ஆயத்தம்

ஒரு நாட்டின் பேரரசர் மிகவும் கனம் பொருந்தியவராகிய தன்னுடைய குமாரனுக்கு ஒரு பெண்ணை திருமணத்துக்கென்று நியமிக்கிறார். நியமிக்கப்பட்ட பெண் இளவரசருக்கு சற்றும் ஏற்றவளல்ல. பேதமை நிறைந்தவள், பெலவீனமுமுள்ளவள். ஆனாலும் அவள் மீது கொண்ட அன்பு மற்றும் இரக்கத்தின் மிகுதியால் பேரரசரும் இளவரசரும் அவளைத் தகுதிப்படுத்தி, தங்கள் குடும்பத்தில் இணைத்துக்கொள்ள சித்தம் கொண்டனர்.

நிச்சயிக்கப்பட்ட நாளுக்கும், திருமண நாளுக்கும் இருக்கும் இடைவெளியில் அரச குடும்பத்திற்கு ஏற்றவளாக மணப்பெண்ணை தகுதிப்படுத்தும்படி தம்முடைய பிரதிநிதி (ஆவியானவர்) ஒருவரை பேரரசர் ஏற்படுத்துகிறார். பயிற்சிகள் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் மணப்பெண் ஒத்துழைத்தால் பெலவீனத்திலிருந்து பேராற்றலுக்கும், பேதமையிலிருந்து மேதமைக்கும் அவளை உயர்த்துவது அந்த பிரதிநிதிக்கு எளிதான காரியம்தான். ஆனால் அந்தப் பெண் தனது மதியீனத்தால் அவ்வப்போது மேற்கொள்ளும் ஒத்துழையாமை போராட்டங்கள் அவளது முன்னேற்றத்தை தாமதிக்கச் செய்கிறது.

மணமகன் தனது அன்பின் மிகுதியால் அவ்வபோது அனுப்பித்தரும் விலையுயர்ந்த வெகுமதிகள் மட்டும் அவளுக்கு இனிக்கிறது. ஆனால் பயிற்சிகளோ ரொம்பவே கசக்கிறது. தகுதியின்றி அரண்மனைக்குள் நுழைய முடியாது என்ற எச்சரிக்கை உணர்வும், அந்த வெகுமதிகளைவிட தான் விரைவில் அணியப்போகும் மணி மகுடம் எவ்வளவு உயர்ந்தது என்ற அறிவும் மாத்திரம் அவளுக்கு இருக்குமானால் அவளே தன்னை இன்னும் விரைவாய் பயிற்றுவிக்கும்படி அந்தப் பிரதிநிதியை துரிதப்படுத்திவிடுவாள். அவள் வருகைக்காக அரச குடும்பம் ஆவலுடன் காத்திருக்கிறது. மணமகனும்தான்!

ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com

1 thought on “ஆயத்தம்”

  1. இப்பூமியில் நம் வாழ்வின் ஒரே நோக்கம் இதைத் தவிர வேறென்ன இருக்க முடியும், மிகச் சரியான பதிவு சகோதரரே.

Leave a Reply