ஆவிக்குரிய பொருட்களை வியாபாரம் செய்யலாமா?

இந்தக் கேள்வி சமீப நாட்களாக நம்மிடையே திரும்பத் திரும்ப விவாதிக்கப்படுகிறது. ‘வியாபாரம்’ என்பது என்ன? அது சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் கொடுக்கல் வாங்கலை நெறிப்படுத்தும் முறை. வியாபாரம் உலகம் முழுவதும் பரவி விரிந்து வலைப்பின்னல்போல உலகத்தை மூடியிருக்கிறது.

வியாபாரம் எங்கே நடக்கிறது?

பூமிப் பந்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு கழுகின் பார்வையில் மேலிருந்து அதைப் பாருங்கள். பூமியின் மேற்பரப்பில் எத்தனை கோடி வீடுகள் இருக்கின்றன, அத்தனை வீடுகளிலும் மக்கள் குடும்பமாக வசிக்கிறார்கள். சிறியோர் முதல் பெரியோர் வரை குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் ஏதோ ஒருவிதத்தில் ஏதோ ஒரு வியாபாரத்துடன் சம்பந்தப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் எந்த தேசத்தவரானாலும், இனத்தவரானாலும் அந்த அத்தனை பேரும் வியாபாரத்தை தங்கள் தங்கள் குடும்பத்துக்கு வெளியேதான் வைத்திருக்கிறார்களே தவிர யாருமே குடும்பத்துக்கு உள்ளே வைத்துக் கொள்வதில்லை.

வியாபாரம் நல்ல விஷயம்தானே! அதை ஏன் குடும்பத்துக்குள் யாருமே கொண்டுவருவதில்லை? குடும்பத்துக்குள் கொடுக்கல் வாங்கல் இல்லையா?

அனுதினமும் குடும்பத்துக்குள் ஏதோ ஒரு கொடுக்கல் வாங்கல் நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அந்த கொடுக்கல் வாங்கலுக்கு வியாபாரத்தை விட சிறந்த வேறு ஏதோ “ஒன்று” தங்களிடம் இருப்பதாக எல்லோரிடமும் ஒரு பொதுப் புரிதல் இருக்கிறது.

அந்த ஏதோ “ஒன்று” என்ன?

வெளியே நடக்கும் வியாபரத்தில் வாங்கும் பொருளுக்கு சமமான கரன்சி கொடுக்கப்படுகிறது. குடும்பத்துக்குள் பொருளுக்கு சமமாக பகிரப்படும் கரன்சி “உணர்வு” என்பதாகும். அப்பா குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கிக் கொடுக்கிறார். அதை கையில் வாங்கியவுடன் குழந்தை முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை கண்டு ரசிக்கும் அந்த “உணர்வுதான்” அந்த பொருளுக்கு சமமாக அப்பாவுக்கு குழந்தை தரும் கரன்சி.

தன் பிள்ளைகள் வயிறார சாப்பிட்டார்கள் என்ற அந்த திருப்தியான “உணர்வுதான்” அம்மா பெறும் கரன்சி.

குடும்பத்திலும் கொடுக்கல் வாங்கல் இல்லாமல் இல்லை, ஆனால் குடும்பத்தில் பகிரப்படும் “உணர்வு” எனும் கரன்சி “இதயம்” என்ற ரிசர்வ் வங்கியில் பிரிண்ட் செய்யப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நீங்கள் நியூயார்க்கில் உள்ள ஒரு பெரிய நகைக்கடையில் ஒரு வைர மோதிரத்தை வாங்குகிறீர்கள். அதன் விலை பத்தாயிரம் டாலர்கள். நீங்கள் உங்கள் பர்சிலிருந்து பத்தாயிரம் ஈரானிய ரியாலை எடுத்து கடைக்காரரிடம் நீட்டினால் அங்கே உங்களுக்கு என்ன treatment கிடைக்குமோ, அதே treatment-தான் நீங்கள் உங்கள் குடும்பத்துக்குள் வியாபாரத்தைக் கொண்டுவந்தாலும் உங்கள் குடும்பத்தாரிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும். ஏனெனில் “உணர்வு” கரன்சி காகித கரன்சியைவிட கோடி மடங்கு மதிப்பு மிக்கது.

மல்டி பில்லினியரான அம்பானிகூட தன்னிடம் “உணர்வு” கரன்சியில்லாதவராக இருந்தால் அவரது குடும்பத்தாருக்கு அவர் பரம ஏழைதான்.

அதே உணர்வு கரன்சியைத்தான் பரலோக ராஜ்ஜியமும் பயன்படுத்துகிறது. அதனால்தான் சாந்தமே உருவான கர்த்தர் இயேசுகிறிஸ்து தேவாலயத்தில் சவுக்கை எடுத்து வியாபாரிகளை விளாசினார். சபை என்பது குடும்பத்தின் நீட்சிதான். குடும்பம் வேறு சபை வேறு அல்ல. சபை குடும்பத்துக்குள் வியாபாரத்தைக் கொண்டுவந்தால் குடும்பப் பற்றுள்ள அங்கத்தினர் சிலர் சினத்தில் சவுக்கை எடுக்கத்தான் செய்வார்கள்.

இலவசமாய் கொடு என்று கேட்பது தரித்திரத்தினால் அல்ல, சகோதர உரிமையின் அடிப்படையில்தான்…

ஒரு தேசத்தின் தலைமையகம் என்ன கரன்சியை அறிமுகப்படுத்துகிறதோ அதே கரன்சிதான் தேசம் முழுவதும் புழக்கத்தில் இருக்க வேண்டும்.

இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள் (மத்தேயு 10:8) இதுதான் பரலோக தேசத்தின் கொடுக்கல் வாங்கல் சட்டம். எனவே சபைக்கு வெளியே நடக்கும் வியாபாரத்தை சபைக்குள் கொண்டுவரவே கூடாது.

சரி, இனி நடைமுறைக்கு வருவோம்…

வேதாகம புத்தகத்தையோ, பாடல்கள் அடங்கிய சிடியையோ, ஒரு மொபைல் ஆப்பையோ சபைக்கு அறிமுகப்படுத்தும்போது வெளியே நடக்கும் வியாபாரத்தோடு தொடர்புகொண்டுதான் அதைச் செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஒரு சிடி என்றால் அது வெளியே பல வியாபாரங்களைக் கடந்துதான் தயாரிக்கும் சகோதரன் கையிலிருந்து நுகரும் சகோதரன் கைக்கு வந்து சேருகிறது. அப்படியெனில் நடுவில் நடக்கும் இந்த வியாபாரத்துக்கான செலவை ஏற்பது யார்?

தயாரிப்பவர் வியாபாரி, வாங்குபவர் வாடிக்கையாளர் என்கிற உறவுமுறை அங்கே உள்ளே நுழையாமல் இது நமது குடும்பத் தயாரிப்பு என்ற உணர்வுடன் அனைவரும் தங்கள் தங்கள் பங்கை அதில் செலுத்த வேண்டும். ஆசரிப்புக் கூடாரமோ, எருசலேம் தேவாலயமோ கட்டப்பட்ட பொழுது ஒரு ரியல் எஸ்டேட் பிசினஸ் அங்கே நடக்கவில்லை. அதை தங்கள் குடும்ப ப்ராஜக்ட் ஆகத்தான் அனைவரும் அவரவர் பங்களிப்புகளைச் செய்து கட்டி எழுப்பினார்கள்.

பொருளை இலவசமாகக் கொடுப்போம் ஆனால் அந்த பொருளை தயாரிப்பதற்கு, விநியோகிப்பதற்கான செலவை சேர்ந்து ஏற்போம் என்பதுதான் ஏற்றதாக இருக்கும். எந்த செலவையும் ஏற்காமல் இலவசமாய் கொடு என்று வாதிடுவதோ, அல்லது மற்றவர்களைக் குற்றப்படுத்துவதோ எந்த விதத்திலும் ஏற்றது அல்ல.

நாம் விரும்பும் அந்த நடைமுறை இன்னும் சபைக்குள் வரவில்லை. நிச்சயம் வரும்..அது வரும்வரை காத்திருப்போம். அப்படி ஒரு நடைமுறை வந்துவிட்டால் உலகத்தாருக்கு சபை மிகப்பெரிய எடுத்துக் காட்டாக இருக்கும்.

இப்போதுள்ள சூழலில் பொருளுக்கான விலை நிர்ணயித்து கொடுக்கும் நிலையில்தான் தயாரிப்பாளர்கள் அனைவரும் இருக்கின்றனர். அதைச் செய்பவர்கள் யாவரும் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தப்படக் கூடாது. ஒரு ஆவிக்குரிய பொருள் தயாரிக்கப் பட்டு வெளிவருவதில் நம் அனைவர் பங்கும் இருக்க வேண்டும் என்பது நம் நினைவில் இருக்கட்டும்.

ஒருவர் லாபநோக்கத்துக்காக அதைச் செய்வாரானால் அது தவறு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஒரு புத்தகத்தை எங்கள் சொந்த செலவில் பிரிண்ட் செய்து அதை இலவசமாக எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற எங்கள் முயற்சி “சரியான விநியோகிஸ்தர்” என்ற நபர் நடுவில் இல்லாமல் தோல்வியடைந்ததை இந்த வேளையில் நினைத்துப் பார்க்கிறேன். தற்போதுள்ள சூழ்நிலையில் உலகம் முழுவதுமுள்ள சரியான உறவுகள் கையில் நமது படைப்புக்கள் போய்சேர வேண்டுமானால் உலக வியாபார ஆயுதத்தை லாப நோக்கமின்றி கையில் எடுப்பது தவறல்ல. ஆனால் அது தற்காலிகமாக இருக்கட்டும்.

விரைவில் சூழல்கள் மாறும். சபை உறவுகள் அனைவரும் கைகோர்த்து எல்லாவற்றையும் இலவசமாக பகிர்ந்தளிக்கும் காலம் வந்தே தீரும். அதுதான் தேவசித்தமாகவும் இருக்கும். அதுவரை ஒருவரையொருவர் குறை சொல்லாமல் அந்த நாளுக்காக காத்திருப்போம். அந்த நாள் சீக்கிரம் வருவதற்கு நம்மாலான பங்களிப்பை செய்வோம்.

Leave a Reply