இங்கே சில அரசியல் தலைவர்கள் தங்களைச் சுற்றி துதிபாடிகளை வைத்திருப்பார்கள். அந்தத் துதிபாடிகளின் கூட்டம் அந்தத் தலைவர் என்ன தவறுகள் செய்தாலும், எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் வயிறு வளர்க்க, தங்கள் சுயநலனுக்காக அவர்களை துதிபாடிக்கொண்டே இருக்கும்.
ஆனால் பரலோகம் அப்படிப்பட்ட இடமல்ல, அங்கே தேவன் இடைவிடாமல் ஆராதிக்கப்படுகிறார். தேவன் சர்வாதிகாரியல்ல, அவர் வலுக்கட்டாயமாக ஆராதனையை வாங்குகிறவருமல்ல, அங்கே ஆராதிக்கிற கூட்டம் தங்கள் சுயநலனுக்காக அவரை துதிப்பதுமில்லை. தேவன் தாம் யாராக இருக்கிறார் என்பதற்காகவும், அவரது கிரியைளுக்காகவுமே பரலோகத்தில் அவர் துதிக்கப்படுகிறார்.
அவர் யாராக இருக்கிறாரோ அந்த நிலையிலிருந்து அவர் மாறுவதே இல்லை. ஆகவே பரலோகத்திலும் ஆராதனை நிறுத்தப்படுவதே இல்லை. அவரிடம் குறை காணவும், பரலோக ஆராதனையை நிறுத்தவும் பாதாள சேனைகள் எப்போதும் முனைப்பாயிருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால் தேவன் அதற்கான வாய்ப்பை ஒருபோதும் வழங்குவதில்லை.
ஒருவேளை அவர் தனது குணாதிசயத்திலிருந்து மாறி, அல்லது அவரிடம் குறைகாணப்பட்டு அதைப் பாதாளம் சுட்டிக்காட்டி, அதற்குப் பின்னும் அவருக்கு அங்கு ஆராதனை தொடர்ந்து நடக்குமானால் பரலோகம் பரலோகமாய் இருக்காது. ஆனால் பரலோகம் பரலோகமாவும், பாதாளம் பாதாளமாகவுமே யுகா யுகங்களாகத் தொடர்வதற்குக் காரணம் தேவன் மாறாதவராய் இருக்கிறார் என்பதே!
தேவனுடைய ஆராதிக்கப்படுவதற்குரிய குணாதிசயங்களில் ஒன்று அவர் சொன்ன சொல் மாறாதவர் என்பதாகும். பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? என்று எண்ணாகமம் 23:19 சொல்லுகிறது.
இந்த பூமியில் கடைக்கோடியில் இருக்கும் ஒரு எளிய மனிதனுக்கு தேவன் ஒரு வாக்குத்தத்தம் கொடுத்து அதை அவர் நிறைவேற்றும் முன்னர் அவன் ஒரு கொள்ளை நோயில் மரித்துப் போவானானால். பூமி அதைக் குறித்து ஒன்றும் அறியாது. ஆனால் ஆவிக்குரிய உலகில் ஒரு யுத்தமே வெடித்துவிடும். ஒட்டுமொத்த பாதாள சேனையும் பரலோக வாசலில் நின்று கூக்குரலிடும், தேவனைக் குற்றம்சாட்டும். அவர் ஆராதிக்கப்பட பாத்திரர் அல்ல என்று தர்க்கம் செய்யும். அப்படி ஒரு சூழல் நடக்க வாய்ப்பிருக்கிறதா? நிச்சயமாக நடந்ததும் இல்லை, நடக்கப் போவதுமில்லை.
கொள்ளை நோய் எத்தனை அலை அலையாய் கொந்தளித்து வந்தாலும், அதையடுத்து பத்து அணு ஆயுத உலகப்போர்கள் மூண்டாலும் உங்களுக்குக் கொடுத்த ஒரு சின்ன வாக்குத்தத்தம் வரைக்கும் நிறைவேறித் தீரும்வரை உங்கள் உயிர் உங்களை விட்டு நீங்காது. அந்த வாக்குத்தத்தத்தை நீங்களே மறந்து போயிருந்தாலும் சரி. இது உங்களுடைய உயிருக்கு வந்த பிரச்சனை அல்ல, தேவனுடைய கெளரவப் பிரச்சனை. நாம் ஒருவேளை சிறியவர்களும் எளியவர்களுமாக இருக்கலாம். ஆனால் பரலோகம் பரலோகமாகவே தொடரவேண்டுமானால் தேவன் உங்களுக்குச் சொன்னவைகளை அவர் நிறைவேற்றியே தீரவேண்டும். அவர் அதைச் செய்தே தீருவார்.
நம்மைச் சுற்றிலும் அனுதினமும் உயிரிழப்புகள் நேர்ந்துகொண்டிருக்கும் சவாலான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அநேக நண்பர்களையும், உறவினர்களையும் இழந்தாயிற்று. ஆனாலும் சோர்ந்து போக வேண்டாம். தேவன் தந்த வாக்குத்தத்தம் நம்மைச் சுற்றி அரணாகக் காவல் நிற்கிறது. சூரியனை மேகம் மறைக்கும்போது ஒரு இருள் தோன்றுவது இயல்புதான், மேகம் நகர்ந்தவுடன் மீண்டும் சூரிய வெளிச்சம் பூமியை பிரகாசிப்பிக்கும். இந்த சூழலும் அதுபோலவே சீக்கிரமாக விலகிப்போகும்.
சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பார்க்காதீர்கள். தேவன் உங்களோடு பேசிய வாக்குத்தத்தங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறப்போவதை கனவு காணுங்கள். அந்த நாளில் நீங்கள் அனுபவிக்கப்போகும் மகிழ்ச்சியை இப்போதே அனுபவிக்கத் துவங்குங்கள். அதைப் பற்றியே பேசிக்கொண்டிருங்கள் அதற்காக தேவனை துதியுங்கள். அவர் சொன்ன சொல் மாற மாட்டார். சொன்னதை செய்து முடிக்குமளவும், முடித்த பின்பும் உங்களைக் கைவிட மாட்டார்.