உம் அரசு வருக (பாகம் – 1)
இரும்புத்திரை நாடுகள் என்று அழைக்கப்படும் கிறிஸ்தவத்துக்கு எதிரான ஆட்சி நிலவும் நாடுகளில் திருச்சபைகள் இருக்கும், இயங்கும் ஆனால் அச்சபைகளில் பிரசங்கிக்கப்படும் செய்திகள் அரசாங்கத்திடம் காட்டப்பட்டு அவர்கள் அதை வாசித்து அனுமதித்த பின்பே பிரசங்கிக்கப்படும். இந்த சபைகளில் மெய்யான சத்தியத்தைக் கேட்க வாய்ப்புண்டா? நிச்சயமாக இல்லை. ஆனால் அதே தேசங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்காத ரகசிய கிறிஸ்தவக் குழுக்களிடையே ஆழமான கிறிஸ்தவ விசுவாசத்தைக் காணலாம். அவர்கள் தங்கள் விசுவாசத்திற்க்காக இரத்த சாட்சிகளாய் மரிக்கவும் ஆயத்தமாயிருப்பார்கள். அவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் தேவ செய்தி அத்தகைய வல்லமையுடையதாய் இருக்கும்.
அதுபோலவே பூமியின் அரசுகளுக்கெல்லாம் பெரிய அரசாகிய “பணத்தையும் மனிதனையும் மையமாகக் கொண்ட உலக அரசின் (World System)” கட்டுப்பாட்டின் கீழ் மனிதனையும், பணத்தையும் மையமாகக் கொண்டு இயங்கும் சபைகளிலும் மெய்யான சத்தியத்தைக் கேட்க ஒருபோதும் வாய்ப்பு இல்லை. இத்தகைய சபைகள்தான் பாபிலோன் என்று அழைக்கப்படுகின்றன, இத்தகைய பாபிலோன் சபைகளுக்குள் கட்டுண்ட விசுவாசியால், பாபிலோனின் எல்லைகளைத் தாண்டி பறக்கவே முடியாது. அவன் கையில் வேதம் இருக்கும் ஆனால் வேதம் தரும் ஞானம் இருக்காது.
அப்படி இன்றைய கிறிஸ்தவம் அறியாமல் தவறவிட்ட அதிமுக்கிய செய்திகள் பல. இதைத்தான் கடைசி நாட்களில் கடும் வசனப்பஞ்சம் நிலவும் என்று ஆமோஸ் தீர்க்கன் எச்சரித்தார்.
இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். (ஆமோஸ் 8:11)
மனிதன் எப்பொழுதெல்லாம் சுயநலத்தால் ஆட்கொள்ளப்படுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனுக்குப் பரலோகக் கதவு அடைக்கப்படுகிறது. அரிசியும் பருப்பும் கிடைக்கலாம் ஆனால் தெய்வீக மன்னாவாகிய “நீதிமொழிகள் புத்தகத்தில் சொல்லப்பட்ட ஞானம்” ஒருபோதும் சுயநலவாதிக்குக் கிடைப்பதில்லை. உலகப்பிரகாரமான அரிசியையும் பருப்பையும் தெய்வீக ஆசிகள் என்று எண்ணி ஏமாந்துபோகும் ஒளியின் பிள்ளைகளை என்னவென்று சொல்வது! கர்த்தர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பொழியப்பண்ணுகிறார் என்ற வசனத்தை நீங்கள் வாசித்ததில்லையா? பின்னர் தேவபிள்ளையின் விசேஷந்தான் என்ன? அவனுக்கு கிறிஸ்துவானவர் பிதாவின் வலதுபாரீசத்தில் வீற்றிருக்கிற இடத்துக்குரிய மேலான காரியங்கள் அறிவிக்கப்படுகிறது.
எனவேதான் வனாந்திரத்தில் கிறிஸ்துவின் சுயநலம் முதலாவது சோதிக்கப்பட்டது என்பதை அறிவீர்களா? அவர் அந்தக் கற்களை அப்பங்கற்ளாக்கி புசித்திருந்திருப்பாரானால், அதாவது தாம் பெற்ற வல்லமையை தன் சொந்தநலத்துக்குப் பயன்படுத்தியிருப்பாரானால் இன்று நமக்கு ஒரு நம்பிக்கையும் இல்லாது போயிருந்திருக்கும். சுயத்தின் சுவடுகூட இல்லாத உலகின் முதல் மனிதன் இயேசு கிறிஸ்து. எனவேதான் அவர் வாயினின்று உலகம் கண்டிராத ஞானமும், வரலாற்றைப் புரட்டிப்போடும் ஆவிக்குரிய புரட்சிகளும் உண்டாயின. என்று நமது சுயத்தின் வேரருகே கோடரி வைக்கப்படுகிறதோ அன்று பரத்தின் கதவுகளும் பலகணிகளும் நமக்காகத் திறக்கப்பட்டு நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்கள் நமக்கு அறிவிக்கப்படுகிறது.
இப்படி கிறிஸ்தவம் தவறவிட்ட பிராணவாயு போன்ற முக்கியமான செய்தியைத்தான் இந்தத் தொடரில் வாசிக்கப் போகிறோம். உங்களுக்குத் தெரியுமா? கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்த மூன்றரை வருடங்களும் ஒரே செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரே Topic-ஐத் திரும்பத்திரும்பப் பிரசங்கித்துக் கொண்டே இருந்தார், கேட்பவர்களுக்கு சலிப்புத் தட்டிவிடுமோ என்பது பற்றியெல்லாம் அவர் கவலைப்படவே இல்லை. சொல்லுவதைச் சொல்லிவிட்டு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சிம்பிளாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுவது அவர் வழக்கம்.
அது என்ன topic?
ஆசீர்வாதம்?…
விசுவாசம்…?
தெய்வீக சுகம்?…
ஜெபம்?…
இவைகளெல்லாம் இல்லை. பின்னர் வேறு என்ன செய்தி அது?…..
”பரலோக ராஜ்யம்”
ஆம், அவர் திரும்பத் திரும்ப பிரசங்கித்தது பரலோக ராஜ்யம் குறித்த செய்தியே? அவரது முதல் பிரசங்கமே “மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது” என்பதுதான் (மத் 4:17). அவர் சொன்ன உவமைகளெல்லாம் பரலோக ராஜ்யம் பற்றியவையே!
குரு எதைப் முக்கியப்படுத்தி போதித்தாரோ அதையே தானும் செய்பவனே சீஷன். அதற்க்கு யோவான் ஸ்நானன் நல்ல உதாரணம். அவன் இயேசுவுக்கு முன்பாகவே ஊழியத்தைத் துவங்கினாலும் அவனது பிரசங்கம் இயேசுவின் பிரசங்கம் போலவே இருந்தது.
அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான். (மத் 3:1,2)
இயேசு தனது சீடர்களைப் பிரங்கிக்க அனுப்புகையில் என்ன பிரசங்கிக்கச் சொல்லி அனுப்பினார் பாருங்கள்!
இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். (மத் 10: 5-7)
இப்போது நான் உங்களைக் கேட்கிறேன், நீங்கள் கடைசியாக பரலோக ராஜ்யம் குறித்த செய்தியைக் கேட்டது எப்போது? இதிலிருந்து இன்றைய கிறிஸ்தவம் எங்கே இருக்கிறது என்று புரிகிறதா?
பரலோக ராஜ்யம் என்றால் என்ன? பரலோகமும் பரலோக ராஜ்யமும் ஒன்றா? வெவ்வேறா?
உதாரணத்துக்கு இரண்டு நாடுகளை எடுத்துக் கொள்வோம். ஒன்று இந்தியா இன்னொன்று அதன் அண்டை நாடான பர்மா. இப்பொழுது நாம் செய்யப்போவது ஒரு கற்பனையான ஒப்பீடுதான். பர்மாவை ஒரு கொடுங்கோல் அரசனால் ஆளப்படும் ஒரு ராஜ்யமாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த அரசனைப் போலவே தேசத்தின் system மிகக் கொடுமையானதாக இருக்கிறது. எனவே அங்கு பஞ்சமும், உள்நாட்டுக் கலவரங்களும், வேலையின்மையும், வறட்சியும் தாண்டவமாடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமக்களும் மரிக்கவே விரும்புகிறார்கள்.
பர்மாவின் அண்டை நாடான இந்தியாவோ ஒரு அற்புதமான அரசர் நல்லாட்சி செய்யும் ஒரு உன்னதமான வல்லரசு நாடு. அங்கு (கற்பனையில்தான்) மக்கள் ஒரு குறைவுமின்றி சுபிட்சமாக வாழ்கிறார்கள், தேனும் பாலும் ஓடுகிறது, அதற்க்குக் காரணம் அந்த நல்ல மன்னரால் அந்த தேசத்துக்கு அளிக்கப் பட்ட நல்ல system.
இத்தகய சூழலில் பர்மாவின் தலைநகரான யாங்கூன் நகரத்தின் ஒரு பரபரப்பான பகுதியில் விலையுயர்ந்த கார்கள் பல வரிசை வரிசையாக சர்ர்..சர்ர்ரென்று வந்து நிற்கிறது. ஒரு காரிலிருந்து இந்திய வல்லரசின் தூதர் இறங்கி உரத்த சத்தமாய் கூறுகிறார் “இதோ, சகல பர்மிய மக்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை அறிவிக்கிறேன், உங்களை இந்தக் கொடூர அரசாட்சியிலிருந்து மீட்டு ஒரு உன்னதமான அரசைத் தரவல்ல இரட்சகர் உங்கள் மத்தியில் வந்துவிட்டார், அவர் உங்கள் மத்தியில்தான் இப்போது இருக்கிறார் விரைவில் தன்னை வெளிப்படுத்துவார்”(லூக்கா 2:10-12).
இந்த செய்தி அந்த மக்கள் மனதில் எத்தகைய ஒரு உவகையைக் கொண்டு வந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். சில நாட்களுக்குள் இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரி வந்து ஜனங்களிடையே பேசுகிறார், ”ஆயத்தமாகுங்கள், இந்திய வல்லரசு விரைவில் உங்களைச் சந்திக்கப் போகிறது, பர்மிய ராஜ்யத்தின் பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும்,,அவர் வந்துவிட்டார்,…இதோ அருகாமையில் நிற்கிறார்…(லூக்கா 3: 3-5) என்று கூறுகிறார். சிலர் அவரது அதிகார தோரணையைப் பார்த்து “நீர்தான் அவரா?” என்று கேட்கிறார்கள். அதற்க்கு அவரோ, இல்லை நான் அவரில்லை…அவர் சக்கரவர்த்தியின் ஒரே மகன், நான் அவர் தூதன் அவரது கார் கதவைத் திறந்துவிட்டு அவருக்கு சல்யூட் அடிக்கவும் பாத்திரன் அல்ல…” என்கிறார் (யோவான் 1: 25-27).
சில நாட்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “அவரே” வந்துவிட்டார். அவர் வந்து ஒரு கூட்ட பர்மிய மக்களைச் சந்தித்து, “இதோ, பர்மாவில் இந்திய அரசை ஸ்தாபிக்கப் போகிறேன். நீங்கள் பர்மாவில்தான் இருப்பீர்கள் ஆனால் உங்களிடத்தில் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய அரசைக் கொண்டுவரப்போகிறேன், இனி நீங்கள் பர்மாவில் இருந்தாலும் இந்தியக் குடிமக்களே! பர்மாவின் சட்டம் இனி உங்களைக் கட்டுப்படுத்தாது, இந்தியர்கள் அனுபவிக்கும் எல்லாச் சலுகைகளையும் இனி நீங்களும் அனுபவிக்கலாம் ஆனால் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்திய சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டியதே. மனதிலும் செயலிலும் இந்தியராக மாறுங்கள். நீங்கள் தன்னுடையவராக இல்லாது போய்விட்டபடியால் உங்களுக்கு பர்மாவால் நெருக்கடியும் உபத்திரவமும் நிச்சயமாக வரும். கலங்காதிருங்கள்! நான் பர்மாவின் மீதும் ஆளுகையுடையவராக இருக்கிறேன். நான் வரும்வரை நீங்கள் அவ்வப்போது ஒன்று கூடி ஒருவருக்கு ஒருவர் இந்தியராக வாழக் கற்றுக்கொடுங்கள், ஒருவரையொருவர் தேற்றுங்கள். ஆயத்தப்படுங்கள்.
நான் மீண்டும் புதுடெல்லி சென்று அங்கே உங்களுக்கான ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணிவிட்டு மீண்டும் உங்களிடம் வருவேன். நான் வருகையில் யாரெல்லாம் இந்தியனாக இருக்கிறானோ அவன் என்னுடன் புதுடெல்லி வருவான். பர்மியனாகவே உள்ளவன் பர்மாவிலேயே விடப்படுவான் என்று அவர்களிடம் அதிகார பூர்வமாக அறிவித்து விட்டு புதுடெல்லி புறப்பட்டு சென்று விட்டார்,
இப்போது புரிகிறதா? இந்தக் கற்பனைக் கதையில் இந்தியா பரலோகத்துக்கு அடையாளம், பர்மா பூமிக்கு அடையாளம். பர்மாவில் ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி ”நான் வரும்வரை நீங்கள் அவ்வப்போது ஒன்று கூடி ஒருவருக்கு ஒருவர் இந்தியராக வாழக் கற்றுக்கொடுங்கள், ஒருவரையொருவர் தேற்றுங்கள். ஆயத்தப்படுங்கள்.” என்று சொல்லிவிட்டுச் சென்றாரே அதுதான் சபை. பரலோகத்தின் நீட்சியே பரலோக ராஜ்யம். ஒருநாள் பரலோக ராஜ்யம் பரலோகத்தால் உள்வாங்கிக் கொள்ளப்படும்.
நமது பிரச்சனை என்ன தெரியுமா? இந்தியராக வாழப் பழகுங்கள் என்று அவர் சொன்னதை அந்த ஒருகூட்ட பர்மிய மக்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள், இந்தியர்கள் வேட்டி கட்டினால் நாமும் வேட்டி கட்டுவது, சேலை உடுத்தினால் நாமும் சேலை உடுத்துவது, அவர்கள் தீபாவளி கொண்டாடினால் நாமும் கொண்டாடுவது”…அல்ல அல்ல உள்ளத்தில் யூதனானவனே யூதன் என்று வேதம் கூறுகிறது.
பரலோக ராஜ்யத்தை தியானிக்கத் துவங்கி விட்டோமானால் பாபிலோனின் முகத்திரை தன்னாலே கிழியும். இந்தத் தொடரின் இனி வரும் கட்டுரைகளில் பரலோக ராஜ்யத்தைக் குறித்து மேலும் மேலும் தியானிக்கப் போகிறோம். இத்தனை காலங்களாக பாபிலோன் கட்டிவைத்த அஸ்தபாரங்கள் இடித்துத் தரைமட்டமாக்கிப் போடப்படுவதாக…அஸ்திபாரம் முதலாய் நிர்மூலமாக்கப்பட்டால்தான் புதிய கட்டிடத்தை அங்கு கட்ட முடியும்…இப்போதே மரத்தின் வேரருகே கோடரி வைக்கப் படுகிறது. அடுத்தடுத்த அதிர்ச்சிகளுக்குக் காத்திருங்கள்…
இக்கட்டுரையின் அடுத்த பாகத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்