அசைக்கப்படுவதில்லை…

எந்த ஒரு வீரனும் போரில் தான் தோல்வியடைவது குறித்து கலங்க மாட்டான். ஆனால் அவனது வலிமை இகழப்படும்போது கூனிக் குறுகிப் போவான். இராட்சத கோலியாத்தின் வலிமை கவணோடும் கல்லோடும் வந்த சிறு தாவீதால் அப்படித்தான் இகழப்பட்டது.

ஒருவர் உங்களை ஓங்கி கன்னத்தில் அறைகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அறை வாங்கிய நீங்கள் அசையாமல் இருக்கிறீர்கள், ஆனால் அடித்த அவர் கைவலியால் துடிக்கிறார் என்றால் அடித்தது அவராக இருந்தாலும் வென்றது நீங்கள்தான். சிங்கம் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து பலங்கொண்ட மட்டும் பீறிப்போட்ட பின்னும் ஆட்டுக்குட்டி எழுந்து தத்தித் தத்தி நடந்து போய் தனது மந்தையோடு சேர்ந்துகொள்ளுமானால் அந்த இடத்தில் காட்டுராஜாவின் கிரீடம் புழுதியில் விழுகிறது. இதைவிட வேறு அவமானம் அதற்கு இல்லை.

தேவன் சிறியவர்களாகிய நம்மைக் கொண்டு பெருமைக்கார சாத்தானை இப்படித்தான் தாழ்த்துகிறார். நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை (2 கொரி 4:8). எல்லாப் பக்கங்களில் இருந்தும் அவன் நம்மை நெருக்கி, நொறுக்கி, சின்னாபின்னப்படுத்திய பின்னரும் எழுந்து, உதறிப்போட்டு, மீண்டும் சீயோனை நோக்கி நடக்கத் துவங்குவோமானால் அங்கே அவனது மகிமை தூளிலே தாழ்த்தப்படுகிறது. அவன் நம்மை எவ்வளவாய் ஒடுக்கினானோ அவ்வளவாய் நாம் பெருகுவதில்தான் அவனது ஒட்டுமொத்த அவமானமும் அடங்கியிருக்கிறது.

எந்த எளிய மனிதர்களைப் பயன்படுத்தி தனக்கு மகிமையையும், ஆராதனையையும் பெற்றுக்கொள்ளத் துடிக்கிறானோ அதே மனிதர்களைக் கொண்டு அவன் வலிமையை இகழுவதுதான் தேவனுக்கு மகிமை!

Leave a Reply