வாக்குத்தத்த வியாபாரம்

புத்தாண்டு ஆராதனைகளில் சபைகளில் கடைப்பிடிக்கப்படும் வாக்குத்தத்த குலுக்கல் தவறு: அதற்கான எட்டுக் காரணங்கள் கீழே:

வீடியோவைப் பார்த்துவிட்டு கீழ்க்கண்ட கட்டுரையையையும் வாசிக்கவும்:

காரணம் #1
இது முழுக்க முழுக்க விசுவாசிகளைக் கவர்ந்திழுக்கப் பயன்படுத்தப்படும் வியாபாரத் தந்திரமேயன்றி வேறல்ல. முதலாவது ஜனவரி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது ஜானஸ் என்ற ரோமானியக் கடவுளின் பெயராகும். இது God of Doors என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கதவுகளின் தேவனே புத்தாண்டுக்கான கதவைத் திறப்பதாக ரோமானியர் நம்புகிறார்கள். உலகம் இக்காலண்டரை ஏற்றுக்கொண்டதால் நாமும் இதை பின்பற்றும் நிர்பந்தத்துக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம் அவ்வளவே! இக்காலண்டரைப் பின்பற்றுவது பாவமல்ல ஆனால் தேவன் தனக்குரிய காலங்களில் செயல்படுபவர். நாம் பயன்படுத்தும் ஆங்கிலக் காலண்டரை வைத்துத்தான் அவர் தனது வருடாந்திரத் திட்டங்களைப்போட்டு நமக்கு அவற்றை வாக்குத்தத்தமாகக் கொடுக்கிறார் என்று ஒருவர் நம்புவது எத்தனை மதியீனம்!!! அது தேவதூஷணமேயன்றி வேறல்ல கர்த்தரை ஆங்கிலக் காலண்டருக்குள்ளோ, தமிழ்க்காலண்டருக்குள்ளோ, சீனக் காலண்டருக்குள்ளோ அடக்க முடியாது.
காரணம் #2
ஒரு புதிய ஏற்பாட்டு விசுவாசி நேசிக்க வேண்டிய ஏங்க வேண்டிய வாக்குத்தமெல்லாம் பாவத்தை மேற்கொள்ளுவது பற்றிய, நித்திய வாழ்வு பற்றிய வாக்குத்தத்தங்களே! பூமிக்குரிய ஆசிகள் அல்ல. கிறிஸ்துவின் மணவாட்டியின் இருதயத்தை உலகப்பொருளுக்கு நேராகத் திருப்பக்கூடாது. அப்படித் திருப்புவது ஒரு குடும்பப் பெண்ணை விபச்சாரியாகுவதற்குச் சமம். எபிரேயர் 11,12 அதிகாரங்களில் வாக்குத்தத்தங்களைக் குறித்து பேசும் பவுல் நாம் அடைய வேண்டிய நித்திய இராஜ்ஜியத்தின் காரியங்களைக் குறித்தே பேசுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். நாம் இவ்வுலகத்துக்குரியவர்கள் அல்ல. அதற்காக தேவன் நம்மைப் பொருளாதாரத்தில் உயர்த்தவே மாட்டார் என்று நான் சொல்லவில்லை. நமது இருதயம் அதைப்பற்றிப் போகக்கூடாது என்பதே பிரதான நோக்கம். புத்தாண்டில் கொடுக்கப்படுபவையெல்லாம் பூமிக்குரிய ஆசீர்வாதங்களே!
காரணம் #3
வேதத்திலுள்ள எந்த வாக்குத்தத்தையும் பற்றிக்கொண்டு ஜெபிக்கும்போது, அதனை நமக்கு நிறைவேற்ற தேவன் சத்தியமும், நீதியுமுள்ளவராயிருக்கிறார். அதன்படி வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்ள விசுவாசிகளை பழக்குவிக்கும் நோக்கில்தான் சபைகளில் புத்தாண்டு வாக்குத்தத்த குலுக்கல் செய்யப்படுகிறது என்ற ஒரு வாதம் சில சகோதரர்களால் முன்வைக்கப்படுகிறது. அது தவறு ஏற்கனவே சுயநல சேற்றில் உழலும் விசுவாசிகளை அதை விட்டு தூக்கி எடுத்து பிறருக்காகவும் ஜெபியுங்கள் என்று அவர்களைப் பக்குவப்படுத்துவதே கடினமாயிருக்கும் வேளையில், அவர்களை தனது ஆசீர்வாதத்தைச் சுதந்தரிக்கப் பழக்குவிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் 24 மணி நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். சுயத்தை வெறுத்தல் என்ற காரியத்தை முழு கிறிஸ்தவ உலகமும் மறந்துவிட்ட சூழலில் அதில்தான் ஜனங்களைப் பழக்குவிக்க வேண்டுமே தவிர இதில் அல்ல.
காரணம் #4
இது நமது விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு இது துளியும் உதவாது. உதாரணமாக “நீ மாம்சத்தின்படி பிழைக்க இனி மாம்சத்துக்கு கடனாளி அல்ல” என்ற பழைய ஏற்பாடு காணாத மாபெரும் வாக்குத்தத்தம் புத்தாண்டில் தனக்குக் கிடைத்தால் ஒரு விசுவாசி முகம் சுழிப்பான், (இதை எந்த சபையும் வாக்குத்தத்த சீட்டுகளில் எழுதமாட்டார்கள் என்பது வேறு விஷயம்) காரணம் அவன் எதிர்பார்த்தது அது அல்ல. அதே வேளையில் “உன்னை வாலாக்காமல் தலையாக்குவேன்” என்ற வாக்குத்தத்தம் கிடைத்தால் துள்ளிக் குதிப்பான் தனக்கு இவ்வாண்டு வேலையில் Promotion கிடைக்கப் போகிறதென்று. விசுவாசிகளில் உலக சிநேகத்துக்கு தீனிபோடும் முயற்சியே இந்த வாக்குத்தத்த குலுக்கல்.
காரணம் #5
ஒரு வாக்குத்தத்தத்தை தேவன்தான் ஒரு விசுவாசியிடம் அவரே விரும்பி தனிப்பட்ட விதத்தில் தரவேண்டுமே தவிர, அவரிடத்திலிருந்து நாமாகவே பிடுங்கக் கூடாது. நாமாகவே எழுதி நாமாகவே குலுக்கி நாமாகவே எடுத்துக் கொள்வது எப்படி ஆவிக்குரியதாகும்? இயேசுவோ அப்போஸ்தலரோ இம்முறையை போதிக்க வில்லையே!
காரணம் #6
இது ராசிபலன் பார்ப்பதைவிட விட மோசமானது. சபைக் கூடுகை தேவனிடம் குறிகேட்கும் இடமல்ல. நம்மை பலியாக ஒப்புவிக்கும் இடம். ஒருவேளை குலுக்கல் வாக்குத்தத்தம் நிறைவேறாத பட்சத்தில் ஜனங்கள் முறுமுறுத்து தேவனைவிட்டு விலகவும் வாய்ப்புண்டு. இதற்கு தேவனோ அந்த விசுவாசியோ பொறுப்பல்ல. ஜனங்களை கவர்ந்திழுக்க இந்தத் தந்திரத்தைக் கையாண்ட சபையே பொறுப்பு.

காரணம் #7
நாம் தேவனிடத்தில் போனாலே அவர் ஏதாவது ஒன்றைக் கொடுப்பார் என்ற மனநிலை அவரை வேதனைப்படுத்தும் விஷயமாகும். நமது பிள்ளைகள் அதே மனநிலையோடு நம்மை அணுகினால் அது எவ்வளவு நம்மைப் புண்படுத்தும்! எனக்கு வேறு எதுவுமே வேண்டாம் இயேசு போதும் என்று இருக்கும் ஒரு விசுவாசி இம்மாதிரியான எந்த வாக்குத்தத்தத்தையும் எதிர்பார்க்கமாட்டான்.
காரணம் #8
புத்தாண்டு ஆராதனைகளில் தேவனைத் தொழுதுகொள்ளுவது, சகோதர, சகோதரிகளோடு ஐக்கியம் கொள்ளுவதை விட “வாக்குத்தத்த குலுக்கல்” வேளையையே விசுவாசிகள் ஆவலாய் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் நானும் அப்படித்தான் இருந்தேன். இந்த வாக்குத்தத்த சீட்டு மாத்திரம் தரப்படாவிட்டால் பாதிப்பேர்புத்தாண்டு ஆராதனைக்கு வராமல் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்க்க டி.வியில் உட்காந்து விடுவார்கள். அல்லது தூங்கிவிடுவார்கள். ஆராதனையைத் தவறவிட்டுவிட்டால் வாக்குத்தத்தம் பறிபோய்விடும் என்ற எண்ணம்தான் பலரை பதறியடித்துக்கொண்டு சபைக்கு வரவைக்கிறது. இது பாஸ்டருக்கும் தெரியும் தேவனுக்கும் தெரியும்.

2 thoughts on “வாக்குத்தத்த வியாபாரம்”

Leave a Reply