நீங்கள் போகும் வழியில் தடையாக ஒரு அரண் குறுக்கிட்டால் அதைச் சுற்றி நடந்து போவதும், அல்லது அதில் ஏறிக் கடந்து போவதும் அந்த அரணுக்கு மகிமை. ஆனால் அந்த அரணை இருந்த சுவடு தெரியாமல் நிர்மூலமாக்கிவிட்டுக் கடந்து போனால் அது தேவனுக்கு மகிமை!
எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது (2 கொரி 10:4). நமக்கு கொடுக்கப்பட்ட ஆயுதங்களும், தேவபெலனும் அரண்களை சுற்றி நடந்து போகவும், ஏறிக் கடந்து போலவும் அல்ல.
தேவன் நம்மிடம்தான் எப்போதும் நன்முறையில் நடந்துகொள்வார், பிசாசிடம் எப்போதும் வன்முறைதான், அந்த வன்முறையிலும் நீதியிருக்கும். அன்று அந்த வன்முறையில் சிக்கி சின்னாபின்னமானதுதான் எரிகோ கோட்டை. பிள்ளைகளின் குறுக்கே செங்கடல் வந்தால் கப்பல்களை அனுப்பி அவர்களைக் கடக்க வைத்திருக்க முடியும். ஆனால் ஆழ்கடலைப் ரெண்டாகப் பிளந்துதான் கடக்க வைப்பார்.
வெண்கலக் கதவுகள் எதிர்ப்பட்டால் உடைப்பார். எந்த இரும்புத் தாழ்ப்பாழையும் அவரால் திறக்க முடியும். ஆனால் அதை முறித்துப் போடுவதுதான் அவரது புயத்துக்குப் பெருமை. ராஜாக்களின் இருதயத்தை நீர்க்கால்களைப் போல திருப்புகிறவரால் பார்வோனின் இருதயத்தில் கருணையை ஊற்றி இஸ்ரவேலரை விடுதலையாக்கியிருக்க முடியும். ஆனால் பார்வோனுக்கு அந்த treatment-தான் சரி. தகப்பனைப் போலத்தான் பிள்ளைகளும் இருக்க வேண்டும்.
அரண்களோடு சமரசம் செய்யாதீர்கள், ஆவியின் பெலனால் அவைகளை சர்வ சங்காரம் பண்ணிவிட்டுக் கடந்துபோங்கள்!