பக்கத்து ஊருக்கு பயணப்பட்ட ஒரு தந்தையும் மகனும் கழுதையில் செல்லும்போது எதிர்ப்படும் மக்களின் கருத்துக்களுக்கேற்ப அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டே இருந்து கடைசியில் சளைத்துப்போய் இனி அடுத்தவர்களது விமர்ச்சனங்களுக்கு செவிகொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்த ஈசோப் நீதிக்கதையை நம் அனைவரும் சிறு வயதில் கேள்விப்பட்டிருப்போம்.
ஆவிக்குரிய பயணத்திலும், அதிலும் விசேஷமாக ஊழியத்திலும் அப்படித்தான். பலதரப்பட்ட சபை மற்றும் உபதேசப் பின்னனியிலிருந்து வரும் மக்களை நாம் கடந்து செல்ல வேண்டியதிருக்கலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்லுவார்கள். யார் என்ன சொன்னாலும் நாம் காது கொடுத்துக் கேட்கத்தான் வேண்டும். பயனுள்ள ஆலோசனைகளுக்கு நாம் தாராளமாக கீழ்ப்படியலாம்.
ஆனால் பலநேரங்களில் அப்படி இருப்பதில்லை. பலருடைய கருத்துக்கள் மற்றும் விமர்ச்சனங்களில் “நீ இதைப் பின்பற்றினால்தான் எங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளப்படுவாய்” என்ற அபாயகரமான ஒரு கொக்கி இருக்கும். அந்தக் கொக்கியில் நாம் சிக்கினால் எடுப்பார் கைப்பிள்ளையாகிவிடுவோம்.
கர்த்தராகிய இயேசு தனது ஊழியத்தை தொடங்கியதிலிருந்து சிலுவையில் முடிக்கும்வரை அந்த சோதனை அவரைத் தொடர்ந்துகொண்டே இருந்தது. “நீ சிலுவையிலிருந்து இறங்கி வா! உன்னை எங்கள் இராஜாவாக ஏற்றுக்கொள்கிறோம்” என்று சவால்கள் எழுப்பியவண்ணம் இருந்தன. அவரது ஊழிய நாட்களில் “வானத்திலிருந்து எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்ட வேண்டும்” என்று ஒரு கூட்டம் அவருக்கு ஒரு நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்தது. பிசாசின் சோதனையும்கூட “நீர் தேவனுடைய குமாரனேயானால்…” என்ற கொக்கியோடுதான் தொடங்கியது.
ஆதி அப்போஸ்தலர்கள் போல யூதரை ஆதாயப்படுத்த யூதனாகவும், ரோமனை ஆதாயப்படுத்த ரோமனாகவும் மாறுவதில் தவறு இல்லை. அந்த ஒரு வளைந்து கொடுக்கும் குணாதிசயமும் ஒரு தேவனுடைய மனிதனுக்குள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த வளைந்து கொடுத்தல் வேறு, அது தேவனுக்காகவேயன்றி நமது ஆதாயத்துக்காக அல்ல!
ஆனால் நம்மை ஆட்டிவைக்கும் கட்டுப்பாட்டை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட்டு அவர்களிடம் நம்மை இழப்பது என்பது வேறு! உலகத்தில் பல ஆயிரம் சபைகள் உள்ளன, பல ஆயிரம் போதனைகள் உள்ளன. அவர்களுக்காக நாம் பல ஆயிரம் வேஷங்களைப் போடமுடியாது. எங்கே வளையவேண்டும், எங்கே நிமிர வேண்டும் என்று ஒரு கர்த்தருடைய பிள்ளைக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
சரி என்று பட்ட விஷயங்களில் மாறுவதில் தவறு இல்லை. அங்கு பிடிவாதம் பிடித்தால் அங்கு சுயம் கிரியை செய்கிறது என்று பொருள். சரியில்லாத விஷயங்களுக்காக வளைந்து கொடுக்கக்கூடாது, அப்படிச் செய்தால் அங்கும் சுயமே கிரியை செய்கிறது.