!! பாகாலை நோக்கி சவால் விட்டான் எலியா. பாகாலின் தீர்க்கர் அந்தர் பல்டி ஆகாச பல்டியெல்லாம் அடித்துப் பார்த்தார்கள் வானத்திலிருந்து ஒன்றும் வந்தபாடில்லை. வானத்தில் பறக்கும் காக்கா கூட இவர்கள் மீது உச்சா போகவில்லை. பாகால் எனும் வேஷதாரி கூனிக் குறுகிப் போனான்.

அடுத்ததாக எலியா தன் கரங்களை விரித்து அக்கினியைக் கேட்டவுடன் வானம் திறந்து அக்கினியை உமிழ்ந்தது. நடுநடுங்கிய ஜனங்கள் ”கர்த்தரே தேவன்! கர்த்தரே தேவன்!” என பணிந்தார்கள் ஆனால் அந்த பயமும் நெடுநாள் நீடிக்கவில்லை. ஆட்சிகள் மாற காட்சிகளும் மாறின. இஸ்ரவேலர் மீண்டும் மீண்டும் பாகாலோடு தங்கள் கள்ளக் காதலைத் தொடர்ந்தார்கள்.

கர்த்தருடைய உள்ளம் பரிதபித்ததுஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள் (எரே 2: 32)” என்று புலம்பினார், பயனில்லை. நீ என்னை மறந்து, என்னை உனக்குப் புறம்பே தள்ளிவிட்டதினிமித்தம், நீ உன் முறைகேட்டையும் உன் வேசித்தனங்களையும் சுமப்பாய் (எசே 23: 35)” என்று எச்சரித்துப் பார்த்தார் செவிகொடுப்பாரில்லை. ஓசியா எனும் தீர்க்கன் தன் வாழ்க்கையையே செய்தியாக்கி இஸ்ரவேலருக்கு அவர்தம் அக்கிரமங்களை தெரியக்காட்டினான், உணர்வடையவில்லை

விளைவு…

கர்த்தர் எரேமியாவை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது, இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு,

எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.

கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்குவிதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரே 15:1-3)

நிந்தையைச் சுமந்தவர்களாய் யூதர்கள் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போனார்கள். மீண்டும் அடிமை வாழ்க்கை..அந்தோ பரிதாபம்!

>திரை மூடுகிறது<

நாடகத்தின் பார்வையாளனான “இன்றைய கிறிஸ்தவன்” துக்கத்தோடு ”மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது (ஏசா 1:3) என்று கர்த்தர் சொன்னது எத்தனை உண்மை!! ஐயோ அறிவில்லாமையால் இந்த ஜனங்கள் சங்காரமானார்களே (ஓசியா 4:6)” என்று புலம்பினான்.

நான்காம் காட்சி:

சத்தியரை சிலுவையில் அடி, சண்டியரை விடுதலை செய்!!

<திரை விலகுகிறது>

 மேசியா எப்போது வருவார்? எங்கே பிறப்பார் என்று பல ஆயிரம் வருடங்களாய் யூதர்கள் ஆராய்ந்த வண்ணம் இருந்தனர்.

 அது நாசரேத்து எனும் சிற்றூர். அவ்வூரில் வசிக்கும் சில யூத அறிவுஜீவிகளுக்கு ஒன்றாக அமர்ந்து மேசியாவின் முதல் வருகை குறித்து ஆராய்ந்து விவாதிப்பதே தினசரி பொழுதுபோக்கு.

 அன்றும்கூட அப்படித்தான் ஏசாயா நூலில் மேசியாவின் முதல் வருகை குறித்து கூறப்பட்ட பகுதி பற்றி காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் உட்காந்து விவாதித்த மேஜை அவ்வூரில் வசிக்கும் இயேசு என்னும் ஏழைத் தச்சன் செய்து கொடுத்தது. அப்பொழுது அவர்களது விவாதத்துக்கு இடையூறாக ஒரு சத்தம்…

 டொக்…டொக்….டொக்…

அடடே என்னப்பா இது சத்தம்? எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பேசிக்கிட்டு இருக்கோம்… யாரது?? ஏ…தம்பி, உன் தச்சு வேலையைக் கொஞ்ச நேரம் நிறுத்துறியா!! இங்க நாங்க தல போற விஷயத்தை பத்தி ஆராய்ஞ்சுக்கிட்டு இருக்கோம்.

சப்தம் அடங்க…விவாதம் தொடர்கிறது….

இப்படி பக்கத்தில் இருப்பவர்களாலேயே இனங்கண்டு பிடிக்க முடியாத ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஏழைத் தச்சன் தன்னை மேசியா என்று அறிமுகப்படுத்தியவுடன் சிலர் விலாநோக சிரித்தார்கள்! சிலர் கடுங்கோபம் கொண்டார்கள். ஆனாலும் அவரது பரிசுத்த வாழ்க்கையும் அடுத்தடுத்துச் செய்த அதிரடி அற்புதங்களும் அவர்களை மலைக்கச் செய்தது. ஆனாலும் பலர் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. (யோவான் 1:11).

அவர்களது அன்பைப் பெற ஆசித்தார். அவர்களோடு உண்டு உறங்க வாஞ்சித்தார். “ஜனங்கள் என்னைக் குறித்து என்ன சொல்லுகிறார்கள் என்று ஆவலாய் விசாரித்தார். ஆனால் பதிலாக ஏமாற்றமே வந்தது.

”எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. (மத்:23:37)”

அவர் அவர்களை உயிராய் நேசித்திருக்க, அவர்களோ அவர் மீது கொண்ட பொறாமையினால் அவரைக் கொலை செய்யும் அளவுக்குப் போய் விட்டார்கள். அவர்கள் கண்களை அகங்காரம் மறைத்தபடியால் அவரை மேசியா என்று அவர்கள் அறியவில்லை. அவர்கள் கனவு ஒருநாள் நிறைவேறியது. இயேசு கைது செய்யப்பட்டார். ஒரு குற்றவாளி போல பிலாத்து முன்னர் நிறுத்தப்பட்டார்.

அவர்களுக்கு இரக்கத்தைப் பெற கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது. பிலாத்து கேட்டான் “இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்க”

காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.அப்பொழுது காவல் பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான்.பொறாமையினாலே இயேசுவை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். (மத் 27: 15-18)

ஜனங்களோ இயேசுவைப் புறக்கணித்து பரபாஸைத் தெரிந்து கொண்டார்கள். இயேசுவை சிலுவையில் அறையும் அந்த இரத்தப் பழி எங்கள் தலை மேலும் எங்கள் பிள்ளைகள் தலைமேலும் சுமரட்டும் என்றார்கள்.

விளைவு…

கி.பி 70 ஆம் ஆண்டு எருசலேம் சூறையாடப்பட்டது. தேவாலயம் அழிக்கப்பட்டது. ஜனங்கள் உலெகெங்கும் சிதறுண்டு போனார்கள். யூதர்களுக்கு 1948 வரை சொந்த தேசம் என்று ஒன்று இல்லாமல் போனது. சென்றவிடமெல்லாம் யூதர்கள் சொல்லொண்ணாத் துயரும் நிந்தையும் அடைந்தார்கள்,

>திரை மூடுகிறது<

நாடகத்தின் பார்வையாளனான “இன்றைய கிறிஸ்தவன்” தலையைச் சொறிந்து கொண்டே யூதர்கள் மகா அறிவாளிகள் என்று படித்திருக்கிறேன். அவர்கள் போய் எப்படி இயேசுவை விட்டு பரபாஸைத் தெரிந்து கொண்டார்கள். ஒருவேளை இயேசு சிலுவைக்குச் செல்லவேண்டும் என்ற தேவ சித்தத்தினால் இருக்குமோ? ஆனாலும் இயேசுவை சிலுவையில் அடிக்கும்படி சொன்னதோடல்லாமல் அவர்கள் தாங்களாகவே அவரது இரத்தப் பழியை தங்கள் தலைமேல் போட்டுக் கொண்டதெப்படி தேவசித்தமாயிருக்கும். ”உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்” என்று இயேசு இவர்களுக்காக கண்ணீர் விட்டு அழுதாரல்லவா?

(இக்கட்டுரையின் தொடர்ச்சியை வாசிக்க இங்கே சொடுக்கவும்)

1 thought on “இரண்டில் ஒன்று (பாகம்-1)”

  1. சங்கீதம் 12:2 அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.

    யாக்கோபு 1:8 இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.

    யாக்கோபு 4:8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.

Leave a Reply