விண்மீன்களை ஆளுகிறவர்!

கர்த்தருடைய கிருபையால் தற்பொழுது நான் எழுதத் தொடங்கியிருக்கும் “டாட்” என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை உங்களுக்காக! “டாட் (Da’at)” என்ற எபிரேய வார்த்தைக்கு “அறிவு” என்று பொருள். இந்த நூல் வியப்பூட்டும் பொது அறிவுத் தகவல்களுடன் தேவனுடைய சத்தியத்தையும் இணைத்துத் தருகிறது.

தலைப்பு: விண்மீன்களை ஆளுகிறவர்!

அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? (யோபு 38:31)
கார்த்திகை மீனைக் கட்டி விலங்கிடுவாயோ? (யோபு 38:31 திருவிவிலிய மொழிபெயர்ப்பு)
Canst thou bind the sweet influences of Pleiades (Job 38:31)

பக்தனாகிய யோபு வாழ்ந்ததாகக் கருதப்படும் காலம் கி.மு 2350-க்கும் கி.மு 1750-க்கும் இடைப்பட்டது என்று வேதாகம அறிஞர்கள் சொல்லுகின்றனர். அதாவது ஜலப்பிரளயத்துக்கும் மோசேக்கும் இடைப்பட்ட காலம்.

கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று தமிழில் அழைக்கப்படும் பிலேயடஸ் நட்சத்திரக் கூட்டம் பற்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய யோபுவிடம் தேவன் பேசுகிறார். பழங்காலத்தில் வானில் இந்த நட்சத்திரக் கூட்டம் மிகத் தெளிவாகத் தெரிந்தததாகவும், ஆதி அமெரிக்க பழங்குடிகள் கண் பார்வையினுடைய வலிமையைச் சோதிப்பதற்கு பிலேயடஸைப் பார்த்து அதில் பிரதான 12 நட்சத்திரங்களைக் காணமுடியுமா என்று சோதிப்பார்கள் என்றும் தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

இந்த பிலேயடஸ் விண்மீன் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அவற்றில் பல நமது சூரியனைவிடப் பெரியவை. நம்முடைய பூமியிலிருந்து 400 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறது. சரி, இந்த நட்சத்திரக் கூட்டம் பற்றி தேவன் ஏன் யோபுவிடம் பேசுகிறார் என்ற விஷயந்தான் நம்மை வியப்பில் ஆழ்த்தக் கூடியது.

மற்ற நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து பிலேயடஸ் சற்று வேறுபட்டது. பொதுவாக நட்சத்திரக் கூட்டங்களில் உள்ள நட்சத்திரங்கள் தங்களுக்குள் தனியான சுற்றுவட்டப் பாதைகளில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட வேகத்தில் சுற்றும்.

ஆனால் பிலேயடஸ் Open Cluster வகையைச் சேர்ந்தது. அதில் உள்ள அனைத்து விண்மீன்களும் ஏதோ ஒரு அதிசய வல்லமையால் கட்டுண்டதுபோல ஒரே வேகத்தில் ஒரே திசையில் சுற்றுகின்றனவாம். பொதுவாக நட்சத்திரக் கூட்டங்களில் run away stars என்று அழைக்கப்படும் தன்னிச்சையாக அலைந்து திரியும் நட்சத்திரங்கள் இருக்கும். ஆனால் இந்த நட்சத்திரங்கள் அனைத்தும் கடந்த 100 மில்லியன் ஆண்டுகளாக தங்களது இணைப்பை விட்டு விலகாமல் இருக்கின்றன என்கிறார்கள் அறிவியலாளர்கள். இந்த பிணைப்பு இன்னும் 250 மில்லியன் ஆண்டுகள் தொடருமாம்!

நட்சத்திரங்களைப் பேரிட்டு அழைக்கிற தேவனின் வார்த்தைதான் எவ்வளவு வலிமையானது. பல நேரங்களில் நமது பிரச்சனைகள் தேவனைவிட வலிமையானது என்று எண்ணி சோர்ந்துவிடுகிறோம். பல ஆயிரம் சூரியன்களைக் கட்டி நடத்தும் தேவனுடைய வார்த்தை எத்தனை வலிமையானது என்பதை உணர்த்தவே இந்தக் கட்டுரை!

அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்
(சங்கீதம் 33:9)

சகோ.ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com

Leave a Reply