இரட்சிப்பு

அதைக் கையில் கவிழ்த்திப் பிடித்திருந்தேன்,
பிச்சைப் பாத்திரமென நினைத்திருந்தேன்
வாசலில் நின்று “அப்பா,பிதாவே” என கதற வேண்டும்,
நெஞ்சு வெடிக்க இரக்கம் வேண்டிக் கெஞ்ச வேண்டும்,
பிச்சை கிடைத்தாலும் கிடைக்கலாம்.

அப்போது வழியில் ஆவியானவரை சந்தித்தேன்,
கையில் என்ன? என்றார்.
பிச்சைப் பாத்திரம் என்றேன்.
இல்லை, இது மகனுக்கான உரிமை,
மன்னவனுக்கான அதிகாரம்
தைரியமாய் வீட்டுக்குள் போ!
அப்பா, பிதாவே என உரிமையோடு கூப்பிடு.

அதைக் கவிழ்த்திப் பிடிக்காதே,
நேராய்த் திருப்பு!
சிரசில் அணிந்துகொள்! என்றார்.

அப்பொழுதுதான் தெரிந்தது,
அடடா, இது மகுடம்!!

Leave a Reply