வேசித்தனம் மட்டும்தான் பாவமா?

“பாவம்”, “பரிசுத்தம்” என்று மிக வைராக்கியமாக பேசும், எழுதும் விசுவாசிகள் சிலரைக் கூப்பிட்டு பாவம் என்று எதைத்தான் சொல்லுகிறீர்கள் என்று கேட்டால் நமக்கு அதிர்ச்சியே மிஞ்சும்.

விக்க்கிரக ஆராதனை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆபாசப் படம் பார்த்தல், சினிமா பார்த்தல், சுயபுணர்ச்சி, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, கண்களின் இச்சை, கெட்டவார்த்தை பேசுதல், ஆபாசமாக உடையணிதல், மேக்கப் போடுதல் என்பனவற்றோடு அவர்களது பாவ லிஸ்ட் முடிந்துவிடுகிறது.

வேதம் “பாவம்” என்று சொல்லுவது இவைகளை மட்டும்தான் என்று நினைப்பதால்தான் இவைகளைச் செய்வதை நிறுத்தியவுடன் அவர்களுக்குள் ஒரு பரிசேயப் பெருமை வந்துவிடுகிறது.

வட்டிக்குக் கொடுப்பது, கடன் வாங்கித் திரும்பச் செலுத்தாதது, தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு உரிய ஊதியம் தராமல் அவர்களை சுரண்டுவது, அடுத்தவனைக் கவிழ்த்துவிட்டு தான் முன்னேறுவது…

அடுத்தவர்களைக் குறித்து புறம் பேசுவது, நன்மை செய்ய வேண்டிய நேரத்தில் அதைச் செய்யாமல் தட்டிக்கழிப்பது, ஜாதி, சமூக அந்தஸ்து பார்த்து பழகுவது. அடுத்தவர் மனம் நோக கேலி செய்வது, எதிலும் சுயநலமாக இருப்பது என மிக மிக மிகப் பெரிய லிஸ்ட் ஒன்று நீண்டுகொண்டே போகும்…

இவற்றையெல்லாம் இன்னும் வைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் புகைப் பிடிப்பதையும், சினிமா பார்ப்பதையும் நிறுத்தியவுடன் தன்னை இயேசுவாகக் கருதிக்கொண்டு அடுத்தவர்களை அற்பமாகப் பார்க்கிறார்கள். இந்த மனப்பான்மை கர்த்தருடைய பார்வையில் அருவருப்பானது.

“மாம்ச இச்சை”-க்கு மட்டும்தான் நரகம், “மேட்டிமை”, “பொறாமை”, “சூழ்ச்சி”, “சுயநலம்”, “பொய்”, “பொருளாசை” இவற்றையெல்லாம் பரலோகம் ஏற்றுக்கொள்ளும் என்று எந்த வேதத்தில் போட்டிருக்கிறது?

பாவம் குறித்து வாய்வலிக்க பேசும் கிறிஸ்தவ சமூகத்துக்கு பாவம் பற்றி சரியான புரிதல் இருந்திருந்தால் இந்நேரம் குறைந்தபட்சம் பல நல்ல பழகுவதற்கு இனிமையான,நம்பிக்கைக்குப் பாத்திரமான மனிதர்களையாவது இந்த சமூகம் பெற்றிருந்திருக்கும். ஆனால் இப்போதோ சிடுசிடு முகத்துடன் அடுத்தவர்களை கிட்டே அண்டவிடாமல் பாத்திரத்தின் வெளிப்புறத்தை மட்டுமே சுத்தமாக்கிக் கொண்டிருக்கும் ஒரு மாய்மாலக் கூட்டமாகத்தான் உருவாகியிருக்கிறோம்.

பாவம் என்பது ஒரு மிகப் பெரிய சப்ஜெக்ட்…அதை ஒரு சிறு கட்டுரையில் விளக்க முடியாது. ஆனால் “மாம்ச இச்சை” தொடர்பான காரியங்கள் மட்டுமே பாவம் என்ற பொதுவான மனநிலையில் இருந்து கிறிஸ்தவர்கள் விடுபடவேண்டும். அதுவும் பாவம்தான் ஆனால் அது மட்டுமே பாவமல்ல…

 

Leave a Reply