வேதத்தை நேசிப்பது என்பது என்ன?

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை (சங்கீதம் 119:165)

“உம்முடைய வேதத்தை” என்று இந்த வசனத்தை தமிழ் வேதாகமத்தில் வாசிக்கும்போது நமக்கு சட்டென தோன்றுவது ஒட்டுமொத்த வேத புத்தகம்தான். அதிலும் வேத வசனம் என்றாலே நாம் அதிகம் கேட்பதும், தியானிப்பதும் ஆசீர்வாத வாக்குத்தத்தங்களைத்தான். அந்தக் கோணத்தில்தான் நாம் “வேதத்தின் மேல் நேசம்” என்ற வார்த்தையையும் நாம் புரிந்து கொள்கிறோம்.

ஆனால் ஆங்கில வேதாகமத்தில் இவ்வசனத்தில் “வேதம்” என்ற வார்த்தை “சட்டம்(law)” என்கிற பொருளில் வருகிறது. சங்கீத புத்தகம் இயற்றப்பட்ட காலத்தில் இஸ்ரவேலருக்கு வேதம் என்பது நியாயப்பிரமாண சட்டம் மட்டுமே! கத்தோலிக்க வேதாகமத்தில் இந்த வசனம் கீழ்கண்டவாறு மொழிபெயர்கப்பட்டுள்ளது.

உமது திருச்சட்டத்தை விரும்புவோருக்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை (திருப்பாடல்கள் 119:165)

நமது தவறான சொல் மற்றும் செயல்களின் அறுவடையாக வரும் எதிர்விளைவுகளே நமது சமாதானத்தைக் கெடுத்து, நமக்கு பிரச்சனைகளைக் கொண்டுவருவதாக பல வேளைகளில் அமைந்துவிடுகிறது. நாமோ அவற்றை உணராமல் எல்லாவற்றிற்கும் பிசாசின் மீதே பழிசுமத்திக்கொண்டு உணர்வின்றி இருக்கிறோம்.

தேவனுடைய கட்டளைகளை அல்லது சட்டத்தை நேசிக்கிறவன் அவற்றிற்கு கீழ்ப்படியாமல் இருக்க முடியாது. அப்படிக் கீழ்ப்படியும்போது நம்மையுமறியாமல் நல்லவிதையாகிய சொற்களையும் செயல்களையும் விதைக்கிறவர்களாக இருப்போம் அதன் அறுவடையாக வருவதே சமாதானமும், இடறலற்ற வாழ்க்கைப் பயணமுமாகும்.

தியானத்துக்கு: யோவான் 14:15, 1யோவான் 5:3

Leave a Reply