ஆசீர்வாதங்கள் இயேசுவுக்காக

ஒருவன் தனது ஆசீர்வாதங்களைத் துறந்தால் அது கர்த்தருக்காக என்று யாரும் எளிதாக சொல்லிவிடுவார்கள். காரணம் அதில் அந்த தனிமனிதனுடைய தியாகம் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் ஆசீர்வதிக்கப்படுவதும் கர்த்தருக்காகத்தான் என்பதை பலரால் நம்ப முடிவதில்லை. ஆசீர்வாதங்கள் நமக்காக என்றும், தியாகங்கள் கர்த்தருக்காக என்றும் நம்பியே பழகிவிட்டோம்.

தண்ணீர்கூடக் கிடைக்காத வனாந்திரத்தில் ஆசரிப்புக்கூடாரம் அமைப்பதற்கான ஏராளமான பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், தூபவர்க்கங்களும், இளநீல நூலும், இரத்தாம்பரமும் , சிவப்புநூலும், பஞ்சுநூலும் இஸ்ரவேலருக்கு எங்கிருந்து கிடைத்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இஸ்ரவேலர் எகிப்தியரிடத்திலிருந்து பெற்றவை அவை. அவர்கள் அங்கு 430 வருடங்கள் அடிமைகளாக வேலை செய்ததற்கான நியாயமான ஊதியம் அது. ஊதியமாகக் கேட்டிருந்தால் எகிப்தியர் கொடுத்திருக்க மாட்டார்கள் எனவே அவர்களுக்கு புரிகிற மொழியில் அவர்களுக்கு கர்த்தர் பாடத்தைக் கற்றுக்கொடுத்து இஸ்ரவேலருக்கு சேரவேண்டிய சம்பளத்தைப் பெற்றுத்தந்தார். அந்த செல்வங்களைக் கொண்டுதான் அவர்கள் கர்த்தருக்கு வனாந்திரத்தில் ஆசரிப்புக்கூடாரம் அமைத்தார்கள்.

கொடுப்பது கர்த்தருடைய பழக்கம். அது அவருக்கு மிகவும் பிடித்த பழக்கமும் கூட. ஆனால் பெற்றுக்கொண்ட செல்வத்தை வைத்து ஆசரிப்புக்கூடாரம் அமைத்து கர்த்தருடைய பிரசன்னத்தின் நடுவில் சமாதானமாக வாழ்வதும் (யாத் 25:8), பொன்கன்றுக்குட்டி செய்து, வணங்கி சங்காரமாவதும் மனிதர்களின் கையில்தான் இருக்கிறது.

கர்த்தருக்காக துறந்தவர்கள் கர்த்தரை உயர்த்துவதைவிட, தங்கள் தியாகத்தையே உயர்த்திப்பேசி தங்களைத் தாங்களே பொன்கன்றுக்குட்டிகளாக மாற்றிக்கொள்ளும் அபாயமும் இருக்கிறது. ஆக, பெறுவது சரியா, துறப்பது சரியா என்பது இங்கு விஷயமல்ல, நமது மனநிலை எப்படி இருக்கிறது என்பதே காரியம்!

ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் (1 கொரி 10:31)

Leave a Reply