உலகத்தில் எந்த மனிதனும் பேசியிராத, பேசமுடியாத சில வசனங்களை இயேசுவால் மாத்திரமே பேச முடிந்தது. அவற்றுள் ஒன்றுதான் இந்த யோவான் 14:30 “இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை” என்கிற வசனம். வேதத்தில் எனக்கு மிக மிக மிக பிடித்த வசனங்களில் இதுவும் ஒன்று. இது வெறும் வசனமல்ல.. ஒட்டுமொத்த மனுக்குலத்தின் பிரதிநிதியான மனுஷகுமாரனின் வெற்றி முழக்கம்!
இந்த ஒன்றுமில்லையின் அர்த்தம் வெறுமை அல்ல…ஆளுமை! ஒன்றுமில்லை என்றவரின் கை வெறுங்கை அல்ல, சாத்தானை செவுட்டில் அடித்து வீழ்த்திய பெரும் கை!
அந்த ஒன்றுமில்லைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போமா!
ஆராதனைக்காரன் லூசிபரை அருவருப்பின் அடையாளமாக மாற்றியதுதான் இந்தப் பெருமை எனும் பாவம், அந்தப் பெருமை வறுமையுற்றது இயேசுவிடம் மட்டுமே! அல்லும் பகலும் ஆராதிக்கப்பட்டவராக இருந்தும் அனைத்தையும் துறந்து அடிமை ரூபமெடுத்து மனுஷசாயானவரிடம் பெருமையை எங்கே தேடுவது? ஆராதித்தவனை வீழ்த்திய பெருமையால் ஆராதிக்கப்பட்டவரை அணுகக்கூட முடியவில்லை. உலகில் யாரையும் என்னால் வீழ்த்த முடியும் என்று இனி பெருமை பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது! ஆக…பெருமை இவர்முன் நில்லாது!
பயம் என்பது மனிதனின் நிழல் போன்றது. அது அவனை எப்பொழுதும் விடாமல் தொடர்கிறது. இயேசுவோ தாம் எதற்காக, யாரால், இன்னவிதமாய் மரிக்கப் போகிறோம் என்று தெரிந்தே பிறந்தார். அவர் உடல் பிளக்கப்பட்ட போதுகூட இரத்தமும் தண்ணீருந்தான் மிச்சமின்றி வந்ததே தவிர அச்சம் அணுவளவேனும் வெளியேறவில்லை. அது இருந்தால்தானே வருவதற்கு? காரிருளில் கரும் கடலுக்குள் கடும்புயல் வீசிகொண்டிருக்கையில் அதற்குள் சாவகாசமாக வாக்கிங் போவதற்க்கு வேறு யாரால் முடியும்? கொடுங்கோலன் ஏரோது அதிகாரத்தில் இருக்கையிலேயே சொல்லி வைத்து அவன் எல்லைக்குள்ளேயே பிறந்தவர் இவர்! வளர்ந்து நாட்டு நடப்புகளைக் கண்டபின்னராவது இவருக்கு ஏரோதிடம் பயம் வந்ததா? எள்ளளவும் இல்லை, நான் சொன்னதாக போய் அந்த நரிக்கு சொல்லுங்கள் என்ற இந்த யூத ராஜசிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டு உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமல்ல உலகத்தின் அதிபதிக்கே உள்ளூர உதறல் எடுத்திருக்கும்! கொடும் மரணத்துக்கே அஞ்சாவர் களிமண்ணான ஏரோதைக் கண்டா அஞ்சுவார்! அவன் மணிமுடி இவர் காலடி தூசுக்கு சமம்! ம்ம்ம்..பயமும் இவரிடம் செல்லாது!
உலகோர் எல்லோருக்கும் கவலைகளை அள்ளித்தரும் கொடூரக் கொடையாளிதான் இந்த உலகத்தின் அதிபதி. அப்படிப்பட்ட அவனையே கன்னத்தில் கை வைத்து கவலையுடன் மூலையில் அமரவைத்தவர்தான் இயேசு! காரணம் இவரை வீழ்த்தும் ஆயுதம் எதுவும் அவனிடம் இல்லை. அவனது பிரதான அஸ்திரமாகிய மரணத்தையே முனையை மழுங்கடித்து மூலையில் வீசிவிட்ட இந்தக் கன்மலையிடம் இனி வேறு எந்த ஆயுதத்தைக் கொண்டுதான் மோதுவது?! காகங்களையும் காட்டு புஷ்பங்களையுமே கவலைக்குள்ளாக்க விடாமல் உணவளித்து, உடுத்துவிக்கும் அவர் தானா கவலைப்படுவார்? அண்ட சராசரங்களைக் கட்டி ஆளும் எல்ஷடாயின் பிள்ளை இவர், கவலை என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கும் இடத்திலிருந்து வந்தவர் இவர். ஆக கவலையும் இவரிடம் ஃபெயில்!
நசரேயனாகிய சிம்சோனைப் பதம்பார்த்த பிசாசின் ஆயுதமொன்று நாசரேத்தூர் இயேசுவிடம் மண்ணைக் கவ்வியது! அதுதான் இச்சை! இச்சையடக்கமுள்ள பல இளைஞர்களைப் பிசாசு பார்த்திருப்பான். ஆனால் இச்சையடக்கமே ஒரு இளைஞனாக வந்ததை அவன் இயேசுவிடம்தான் பார்த்திருப்பான்! தாவீதின் வம்சம்தானே! பத்சேபாள்களுக்கு மயங்கிவிடுவார். எல்லோரையும் இச்சையை வைத்து இம்சை செய்வதுபோல இவரையும் பிடித்துவிடலாம் என்று மனக்கணக்கு போட்டிருப்பான். ஆனால் இயேசுவுடன் இடைப்பட்ட கன்னிகைகள் யாவரும் கண்ணியமுள்ளவர்களாய் மாறினார்களே தவிர இவரைக் கண்ணிகளால் வசப்படுத்த யாராலும் இயலவில்லை! பிதாவின் திவ்ய பிரசன்னத்தில் திருப்தியடைந்தவர் இவ்வுலகத் தேன்கூடுகளை மிதிக்கத்தானே செய்வார்! (நீதி 27:7) ஆக இச்சை எனும் விக்கெட்டும் அங்கு காலி!
பிலேயாமையும் கேயாசியையும் கொள்ளை கொண்ட பொருளாசையே, போய் இறைமகன் இயேசுவைக் கவர்ந்து கொண்டு வா! என்று ஒரு வேளை உலகத்தின் அதிபதி பொருளாசையை அனுப்பியிருப்பான். அது இவரது முகவரியை விசாரித்துப் பார்த்து மிரண்டே போயிருக்கும்! வானம் எனக்கு சிங்காசனம், பூமி எனக்கு பாதபடி என்று சொன்னவரின் பிள்ளையை எந்தப் பொருளைக் காட்டி மயக்குவது?! பொன்னும் வெள்ளியும் வேண்டுமானால் இவரிடம் மயங்கி இவர் பின்னாலே போகும். இருக்கிறவராகவே இருக்கிறவரின் இன்முகத்தையே தரிசித்த இவருக்கு இகத்திலுள்ள இரத்தினங்கள்கூட இருளாகத்தானே தெரியும்!? தன் முதல் முயற்சியிலேயே தலைகுப்பறக் கவிழ்ந்தது பொருளாசை!
இயேசுவை பிடிக்க முடியாவிட்டாலும், இயேசுவை பிடிக்க முயன்றவர்களைப் பிடிக்க பிசாசுக்கு உதவியதுதான் இந்தப் பொறாமை எனும் பேராயுதம்! இயேசுவைப் பிடிக்க பொறாமைக்கு கட்டளை கொடுக்கலாம் ஆனால் யாரைக் கொண்டு இயேசுவை பொறாமைக்குள்ளாக்குவது? இந்தக் கேள்விக்கு பிசாசிடம் இன்றுவரை பதில் இல்லை! முக்காலத்திலும் எக்காலத்திலும் அப்படியொருவன் வந்ததுமில்லை, வரப்போவதுமில்லை. ஆகவே பொறாமைக்கு இப்போரில் பங்கே இல்லை!
பெருந்தீனிக்காரர் பல்லாயிரம் பேரைக் கண்டவனாயிற்றே பிசாசு! பெருந்தீனியால் இவரை வசப்படுத்தலாம் என்று நினைத்து, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எத்தனை கோடிகள் செலவிட்டாலும் இவரது விருப்ப உணவைக் கொண்டு இவரை உணவுக்கு அடிமையாக்குவது என்று முடிவெடுத்து இவரது ஃபேவரைட் மெனு எதுவென ஆராய்ந்தவன் பிதாவின் சித்தம் செய்வதே இயேசுவின் விருப்ப உணவு (யோவா 4:34) என்று அறிந்து அதிர்ந்தே போய்விட்டான்! காரணம் அந்த உணவை இவர் உண்டால் இவன் யுகாயுகங்களாகக் கட்டிவைத்த அஸ்திபாரங்களே நொறுங்கி விடுமே!இயேசுவின் விஷயத்தில் சாஅத்தான் பெருந்தீனியை பட்டினி போடவேண்டியதாயிற்று! ஆக பெருந்தீனி முதல் சுற்றிலேயே நாக்அவுட்!
மூர்க்கம், உக்கிரம், எரிச்சல் என்ற மூன்றையும் அனுப்பிப் பார்த்தான்… அவைகள் மூர்க்கமாக முன்னேறிச் சென்று இயேசுவுக்குள் உக்கிரமாக நுழைய முயன்று ஊசிமுனையளவும் இடம் காணாமல் எரிச்சலுடன் திரும்பி வந்தன. தாங்கள் கால் நுனி வைக்கக்கூட அந்த நடமாடும் தேவாலயத்தில் இடமில்லையென அவை தங்கள் எஜமானனிடம் அறிக்கையிட்டன!
இனியும் வேறென்ன?…
தான் ஆணென்ற அகங்காரம் இல்லை, அழகனென்ற அகம்பாவம் இல்லை, யூதெனன்ற இனப்பெருமை இல்லை, வேற்று இனத்தோர்மேல் வெஞ்சினமும் இல்லை, பேதைகள்மேல் உதாசீனம் இல்லை, மேதை என்கிற மமதையும் இல்லை, ஒடுங்கிக் கிடக்க விலங்குகள் இல்லை , முடங்கிக் கிடக்க சோம்பலும் இல்லை, மதவாதிபோல் மாய்மாலம் இல்லை, பரிசேயன்போல பகல்வேஷமும் இல்லை, யூதத் தலைமைக்கு இணங்கவில்லை, ரோம அரசுடன் தோழமையும் இல்லை, சொத்துக்கள் குவிக்கும் இலக்குகள் இல்லை, சொந்தங்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதித்ததும் இல்லை, ஆசாரியப் பட்டங்களுக்கு அலைந்ததும் இல்லை, மோசேயின் சட்டங்களை மீறியதும் இல்லை, தாசரின் தவறுகளை உணர்த்தத் தயங்கியது இல்லை, சீசரின் வரிகளைச் செலுத்த தாமதித்ததும் இல்லை. வறுமையை பிடித்துக்கொள்ளவில்லை, ஐசுவரியத்திடம் பிடிபடவும் இல்லை, நோய்கண்டு வாடியதில்லை, பேய்கண்டு ஓடியதுமில்லை, வெறுப்பு இல்லை, கசப்பு இல்லை, சலிப்பு இல்லை, நடிப்பு இல்லை, உலகத்தின்மேல் பிடிப்பும் இல்லை, பகைமை இல்லை, கயமை இல்லை, சிறுமை இல்லை, வெறுமை இல்லை, பிதாவோடு இருந்ததால் தனிமையும் இல்லை. இல்லை இல்லை இல்லை..ஒன்றும் இல்லை…
“இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை”
அவரது காலுக்கடியில் குற்றுயிராய் நெளிந்து கொண்டிருந்த தலை நசுக்கப்பட்ட சர்ப்பமொன்று ஆமோதித்து முணுமுணுத்தது.. ஆம் அவருக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை… என்னிடமும் அவரை வீழ்த்த ஒன்றுமில்லை….
– சகோ.விஜய்