அவல், உமி…ஆன்மீக வியாபாரம்!

சமீபத்தில் ஒரு மூத்த ஊழியர் பேஸ்புக்கில் இருந்த தனது நண்பர்களுக்கு ஒரு ஜெபக்குறிப்பை அனுப்பியிருந்தார் அதில் ஒரு பிரதி எனக்கும் வந்திருந்தது. அதாவது அவர் தனது ஊழியத்தளத்தை ஒரு பெருநகருக்கு மாற்றி அங்குள்ள மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப் போகிறாராம். அதற்காக ஜெபிக்க வேண்டுமாம், நல்ல விஷயம்தான்; ஆனால் அதற்காக அவர் அனுப்பியிருந்த ஜெபக்குறிப்புதான் எனக்கு ஜீரணிக்கக் கடினமாயிருந்தது.

அந்த ஜெபக்குறிப்பு இதுதான்: அந்த மாநகரில் ஒரு முக்கியப்பகுதியில் வாடகையே இல்லாமல் ஒரு நல்ல வாடகை வீடு கிடைக்க வேண்டுமாம். இது எப்படி இருக்கிறது?

இந்த ஜெபக்குறிப்பினை வேதவெளிச்சத்தில் ஆராயாமல் எத்தனைபேர் இதற்காக உருக்கமாக ஜெபிக்கத் தொடங்கியிருக்கிறார்களோ தெரியவில்லை. வஞ்சகமும் ஏமாற்றமும் நிறைந்த இந்த உலகில் நியாயமான வாடகைக்கு வீடு கிடைக்கவேண்டும் என்பது அவர் ஜெபக்குறிப்பாயிருந்தால் பரவாயில்லை அதற்காக ஜெபிக்கலாம். ஆனால் ஒரு மாநகரின் முக்கியப்பகுதியில் ஒரு ஏமாளி ஒரு வசதியான வீட்டைக் கட்டி அதை தனக்கு இலவசமாகக் கொடுப்பதற்க்குக் காத்திருக்க வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்ப்பது எத்தனை அசிங்கமான காரியம்!!

இதற்குப் பதிலாக இந்த ஊழியர் அந்த ஏமாளிக்கு என்ன கொடுப்பார்? தனது பாக்கெட்டில் இருந்து தேவ ஆசீர்வாத வாக்குத்தத்தங்களை எடுத்து தாராளமாக அள்ளிக் கொடுப்பார், இவரை ஆசீர்வதிக்கும்படி ஆண்டவருக்கு அன்புக் கட்டளையிடுவார். இது முதலீடற்ற, வாயில் வடை சுடும் வியாபாரமல்லவா?

நான் அந்தக் குறிப்பிட்ட ஊழியரை மட்டும் குறிவைத்து இந்தக் கட்டுரையை எழுதவில்லை. இதுபோல அடுத்தவன் பொருளை ஆசீர்வாத ஆசைகாட்டி அபகரித்துக் கொண்டு அதை “தேவ ஆசீர்வாதம்” என்று மேன்மை பாராட்டும் கபட்டு (அந்தி)கிறிஸ்தவ ஊழியர்கள் அநேகர் அநேகர் இன்று புற்றீசலாய் பறந்து வந்துகொண்டிருக்கிறார்கள்! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!

இந்த ஜெபக்குறிப்பைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது எங்கள் தெருவுக்கு காலை வேளைகளில் அடிக்கடி பவனிவரும் ஆன்மீக வண்டிதான், அந்த வண்டி பக்திப்பாடல்களை ஸ்பீக்கரில் சப்தமாக ஒலிபரப்பியபடி வரும். அந்த வண்டியை ஓட்டிவருபவர் ஒரு மகான்போல வேடமணிந்து வருவார். அவரிடம் மக்கள் பணத்தை காணிக்கையாகக் கொடுப்பார்கள். அதற்குப் பதிலாக அந்த மக்களுக்கு அவர் திருப்பித் தருவது என்ன தெரியுமா? ஒன்றுமில்லை…அந்த சின்ன வண்டிக்குள் இருக்கும் சுரூபத்தின் தரிசனம்தான். அதே சுரூபம் தங்கள் வீட்டிலிருந்தாலும்கூட ஜனங்கள் பணம் கொடுத்து வண்டிக்குள் இருக்கும் சுரூபத்தை தரிசித்துவிட்டுச் செல்வார்கள்.

போலி ஆன்மீகவாதி ஜனங்களுக்கு போலியான வாக்குறுதிகளையும், போலியான அனுபவங்களையும் கொடுத்து அதற்க்குப் பதிலீடாக அவர்களிடமிருந்து விலைமதிப்புடைய உலகப் பொருட்களை தனக்கு ஆதாயமாகப் பெற்றுக் கொள்ளுகிறான், உலகத்திலேயே அநியாயமான கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் என்று ஒன்று இருந்தால் அது இதுதான். இது போன்ற அநியாய வியாபாரத்தைப் பற்றித்தான் கிராமப்புறங்களில் அருமையாகச் சொல்வார்கள்

“நான் உமி கொண்டுவருகிறேன், நீ அவல் கொண்டுவா…நாம் இருவரும் அதை ஊதி ஊதித் தின்போம்”

பிரியமானவர்களே! பாலியல் தொழிலாளர்கள் கூட தனக்குப் பணம் கொடுக்கும் வாடிக்கையாளாரின் பணத்துக்குத் தகுந்த சேவையை தருகிறார்கள். அவர்கள் செய்வது சாக்கடைத் தொழிலாயிருந்தாலும் அதில் ஒரு சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் உலகிலேயே மிக மோசமான வஞ்சகர்கள் இந்த ஆன்மீக வியாபாரிகள்தான். தாங்கள் செய்வது சன்மார்க்கத் தொழிலாயிருந்தாலும் அதை இவர்கள் செய்யும் விதம் சாக்கடையை விட துர்நாற்றமடிப்பதாயிருக்கிறது.

ஊழியர்கள் காணிக்கை வாங்குவதைக் குறித்து நான் குற்றம் சொல்லவேயில்லை. வேதமும் அதை அங்கீகரிக்கிறது. சுவிசேஷத்தை அறிவிப்பவனுக்கு சுவிசேஷத்தினால் பிழைப்புண்டாகவேண்டுமென்பது தேவ நியமம். ஆனால் உனக்கு சுவிசேஷம் அறிவித்துவிட்டு பதிலுக்கு உன்னையே பட்சிப்பேன் என்பது என்னவகை ஆன்மீகம்?

“பிறன் பொருளை இச்சியாதிருப்பாயாக…” என்ற பத்தாவது கட்டளை பழைய ஏற்பாட்டோடு முடிந்துவிட்டது என்று நினைத்து விட்டார்கள் போலும்,

இவருக்கு இலவசமாக வீட்டைக் கொடுத்த ஏமாளியை ஆண்டவர் ஆசீர்வதிப்பார் என்பதற்க்கு இவரால் கியாரண்டி கொடுக்க முடியுமா? அவருக்குக் குருட்டாம்போக்கில் ஒரு நன்மை நடந்துவிட்டால் போதும் இவரே அவருக்குக் கடவுளாகிவிடுவார். வாடகையில்லாமல் இலவசமாக வீட்டைத் திறந்துகொடுத்ததற்கே இவ்வளவு ஆசீர்வாதமென்றால் இவருக்கு வீட்டையே எழுதிக் கொடுத்துவிட்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவாரே! ஊழியக்காரர் என்ற போர்வையில் அலையும் பலர் இன்று அடுத்தவன் பணத்தில் கொழுக்கக் காரணம் இப்படிப்பட்ட வேதத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை வாசிக்காமல் ஏமாறும் ஏமாளிகள் நாட்டில் நிறையப்பேர் இருப்பதே! ஜாக்கிரதை!!

கழைதின் யானையார் என்ற தமிழ்புலவர் எழுதிய புறநானூற்றுப் பாடல் ஒன்று பாடப் புத்தகங்களில் உள்ளது:

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;

இதன் அர்த்தம் பிச்சை கேட்பது இழிவானது, ஆனால் அதைவிட அப்படிக் கேட்பவனிடம் பிச்சை கொடுக்கமாட்டேன் என்று மறுப்பது அதனினும் இழிவானது. பெற்றுக்கொள் என்று ஒருவனிடம் கொடுப்பது உயர்வானது ஆனால் அதைவிட ஒருவன் கொடுக்கும்போது பெற்றுக் கொள்ளேன் என்று மறுத்துவிடுவது அதனினும் உயர்வானது என்பதாகும்.

இத்தகைய உயர்வான பண்பை வேதாகமப் பரிசுத்தவான்கள் அனைவரிடத்திலும் நாம் பார்க்கலாம். அப்போஸ்தலர் பவுலின் சாட்சியைப் பாருங்கள்:

ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை.நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன். (அப் 20:33-35).

பழைய ஏற்பாட்டுக்கு வருவோம், தகப்பன் ஆபிரகாமின் சாட்சியைப் பாருங்கள்:

ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்…என்றான் (ஆதி 14:22,23).

1. ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கும் ஆண்டவர் (யோவா 10:11)
2. மந்தைக்காக தன் ஜீவனைக் கொடுக்கும் திருச்சபைத் தலைவர்கள்(1 தெச 2:8)
3. தன் சக சகோதரனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கும் விசுவாசி (1 யோவா 3:16)

பிரியமானவர்களே இந்த மூன்றும்தான் உண்மை கிறிஸ்தவத்தின் அடையாளம்!!! இதுதான் பிதாவின் பரலோகக் குடும்பம். ஆனால் தான் பிழைக்க அடுத்தவனுடையதை உருவிக்கொள்ளுவது மிருகத்தின்(அந்திகிறிஸ்தவ) மதம்.

எனக்கு ஒரு ஊழியரைப் மிகவும் பிடித்திருக்கிறது அவருடைய ஊழியத்துக்கு அவர் கேட்காமலேயே என் வீட்டை நானே இலவசமாக திறந்து கொடுக்க நினைக்கிறேன் என்றால் அது வேறுவிஷயம். ஆனால் அந்த ஊழியரே வந்து எனக்கு உங்கள் வீட்டை இலவசமாகத் திறந்து கொடுங்கள், உங்கள் பொருட்களையும் நகைகளையும் எனக்கு தாரைவார்த்துக் கொடுங்கள் அப்போது ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் என்று கேட்பதும் அப்படி எதிர்பார்ப்பதும் இரயிலில் மயக்க பிஸ்கட்டைக் கொடுத்து சூட்கேஸை லவட்டிச் செல்லும் ஜேப்படித் திருடனுடைய செயலுக்கு சமானம்.

இந்தக் காலத்தில் மிக மிக மிக எளிதாக வாழ்க்கையில் செட்டில் ஆக சிறந்த வழி ஊழியம்(!!??) செய்வது. காரணம் எந்த முதலீடும் தேவையில்லை, ஆம்வே மாதிரி ஆரம்ப நாட்களில் சற்று கடின உடல் உழைப்பு தேவைப்படும். ஒரு கூட்டம் சேர்ந்தபின்னர் எந்தக் கவலையுமில்லை, பின்னர் குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிடலாம். தன் காலத்துக்குப் பின் அந்த வருமானத்தை அப்படியே பிள்ளைகளுக்கு திருப்பி விட்டுவிடலாம் அதை வைத்து அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். (இந்த வசதி ஆம்வேயில் கூட இல்லை என்று நினைக்கிறேன்). இதெல்லாம் நிறைவேற வேண்டுமானால் “பைபிள்” என்ற புத்தகத்தை ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருந்து அதிலிருந்து பத்து பிரசங்கம் செய்யத் தெரிந்துவிட்டால் போதும்.

வேதம் இப்படிப்பட்டவர்களைக் குறித்து எச்சரிக்கிறது:

இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்; விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.

செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி,தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது. இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. (2 பேதுரு 2: 13-17)

அதற்காக நான் இன்று உண்மை ஊழியர்களே இல்லை என்று நான் சொல்லவரவில்லை. இன்றும் உண்மை ஊழியர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் நமக்கு அவர்களை அடையாளம் காணத் தெரியவில்லை. அவர்களை அங்கீகரியாமலும் கனப்படுத்தாமலும் போனது அவர்கள் குற்றமல்ல, நம் குற்றம். நாம் ஊழியக்காரனிடம் இயேசுவின் சுபாவத்தைத் தேடியிருப்போமானால் மெய்யான ஊழியனை முதல் தேடலிலேயே கண்டறிந்திருப்போம். நாம் ஊழியக்காரன் வழியாக உலக ஆசீர்வாதங்களையும், சரீர சுகத்தையும், தீர்க்கதரிசனங்களையும் அற்புத அடையாளங்களையும் அல்லவா தேடுகிறோம். நாம் இந்த அளவைகளை வைத்து ஜீவியகாலமெல்லாம் தேடினால்கூட ஒரு மெய்யான ஊழியனையும் கண்டறிய நம்மால் இயலாது.

நாம் ஒரு துரதிருஷ்டசாலிகள்! ஏனெனில் நம்காலத்தில் அச்சடிக்கப்பட்ட வேதாகமம் எளிதாகக் கிடைக்கிறது. அதை சாத்தான் தன் ஆளுகைக்குட்பட்ட மனிதர்களிடம் கொடுத்து அதைக்கொண்டே நம்மை வஞ்சிக்கிறான். எத்தனை துர்உபதேசங்கள், எத்தனை புரட்டுகள்துர்!! எத்தனை போலிகள்!! எத்தனை சபைப் பிரிவுகள்!!!

நாம் பாக்கியவான்கள்! ஏனெனில் நம்காலத்தில் அச்சடிக்கப்பட்ட வேதாகமம் எளிதாகக் கிடைக்கிறது. அதை தேவன் நம்கையில் கொடுத்து நாம் அதை கருத்தாய் வாசித்து தூய ஆவியானவரை அண்டிக்கொண்டு கடைசிகால வஞ்சகத்துக்குத் தப்பித்துக்கொள்ளும் போக்கையும் உருவாக்கியிருக்கிறார்.

வஞ்சிக்கப்படுவதும், தப்பித்துக்கொள்வதும் நம் கையில்!!

6 thoughts on “அவல், உமி…ஆன்மீக வியாபாரம்!”

  1. நல்ல ஒரு சாட்டை.
    சம்பந்தபட்டவர்களுக்கு உறைத்தால் நல்லது.

  2. அன்பு சகோதரருக்கு,

    உங்களுடைய பல செய்திகளும் கருத்துக்களும் எனக்கு பலமுறைகள் மிக பிரயோஜனமாக இருந்துவந்திருக்கின்றன. உங்களுக்காகவும் உங்கள் ஊழியங்களுக்காகவும் சர்வ வல்ல ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். துதியும் கனமும் மகிமையும் அவருக்கே உண்டாவதாக.

    மேலே நீங்கள் எழுதியுள்ள சில கருத்துக்களுக்கு எனக்கு மறுப்புகள் உண்டு. இது நீங்கள் அவசரப்பட்டு எழுதியது போலிருக்கி|றது.

    அந்த குறிப்பிட்ட பட்டணத்திலே இருக்கிற விசுவாசிகளுக்கு அவருடைய தேவையினை தெரியப்படுத்தும் உள்நோக்கமும், பெற்றுக்கொண்ட வீட்டை தன் சொந்த தேவைகளுக்காக உபயோகிக்கும் உள்நோக்கமும் இல்லாதிருக்குமானால், அந்த ஊழியர் ஜெபிக்க சொன்னதிலோ ஜெபக்குறிப்பிலோ எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. கர்த்தரிடத்திலிருந்து பெரிய காரியங்களையும் அரிய காரியங்களையும் தானே நாம் எதிர்பார்க்க வேண்டும், சாதாரணமாய் வாடகைக்கு வீடு எடுக்க அவர் ஆண்டவரிடத்தில் எதற்கு செல்லவேண்டும், வீட்டு ஓனரிடத்தில் அல்லவா செல்லவேண்டும். மனுஷராலே கூடாதவைகள் தேவனாலே கூடும். மனுஷராலே கூடாதே போகும்போது அங்கு கர்த்தருடைய கிரியை தொடங்கும்.

    நேரடியாக ஒரு விசுவாசியினிடத்தில் உங்களுடைய வீட்டை இலவசமாக எனக்கு கொடுங்கள் என இவர் கேட்காதவரை, அது எப்படி ஏமாற்றுவதும் வஞ்சகமாகவும் இருக்கமுடியும்.

    ஆசீர்வாதம் கொடுப்பது ஆண்டவராயிருக்கும்போது, எந்த ஊழியரும் விசுவாசிகளுக்காக ஜெபிக்கத்தான் முடியுமே தவிர, அவர்களின் ஆசீர்வாதத்திற்க்கு எந்த உத்தரவாதத்தையும் தரமுடியாது. ஒருவேளை உங்களால் முடியுமா என்பதுகுறித்து எனக்கு தெரியவில்லை.

    //இது முதலீடற்ற, வாயில் வடை சுடும் வியாபாரமல்லவா?// முதலீடு போட்டு செய்வதா ஊழியம்? முதலீடு போட்டால்தானே வியாபாரம்? ஊழியத்தை வியாபாரமாக்க ஆலோசனை சொல்லுகிறீர்களா? பேதுருவும் யோவானும் என்ன முதலீடு போட்டார்கள்? வெள்ளியும் பொன்னும் அவர்களிடத்தில் இல்லையே.

    //பாலியல் தொழிலாளர்கள் கூட/// வேதம் கடுமையாக கண்டனம் செய்கிற விபச்சார பாவத்தை, வருமானமீட்டும் தொழிலாக நீங்கள் அங்கீகரித்ததும், அதனை தேவனுடைய ஊழியர்களோடு ஒப்பிட்டதும் வேதனையிலும் வேதனை.

    தங்களின் ஆற்றாமைக்கு வேதம் உதவவில்லையென புறநானூற்றுக்குப் போய்விட்டீர்களோ? நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வேத வசனங்கள் கூட உங்கள் கருத்துகளுக்கு வலுசேர்க்கவில்லை.

    கடைசியாக வேதத்திலிருந்து இரண்டு சம்பவங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    1. கொஞ்சமே இருந்த மாவிலும் எண்ணையிலும் அடை சுட்டு உண்டு செத்துப்போக மனதாயிருந்த சாறிபாத் விதவையினிடத்தில் எலியா முதல் அடையை தனக்கு கேட்டாரே, அதை ஏமாற்றும் வஞ்சம் என கூறலாமா? தீர்க்கனுடைய வார்த்தைக்கு அவள் கீழ்படிந்ததினாலே பஞ்சகாலம் முழுவதும் அவளும் அவள் மகனும் போஷிக்கப்பட்டார்களே…… (1 இராஜாக்கள் 17:10-16)

    2. தன்னிடம் தன் ஜீவனத்துக்கு இருந்த எல்லாவற்றையும் காணிக்கைப் பெட்டியிலே போட்ட ஏழை விதவையினிடத்தில் (லூக்கா 21:1-3) ஆண்டவர் கொள்ளையடித்தார் என்று சொல்லுவீர்களா? ஆஸ்திகளை விற்று சீஷருடைய பாதத்திலே வைத்த ஆதித்திருச்சபை விசுவாசிகள் வஞ்சிக்கப்பட்டார்களா?

    நல்லவேளை அந்நாட்களில் நீங்களும் இல்லை உங்கள் பிளாக்கும் இல்லை. இருந்திருந்தால் ஆண்டவரையும் அப்போஸ்தலர்களையும் கண்டனம் பண்ணி சில பதிவுகள் பதிவாகி இருந்திருக்கும்.

    கர்த்தர்தாமே உங்களுடைய இந்த பதிவை வாசிக்கிற கர்த்தருடைய பிள்ளைகள் வழுவிப்போகாமல் காத்துக்கொள்வாராக.

    பி.கு. : நான் ஃபேஸ்புக் பயன்படுத்துவதை நிறுத்தி பல மாதங்களானபடியால், நீங்கள் குறிப்பிட்ட ஊழியரையோ ஜெபக்குறிப்பை பற்றியோ இதற்குமுன்பு அறிந்திருக்கவில்லை. உங்கள் பதிவின் மூலமே அறிந்துகொண்டேன்.

    1. அன்பு சகோதரர் அவர்களுக்கு,
      இந்த வலைப்பூவை வாசித்து வருவதற்காகவும், தங்களது ஆக்கபூர்வமான கமெண்டுக்காகவும் எனது நன்றிகள், தங்களைப்போன்ற நடுநிலையாக நின்று கணிக்கும் விசுவாசிகளுக்காக கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறேன்.

      அவரது ஜெபக்குறிப்பில் உள்ள “மறைவான பட்சிக்கும் மனநிலையை” தாங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள். இதேமாதிரி ஒரு அப்போஸ்தலர் முதல் நூற்றாண்டில் ஒரு ஜெபகுறிப்பை அனுப்பியிருந்தால் அவரை விசுவாசிகளே விமர்ச்சித்திருந்திருப்பார்கள். எந்த ஒரு உண்மையான விசுவாசியும் தன்னுடைய லாபம் இன்னொருவருக்கு நஷ்டம் என்ற நிலை வந்தால் அவன் அந்த லாபத்தைப் புறக்கணித்து நஷ்டத்தைத் தெரிந்துகொள்ளுவான்.

      அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக (பிலிப்பியர் 2:4). தங்களது வாதம் சரி என்று தாங்கள் நினைத்தால் புதிய ஏற்பாட்டிலிருந்து இப்படிப்பட்ட ஒரே ஒரு ஜெபக்குறிப்பை சுட்டிக்காட்டுங்கள் பார்க்கலாம். அற்புதங்களை சுட்டிக்காடாதீர்கள் அது ஆண்டவரின் தாராளமனதைக் காட்டுகிறது. ஜெபகுறிப்பை சுட்டிக்காட்டுங்கள் அதுதான் மனிதனின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டும்.

      நாம் தேவனிடத்திலிருந்து எதைப் பெறுகிறோம் என்பது விஷயமல்ல, தேவனுக்கு எதைத் தருகிரோம் என்பதே நமக்குப் பிரதானம். “ஆண்டவரே என் சகோதரைக் காத்தருளும் அதற்க்குப் பதிலாக என் பெயரை ஜீவபுஸ்தகத்தில் இருந்து கிறுக்கிப் போடும்” என்பதுதான் தேவனுடைய மனிதனின் ஜெபம்.

      மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.(ரோமர் 9:3) இதுதான் பவுலின் மனநிலை. இப்படிப்பட்ட ஜெபக்குறிப்புகளைத்தான் நீங்கள் வேதத்தில் பார்க்கமுடியும்.

      வாடகையில்லாமல் வீடுதருவதோ அல்லது வாடகைக்கு வீடுதந்து அந்த தேவையை சந்திக்க உழைப்பதற்க்கு பெலன் தருவதோ தேவன் எடுக்க வேண்டிய முடிவு. என் மனநிலை எதுவாக இருக்கவேண்டும்? எந்த சூழலிலும் கிறிஸ்துவின் சிந்தையை காத்துக்கொள்வது, மனதளவில் கூட அடுத்தவருடைய பொருளின் மேல் இச்சை ஏற்படாது என்னைக் காத்துக்கொண்டு கர்த்தருக்கு பிரியமாய் ஜீவிப்பது இவை மட்டுமே!

      இந்த காலத்தில் இப்படிப்பட்ட ஜெபக்குறிப்புகளும் சாட்சிகளும் பெருகிவிட்டதால் நமக்கு எல்லாம் பழகிவிட்டது, எல்லாவற்றையும் ஆவியானவர் துணைகொண்டு வேதவெளிச்சத்தில் நிதானித்துப்பார்த்தால்தான் மறைந்திருக்கும் விஷங்களெல்லாம் வெளியே கொட்டும்.

      1. அன்புள்ள சகோதரருக்கு.

        தங்களின் அன்புக்கு நன்றி.

        நீங்கள் அந்த ஊழியருடைய ஜெபக்குறிப்பை அவருடைய தேவைக்கான குறிப்பாய் பார்க்கிறீர்கள். என் கண்களுக்கு அது தேவனுடைய ஊழியத்தைக் கட்டுவதற்கான தேவைக்கான குறிப்பாய் தெரிகிறது. அதுவே வித்தியாசம்.

        //அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக // எதற்காக இந்த வசனத்தை இங்கு கொடுத்தீர்கள் என புரியவில்லை.

        //தங்களது வாதம் சரி என்று தாங்கள் நினைத்தால் புதிய ஏற்பாட்டிலிருந்து இப்படிப்பட்ட ஒரே ஒரு ஜெபக்குறிப்பை சுட்டிக்காட்டுங்கள் பார்க்கலாம்.// இதற்கான பதிலை முன்பே கொடுத்திருந்தேன். தாங்கள் கவனிக்கவில்லை போல. ஆஸ்திகளை விற்று சீஷருடைய பாதத்திலே வைத்தனரே, அதற்கு இரண்டு வசனம் முன்னால் என்ன எழுதியிருக்கிறது என்று பாருங்கள். “அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்”. அதுதான் (உபதேசம், ஜெபம்) அந்த காரியங்களை செய்ய அவர்களை உந்தியது. ஆனால் இந்த ஊழியர் ஜெபம் மட்டுமே செய்யக் கேட்டுள்ளார்.

        நம்மைத்தவிர யாருமே சரியான விதத்தில் ஊழியம் செய்யவில்லை என நினைத்து மற்ற எல்லா ஊழியர்களையும் ஒரே விதமாய் எடை போடுவது எவ்விதத்திலும் சரியல்ல. வேலைக்காரரின் கண்கள் எஜமான்களின் கைகளை நோக்கியிருப்பதைப் போல, தேவனுடைய ராஜ்ஜியத்தைக் கட்டுவதற்கான தேவைகளுக்காக ஆண்டவரிடத்தில் ஜெபிப்பதில் என்ன தவறு இருக்கமுடியும் என்பதுதான் எனக்கு புரியவில்லை?

  3. Dear brother Vijay, very good keep it up, yes if any one wants to truly serve god, I belive he will not ask others to pray for his worldly needs ,especially like this. Praise god for your message.

  4. கிறிஸ்து இயேசுவின் சிந்தை(பிலி.2:4,5) உள்ளவர்களுக்கு மட்டுமே உங்கள் மூலம் பேசும் பரிசுத்த ஆவியானவரின் எண்ணம் புரியும். மற்றவர்களுக்கு அருளப்படவில்லை என இயேசுவே விதைக்கிறவனுடைய உவமையைப் பற்றிய சம்பவத்தில் கூறியிருக்கிறார். நீங்கள் தொடருங்கள்.

Leave a Reply