அரைத்த மாவு

வேதத்தில் கர்த்தராகிய இயேசு பிசைந்த மாவு, புளித்த மாவு பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். ஒருவேளை இக்காலத்தில் அவர் வாழ்ந்தால் “அரைத்த மாவு” என்று வேறு ஒரு விஷயத்தைக் குறித்தும் பேசியிருந்திருப்பார். அதென்ன அரைத்த மாவு?

“வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும்…” என்று அப்போஸ்தனாகிய பவுல் 1 தீமோ 1:3-இல் கூறுகிறார். வேற்றுமையான உபதேசங்களைத்தான் போதிக்கக்கூடாது என்று பவுல் சொன்னாரேயொழிய அரைத்த மாவையே அரைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இன்று பெரும்பாலான சபைகளில் பிரசங்கம் என்ற பெயரில் அரைத்த மாவுதான் வருடக்கணக்காக அரைக்கப்படுகிறது.

நான் இங்கு குறை சொல்வதாக போதகர்கள் தயவு செய்து சிந்திக்க வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாவிட்டால் நாளை நீங்கள் இதற்காக பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.

ஒரு வீட்டில் புதிதாக ஒரு குழந்தை பிறந்திருக்கிறதானால் வீட்டிலுள்ள அத்தனைபேரின் கவனமும் அந்த புதிய குழந்தை மீதுதான் இருக்கும். அந்தக் குழந்தைக்கு அண்ணன் ஒருவன் இருப்பான், தனக்கான அன்பும், அரவணைப்பும், கவனிப்பும் போதிய அளவில் கிடைக்கவில்லை என அவன் உணரும்போது அவன் கவனம் நண்பர்கள் பக்கம் திரும்பும். நாளடைவில் அவன் வீட்டை விட்டு தானாகவே அந்நியப்பட்டுவிடுவான். இதே நிலை இன்று சபைகளிலும் ஏற்பட்டு இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

இந்திய கிறிஸ்தவம், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு கிறிஸ்தவம் பல தலைமுறைகளைக் இன்று கடந்து நிற்கிறது. 70 முதல் 90களில் பிறந்த ஒரு தலைமுறை, இளவயதிலேயே இரட்சிக்கப்பட்டு, திருச்சபையிலேயே வளர்ந்து, வசனத்தை நன்கு கற்று வளர்ந்து நிற்கிறது. இந்த அண்ணன்களின் ஆவிக்குரிய பசிக்கு இன்று நம்மால் தீனி போட முடிகிறதா என்பதே இன்றைய கேள்வி!

இன்று யூடியூபில் ஆயிரக்கணக்கான பிரசங்கங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் ஒருசிலவற்றைத் தவிர ஏனைய செய்திகள் எல்லாமே அரைத்த மாவுதான். எதையாகிலும் புதிதாகக் கற்றுக்கொண்டோம் என்று எதுவுமே இல்லை. பிரசங்கியார் பிரசங்கத்தை ஆரம்பித்தால் அடுத்தடுத்து இறுதிவரை என்ன பேசுவார் என்பதை எளிதாக யூகித்துவிட முடிகிறது. இவர்கள் தாங்களாக தேவசமுகத்தில் அமர்ந்து புதிதாக கற்றுக்கொள்ளவில்லை, ஏற்கனவே பிரபலமாக இருக்கும் சிந்தனைகளை காப்பியடித்தோ அல்லது காலங்காலமாக கிறிஸ்தவ பொதுப்புத்தியில் ஊறிக்கிடக்கும் விஷயங்களையோதான் பிரதிபலிக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

மாபெரும் எழுப்புதல்களைச் சந்தித்த ஐரோப்பிய நாடுகளில் இன்று பெரும்பாலான திருச்சபைகள் வெறிச்சோடிக் கிடப்பதற்கும், பல திருச்சபைக் கட்டிடங்கள் வேற்று மத வழிபாட்டுத் தலங்களுக்கு விற்கப்படுவதற்கும் காரணம் இதுதான். அங்குள்ள அறிவுப்பசி மிகுந்த இளம் தலைமுறைக்கு அந்த சபைகளால் தீனிபோட முடியவில்லை. வேதம் எப்பொழுதுமே புதிதானதுதான் எனவே பிரச்சனை வேதத்தில் இல்லை, போதிக்கும் நம்மிடம்தான் பிரச்சனை இருக்கிறது. ஐரோப்பிய திருச்சபைகளின் நிலை இங்கும் வராமலிருக்க வேண்டுமானால் நாம் இப்போதே விழித்துக்கொள்ள வேண்டும்.

இதைச் சொன்னவுடன் போதகர்கள் தரப்பிலிருந்து வரும் எதிர்வாதம் என்னவென்று எனக்குத் தெரியும். “ஏற்கனவே கற்றுக்கொண்ட சத்தியங்களுக்கே இன்னும் கீழ்ப்படியவில்லை என்னும்போது புதிது புதிதாக ஆவியானவர் எப்படிப் பேசுவார்?”

இந்தக் கேள்வியே தவறு, இந்தக் கேள்விக்குப் பின்னால் இருக்கும் புரிதலும் தவறு. வசனத்தைக் கேட்டவுடனே ஒருவன் அதற்குக் கீழ்ப்படியக் கூடுமானால் அது அவனது சுயபெலத்தைச் சார்ந்ததாகவும், கிரியையின் அடிப்படையிலான காரியமாகவும் அமைந்துவிடுகிறது. வசனத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டு, புதுப்புது வெளிப்பாடுகளைக் கொண்டு அதைப் புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் அவன் மனம் மறுரூபம் ஆக ஆகத்தான் அவன் கனிகொடுக்க ஆரம்பிக்கிறான். சத்தியம்தான் அவனை மறுரூபப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் வார்த்தையானவரும், அவரைத் தொடர்ந்து ஆவியானவரும் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார்கள். கேட்டவுடன் கீழ்ப்படிவது மனிதனுக்கு சாத்தியமென்றால் வார்த்தையானவரும், ஆவியானவரும் தேவையில்லை, தேவன் மோசேக்குத் தந்த இரண்டு கற்பலகைகளே போதுமானதாக இருந்திருக்கும்.

அப்படியானால் எங்கள் பிரசங்கங்களின் மூலம் ஆவியானவர் பேசாமலா இருக்கிறார் என்று சிலர் கேட்கக்கூடும். நிச்சயமாக பேசுகிறார். ஒவ்வொரு வார ஆராதனைகளிலும் கேள்விகளோடும், பிரச்சனைகளோடும் வரும் மக்களுக்கு பிரசங்கத்தின் மூலம் ஆவியானவர் பேசி தீர்வைக் கொடுத்துத்தான் அனுப்புகிறார். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது போதுமானதல்ல, திருச்சபை என்பது வெறுமனே நமது கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மட்டும் பதில் தரும் “enquiry center” அல்ல. ஒரு மறுபடியும் பிறந்த விசுவாசிக்குள் இருக்கும் ஆவி அதற்கும் மேலான ஒன்றை வாஞ்சிக்கிறது. பிறந்த குழந்தை பாலுக்கு அழுவது போல அது அழுகிறது. அந்தப் பசியை “வெளிப்பாடு” ஒன்று மட்டும்தான் பூர்த்தி செய்ய முடியும்.

எப்பொழுதாவது ஒரு புதிய வெளிப்பாட்டைக் கேட்டவுடன் உங்கள் ஆவி மனிதன் உள்ளுக்குள் துள்ளிக் குதிப்பதையும், ஆனந்தக் கூத்தாடுவதையும் உணர்ந்திருக்கிறீர்களா? அந்த உணர்வு நமது சரீரம் வரை பிரதிபலிக்கும். கண்களில் நீர் சொரியும், உடலில் இருக்கும் ரோமங்களெல்லாம் கூச்செரிந்து நிற்கும். இதைத்தான் நமது ஆவி எதிர்பார்க்கிறது. பிரசங்கியார் வார்த்தை ஜாலம் செய்து, சத்தமாக கத்தி, அதற்கேற்றார்போல இசைக்கருவிகள் முழங்கும்போது ஏற்படும் ஒரு போலியான goosebumps உணர்வை நான் இங்கு குறிப்பிடவில்லை. அதற்கெல்லாம் உங்கள் ஆவி மனிதன் மயங்க மாட்டான். ஆனால் ஆவியானவரிடமிருந்து ஒரு புதிதான, ஆழமான வெளிப்பாடு வரும்பொழுதோ எலிசபெத் வயிற்றிலிருந்த யோவான் ஸ்நானகன் போல துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிடுவான். ஆம், ஆழத்தை ஆழம் கூப்பிட்டுக்கொண்டேதான் இருக்கும்.

இத்தகைய ஆழமான, புதிய வெளிப்பாடுகளுக்குத்தான் இன்றைய சபைகளில் பஞ்சம் இருக்கிறது. திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே. குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பாரில்லை(புல 4:3,4) என்ற நிலைதான் சபைகளில் இன்று இருக்கிறது. எனவேதான் வளர்ந்த விசுவாசிகள் பலர் கூட வேற்றுமையான உபதேசங்களை நோக்கி திரும்பிவிடுகிறார்கள். ஜென் பெளத்தம், ஓஷோ, சத்குரு, பரமஹம்ச யோகானந்தர், தியாசஃபி என அவர்களை இழுத்துக்கொள்ள ஏகப்பட்ட விஷயங்கள் வெளியே காத்திருக்கிறது.

இதுபோல திசைமாறி மீண்டும் கர்த்தரிடம் வந்து சேர்ந்த அனுபவம் எனக்கும்கூட இருக்கிறது. ஜோதிடம், அக்கல்ட், கான்ஸ்பிரசி தியரிகள், எனர்ஜி ஹீலிங் என்று திசை மாறிப்போன என்னை “பின்மாற்றக்காரன்” என்று முத்திரை குத்தி கிறிஸ்தவம் ஒதுக்கியதே தவிர என் கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை. என்னிடத்தில் பேசினால் தங்கள் விசுவாசம் போய்விடுமோ என்று அநேகர் பயந்தார்கள். எனக்கு மட்டும்தான் இந்த அனுபவம் என்று பார்த்தால் இன்று என்னைப்போல இரட்சிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலான பல விசுவாசிகள் சத்தியத்துக்கு வெளியே தியானம், யோகா, ஜோதிடம் என தேடலை ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்து அதிர்ந்தே போனேன். இணையத்தில் அத்தனைக்கும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது.

எனக்கன்பான போதகர்களே, அதனால்தான் இந்த வேண்டுகோளை உங்கள் முன் தாழ்மையாக வைக்கிறேன். ஒரு போதகராக உங்களுக்கு இருக்கும் சுமைகளையும், வேலைப்பளுவையும் நான் நன்கு அறிவேன். பல குடும்பங்களுக்கு ஆவிக்குரிய தகப்பனாக உங்களை தேவன் நியமித்திருக்கிறார். அதன் அழுத்தம் என்னவென்பதையும் நான் அறிவேன். ஒரு வளர்ந்த விசுவாசிக்கு புதிது புதிதான ஆவியின் வெளிப்பாடுகளைக் கொடுத்து, அவன் ஆவியைப் பசியாற்றி அவனை கிறிஸ்துவுக்குள் வளர்க்கவில்லையானால் அவர்கள் வனாந்தரத்தில் ஒருவிதமான தனித்து விடப்பட்ட மனநிலைக்குள் போய்விடுவார்கள். அவர்களது ஆவி திருப்தியற்று தவிக்க ஆரம்பித்துவிடும். அப்படிப்பட்ட சூழலில்தான் இன்று அநேக ஆவிக்குரிய “அண்ணன்மார்கள்” இருக்கிறார்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்.

உங்களுக்கு ஆயிரம் வேலைப்பளுக்கள் இருக்கட்டும்,”பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்” என்ற ஆதி அப்போஸ்தலர்கள் எடுத்த அந்த திடமான முடிவை எடுத்துவிடுங்கள். தேவ சமுகத்தில் அமர்ந்து வேதத்திலிருந்து புதுப்புது அதிசயங்களைப் பெற்று முதலாவது நீங்கள் அதை அனுபவியுங்கள், பிறகு எங்களுக்கும் அதைப் பகிர்ந்து கொடுங்கள்.

முதிர்ந்த விசுவாசிகளே! நீங்கள் எதிர்பார்க்கும் உணவு உங்கள் சபையில் இல்லையென்றால் நீங்கள் அதை சபைக்கும், சத்தியத்துக்கும் வெளியே போய் தேட வேண்டிய அவசியமில்லை. கர்த்தர் உங்கள் கையிலேயே வேதத்தைக் கொடுத்திருக்கிறார். அதைக் கற்றுத்தரும் ஆவியானவரும் உங்களோடு கூடவே இருக்கிறார். யாராவது உணவை ஊட்டிவிட வேண்டிய பருவத்தை நீங்கள் கடந்துவிட்டீர்கள். இது நீங்களே வெளிச்சம் கொடுக்க வேண்டிய தருணம்.

Leave a Reply