இந்திய தேர்தலில் கிறிஸ்தவ விசுவாசிகளின் நிலைப்பாடு

 voting

“உமது சித்தத்தின்படி ஆட்சி செய்யும் ஒருவரை எங்களுக்கு தாரும்” என்று ஜெபிக்கும் விசுவாசிகளே!

தேவசித்தத்தின்படி அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் நம் நாட்டில் யாராவது இருக்கிறார்களா?

இருக்கிறார்கள் என்று சொல்வோமானால் தேவ சித்தமென்றால் என்னவென்று நமக்கு தெரியவில்லை என்றுதான் அர்த்தம். பிதாவின் சித்தத்தின்படி அரசாட்சி செய்யப்போகும் ஒரே அதிபதி இரண்டாம் முறையாக வரப்போகும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே!

ஆனால் உலகிலுள்ள அரசியல்வாதிகள் எல்லோருமே தேவனுடைய முன்னுரைப்புகளை (prophecies) நிறைவேற்றுபவர்கள்தான் தேவ சித்தத்துக்கும் முன்னுரைப்புக்கும் என்ன வித்தியாசம் என்றால் “எல்லா மனிதரும் இரட்சிக்கப்படுவதும், தேவனை அறியும் அறிவை அடைவதும்” தேவசித்தம், ஆனால் “இடுக்கமான வாசல்வழியாக உள்ளே நுழைபவர்கள்” சிலரே என்பது தேவ முன்னறிவிப்பு. இரண்டும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கிறதல்லவா? ஆம், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கான தேவ முன்னறிவிப்புகள் நிறைவேறுவதற்கான திட்டங்களை செயல்படுத்துபவர்களாகவே இருப்பார்கள், இருந்தாக வேண்டும்!

பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல (அப் 1:7). தேவ சித்தத்தை நிறைவேற்றும் தாவீது அரசாள வேண்டிய காலத்தில் தேவன் தாவீதை அரியணை ஏற்றுவார். தேவனுடைய முன்னறிவிப்பை நிறைவேற்றும் ஏரோது அரசாள வேண்டிய காலத்தில் கர்த்தர் ஏரோது கையில் ஆட்சியைக் கொடுப்பார். இயேசு வந்த காலத்தில் தேவசித்தம் செய்யும் தாவீது அரசனாய் இருந்திருந்தால் அவன் தமது சிம்மாசனத்தில் இயேசுவை அமரவைத்து அவன் அவர் காலடியில் உட்காந்து இருந்திருப்பான். பின்னர் இயேசு சிலுவைக்கு செல்லுவது எப்படி? நமக்கு மீட்பு உண்டாவது எப்படி? இயேசுவை சிலுவையில் அறையும் உத்தரவில் தாவீது கையெழுத்திடுவானா? அதை செய்ய பிலாத்தும் ஏரோதுமல்லவா வேண்டும்!

அதேபோல நெகேமியாவுக்கு அரசனாக அர்த்தசஷ்ட்டா இல்லாமல் பார்வோன் இராமசேஸ் போன்ற கல் நெஞ்சக்காரன் இருந்திருந்தால் இடிக்கபட்ட எருசலேம் அலங்கம் எப்படி மறுபடியும் கட்டப்பட்டு இருந்திருக்கும்? ஆனால் இந்த அர்த்தசஷ்ட்டா ராஜா எருசலேம் அலங்கம் கட்டப்பட யூதருக்கு சகல உதவிகளும் செய்தானல்லவா! எனவே எப்போது யார் ஆளவேண்டும் என்று தேவனுக்கு தெரியும். இந்த விஷயத்தில் உங்கள் சிட்டுக்குருவி மூளையில் தோன்றும் கருத்துக்களைக் கொண்டு தேவனுக்கு அறிவுரை சொல்லாதிருங்கள்.

உண்மை சீஷர்கள் எல்லா சூழ்நிலைகளிலும், யார் ஆட்சி செய்தாலும் வேத சட்டத்தின்படி உபத்திரவத்தை அனுபவித்தாகவேண்டும், காரணம் அவர்கள் இந்த உலகத்துக்குரியவர்கள் அல்ல (யோவான் 15:19). எனக்கு கீழ்ப்படிபவர்களுக்கு உலகத்தாரால் உபத்திரவம் உண்டு என்று இயேசு சொன்ன வேளையிலே அதற்கு மாறாக உலகத்தார் நம்மை ஆதரிக்கிறார்கள் என்றால் அவர்கள் தேவனுக்கு இசைந்து செல்லுகிறார்கள் என்று அர்த்தமில்லை, நாம் தேவனுக்கு இசைந்து செல்லவில்லை என்பதே அர்த்தம்!

பூமியில் உள்ளவரை “தேவனுடைய மணவாட்டி” உலகத்துக்குரிய சட்டங்களுக்கு கீழ்படிவாள் ஆனால் உலகத்துக்குரிய அரசியலோடு இசைந்து போகமாட்டாள். பாபிலோனின் வண்டல்களை உறிஞ்சிக்குடித்த மயக்கத்தில் இருக்கும் உலகத்தின் அதிபதிகளோடு பந்தியிருந்து, கூடிக்குலாவும் சபை “சோரம்போன ஸ்திரீ”யாகவே இருக்க வேண்டும். சபையானது A,B இருவராலும் உபத்திரவபடுத்தப்படும் என்று தேவன் சொல்லியிருக்கையில் நம்மை A உபத்திரவப்படுத்துவது பற்றி ஆராய்கிறோம், ஆனால் இந்த B ஏன் நம்மை உபத்திரவப் படுத்தவில்லை என்று இதுவரை ஆராய்ந்தோமா? உலகத்தோடு ஒத்துப்போகும் பெலவீனம், சுயநலத்துக்காக மனிதர்களை சார்ந்துகொள்ளும் குணம், மனிதருக்கு பயப்படும் பயம் நம்மில் காணப்படுகிறதா?

அதிபதிகள் தேவனுக்கு கீழ்ப்படிவார்களோ மாட்டார்களோ என்று நாம் அஞ்ச வேண்டியதில்லை. மோசேக்கு முன்னால் முரண்டு பிடித்த எகிப்தின் பார்வோனையும், தேவனுக்கு எதிராக வீம்பு பேசிய அசீரியாவின் சனகெரிப்பையும் நினைத்துக்கொள்ளுங்கள். தனக்கு தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் மூக்கில் துறட்டையும் வாயில் கடிவாளத்தையும் போட்டு இழுத்து வந்து தனக்கு வேலைவாங்க தேவனால் கூடும். ஆனால் இங்கே பெரும்பான்மையான கிறிஸ்தவர்களுக்கு பிரச்சனை என்னவென்றால் அவர்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தையோ, சத்தியத்தையோ நினைத்து கலங்குவதாகத் தெரியவில்லை. அவர்கள் தங்கள் சொந்த பதவி, சொத்து, சுகவாழ்வு குறித்து கலங்குவதாகவும், பல போலி ஊழியர்கள் ஊழியம் என்று தாங்கள் சொல்லிக்கொள்ளும் ஆன்மீக வியாபாரத்தின் நலனையும் முன்னிறுத்தியே சிந்திப்பதாக தெரிகிறது.

இந்த தேர்தல் மாத்திரமல்ல, எந்தத் தேர்தலும் கிறிஸ்தவர்களில் சில பிரிவினருக்கு நன்மையையோ, தீமையையோ கொண்டுவரலாம் ஆனால் இறையரசுக்கு எந்த சாதக பாதகத்தையும் ஏற்படுத்தாது. போலி சபையானது காற்றடிக்கும்பக்கம் சாயும் நாணல், ஆனால் இறையரசை தன்னில் கொண்டுள்ள உண்மை சபையானது “கற்பாறை”, அதன்மேல் மோதுகிறவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும். எந்த ஆட்சி வந்தாலும் அந்த அரசால் இறையரசில் வளர்ச்சியை அதிகரிக்கவும் முடியாது, அதை கட்டுப்படுத்தவும் முடியாது. காரணம் இறையரசு இந்த உலகத்துக்குரியது அல்ல. சபை என்னும் கப்பலுக்கான சுக்கான் எந்த மனிதனின் கையிலும் இல்லை அது இயேசுவின் கையில் இருக்கிறது, அந்தக் கப்பல் போகும் பாதையையும் அதன் வேகத்தையும் அவரே தீர்மானிப்பார். ஒருவனும் அதற்கு குறுக்கே நிற்கமுடியாது.

எனவே இந்த ஆட்சி வந்தால் சபைக்கு நல்லது, அந்த ஆட்சி வந்தால் சபைக்கு கெட்டது என்று சொல்லி தேவனை அசிங்கப்படுத்தாதிருங்கள். ராஜாக்களும் அதிபதிகளும் தங்கள் இரட்சிப்புக்காக சபையில் வந்து தஞ்சமடைய வேண்டுமே தவிர, சபை தனது பாதுகாப்புக்காக இராஜாக்களிடமும் அதிபதிகளிடமும் போய் தஞ்சமடையக்கூடாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் நாம் அவர்களை நேசித்து அவர்கள் நாட்டு நலனுக்காக கொண்டுவரும் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து அவர்களுக்காக ஜெபிப்போம். இயேசுவின் பெயரைச் சொல்லி சொத்துக்களை வாரிக்குவித்த சில பிரபல கிறிஸ்தவ பிரசங்கிகளே தேர்தல் வரும்போதெல்லாம் யார் வருவார்களோ, நம் சொத்துக்களுக்கு என்ன நேருமோ என்று கலங்குகிறார்கள். அவர்களே தங்கள் சொந்த நலனுக்காக சபைக்குள் அரசியலை கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் மகா ஆபத்தானவர்கள்! கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட ஒநாய்களை இனங்கண்டு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.

நாம் ஓட்டுப்போட்டு கிறிஸ்தவத்தை பாதுகாக்கப்போவதில்லை. கிறிஸ்துதான் நம்மையும், நம் அரசியல்வாதிகளையும் தேசத்தையும் பாதுகாப்பவர். எனவே அரசியலோடு ஆன்மீகத்தை கலக்காமல் உங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர்களில் யார் நல்லவர், நேர்மையாளர் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு வாக்களியுங்கள்.

“ஆண்டவரே உமது சித்தத்தை செய்யும் அதிபதியை எங்களுக்கு ஏற்படுத்தும்!” என்ற ஜெபத்தை நாம் வேதத்தில் பார்க்கமுடியாது, ஆனால் யார் அரசாண்டாலும் நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் ஊக்கமாக ஜெபிக்கவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது (I தீமோத்தேயு 2:2). சுவிசேஷத்தின் நிமித்தம் அரசாங்கத்தால் நமக்கு உபத்திரவங்கள் வரும்போது “ஆண்டவரே! இவர்களை அரியணையில் இருந்து இறக்கும் என்றோ இவர்களை தண்டியும்!” என்றோ ஜெபிக்காமல் ஆதித்திருச்சபையார் ஜெபித்ததுபோல இந்த கடுமையான உபத்திரவத்தின் மத்தியிலும் பயமின்றி, தயக்கமின்றி தைரியத்தோடு சுவிசேஷத்தை அறிவிக்க எங்களுக்கு உதவி செய்யும் என்றே ஜெபிக்க வேண்டும். இனி ஒருபோதும் அரசியலோடு ஆன்மீகத்தை கலக்காதீர்கள்!

இந்தப் பதிவு எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவானதோ, எதிரானதோ இல்லை. கிறிஸ்தவர்கள் பலர் தாம் ஓட்டுப்போட்டு கிறிஸ்தவத்தை இந்தியாவில் காப்பாற்றப் போவதாக சொல்வதை தொடர்ந்து கேட்டதன் விளைவாக எழுதப்பட்டது. ஒரு கட்சி கிறிஸ்தவர்களுக்கு சார்பானது அல்லது எதிரானது என்று முடிவு செய்து ஓட்டுப் போடுவதும் போடாதிருப்பதும் உங்கள் தனிப்பட்ட உரிமை. ஆனால் உங்கள் ஓட்டு அல்ல, தேவனுடைய கரமே சபையை பாதுகாக்கிறது என்று அறிந்துகொள்ளுங்கள். கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா (சங்கீதம் 127:2). எந்த சூழலிலும் எங்கள் தேவனே எங்களை பாதுகாக்கிறவர் என்று புறமதத்தருக்கு முன்பாக நெஞ்சை நிமிர்த்தி சொல்லுங்கள். “சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு” போன்ற பலவீனமான வார்த்தைகள் மூலம் பலத்த கரத்தையும் ஓங்கிய புயத்தையும் உடைய சர்வவல்லவரை கனவீனப்படுத்தாதிருங்கள்.

யார் சிறுபான்மை?
அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தரருடைய பிள்ளைகளா?

யார் சிறுபான்மை?
சீரியாவின் படைகளா? அல்லது அக்கினிமயமான இரதங்களாலும் குதிரைகளாலும் சூழப்பட்டு நின்ற எலிசாவா?

யார் சிறுபான்மை?
பாகாலின் 450 தீர்க்கதரிசிகளா? அல்லது தனியாளாக நின்று அக்கினியை வானத்திலிருந்து இறக்கிய எலியாவா?

யார் சிறுபான்மை?
மீதியானியரின் இராணுவமா? அல்லது 300 பேருடன் சென்ற கிதியோனா?

கிறிஸ்தவர்களே! கிறிஸ்தவர்களே!
நீங்கள் செய்தித்தாளை படிக்கும் நேரத்துக்கு வேதத்தைப் படித்தீர்களானால் நலமாயிருக்கும்.

கர்த்தர்தாமே வரப்போகும் தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற கிருபை செய்வாராக!

3 thoughts on “இந்திய தேர்தலில் கிறிஸ்தவ விசுவாசிகளின் நிலைப்பாடு”

  1. தனக்கு தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் மூக்கில் துறட்டையும் வாயில் கடிவாளத்தையும் போட்டு இழுத்து வந்து தனக்கு வேலைவாங்க தேவனால் கூடும்
    Praise God
    Good Bro.Keep it up.God bless you

Leave a Reply