இயேசுவும் விமர்சித்தார்

இயேசுகிறிஸ்துவும் வேதபாரகரின் உடையைக் குறித்து விமர்சித்தார் (மாற்கு 12:38). அணிந்த விதத்தை விமர்சிக்கவில்லை, அணியும் நோக்கத்தை மட்டும் விமர்சித்தார். வேதபாரகர் ஜனங்களுக்கு ஊழியம் செய்வதை விரும்பாமல், ஜனங்களிடமிருந்து வரும் கனத்தையும், புகழ்ச்ச்சியையும் மட்டும் விரும்பினார்கள்.

மாய்மாலக்காரர் செய்யும் தானதர்மங்களையும், அஞ்ஞானிகள் செய்யும் ஜெபத்தையும்கூட இயேசு விமர்சித்தார் (மத்தேயு 6:1-8). அது தருமத்தில் கொடுக்கும் பொருட்களைப் பற்றிய, ஜெபத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பற்றிய விமர்சனமல்ல. அவர்கள் நோக்கம மனுஷரால் வரும் புகழ்., அதைத்தான் இயேசு விமர்சித்தார்.

ஒரு செயலுக்கான நோக்கம்தான் அதன் வேர். இயேசுவின் பார்வை வேர் மீது மட்டுமே இருந்தது. மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1 சாமு 16:7). செயல் நேர்த்தியாக இருந்தாலும் நோக்கம் சரியில்லையானால் அந்த செயலால் பயனில்லை.

இயேசுகிறிஸ்து பரிசேயர், சதுசேயர் மற்றும் ஏரோதின் பிரசங்கங்களையும் கூட புளித்தமாவு என விமர்சித்தார் (மாற்கு 8:15, மத்தேயு 16:6). ஆனால் அவர்கள் பிரசங்கத்தின் சாரத்தை விமர்சித்தாரே தவிர அவர்கள் பிரசங்கத்தில் பயன்படுத்திய வார்த்தைகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் வெட்டியெடுத்து அதைக் கொண்டு அவர்களை குற்றஞ்சுமத்தவில்லை. ஆனால் அவர்களோ இயேசுவின் பிரசங்கத்தின் சாரத்தை விமர்சிக்கவில்லை, மாறாக அவர் பிரசங்கத்தில் அவர் பயன்படுத்திய சில வார்த்தைகளை மட்டும் வெட்டியெடுத்து “தன்னை மேசியா என்கிறார், தேவாலயம் இடிக்கப்படும் என்கிறார்” என்று அவர் தேவதூஷணம் சொல்வதாக விமர்சித்தார்கள்.

ஒரு பிரசங்கத்தின் சாரம்தான் அதன் வேர். அந்த சாரம்தான் புளித்த மாவைப்போல பரவும், அரிபிளவைப் போல படரும். இயேசுவின் பார்வை வேர் மீது மட்டுமே இருந்தது. இன்று பிரசங்கத்தின் சாரம் விமர்சிக்கப்படுவதில்லை. பிரசங்கியாரின் வெளித்தோற்றம், பேசும் வார்த்தைகளே விமர்சிக்கப்படுகின்றன.

விமர்சனங்கள் நல்லது. ஆனால் அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமென்றால் அதிலும் நமக்கு இயேசுவே முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com

Leave a Reply