வரிகளுக்கு இடையே வாசிக்க…

இஸ்ரவேல் தேசம் முழுவதும் அந்த இளைஞனை “மாவீரன்” என்று தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தது. சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பத்தாயிரம் என்று அரசனை விட ஒரு படி மேலே ஏற்றி அந்நாட்டுப் பெண்களால் பாடி புகழப்பட்டான். தாவீது நினைத்திருந்தால் தனது மாவீரன் இமேஜை அப்படியே மெயிண்டெய்ண் பண்ணி இருந்திருக்கலாம். அரசனான பிறகு அந்நாட்டு புலவர்களை வைத்து தன்னை சூப்பர் ஹீரோவாக சித்தரித்து ஏகப்பட்ட புனைவுக் காவியங்களையும் படைத்திருந்திருக்கலாம், எல்லாமே இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்திருக்கும்.

ஆனால் சங்கீதம் 6, 56 போன்ற அதிகாரங்களை வாசித்துப் பாருங்கள். தாவீது தனது எதிரிகளைக் குறித்து தன் மனதில் அலையடிக்கும் பயங்களை அப்படியே கொட்டி வைத்திருக்கிறான். அதிலும் அவற்றை தேவனிடம் அந்தரங்கமாக ஜெபத்தில் சொல்லவில்லை. அதை ஒரு சங்கீதமாகவே எழுதி, அனைவரையும் பாடவும் வைத்திருக்கிறான். அதைப் படித்தவர்கள் “நம் மன்னர் தாவீதைப் பெரிய வீராதி வீரர் என்று நினைத்தோமே, அவரும் நம்மைப் போல எதிரிகளைக் கண்டு அஞ்சும் ஒரு இயல்பான, சாதாரண மனிதன்தானா?” என்று எண்ணியிருந்திருக்க மாட்டார்களா?

“எங்கோ ஒரு மூலையில் ஆடு மேய்த்த என்னை கர்த்தரே தேடிக் கண்டுபிடித்து அரசனாக்கி இருந்திருப்பாரென்றால் நான் எவ்வளவு முக்கியமான ஆள் பார்த்தீர்களா!” என்ற Holy Holy இமேஜை கட்டி எழுப்புவது தாவீதுக்கு சாத்தியமான ஒன்றுதான். ஆனால் தான் ஒரு படுபாவி என்பதை ஊரறிய ஒத்துக்கொண்டு அவன் பாடி வைத்ததுதான் சங்கீதம் 51.

சரி, எதற்காக இந்த மனிதன் தன்னைத் தானே இப்படி அம்பலப்படுத்திக் கொள்கிறான்? எதற்கான தன்னை இவ்வளவு தாழ்த்திக் கொள்கிறான்? அதற்கு அவனே சொல்லும் பதில் பாருங்கள்!

(நான் செய்த பாவத்தின் நிமித்தம்) உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள் (சங் 51:11-13)

இதன் அர்த்தம் என்ன? “நான் செய்த பாவம் கொடியதாக இருந்தாலும் நீர் கிருபையாக என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்பொழுது, என்னுடைய வாழ்வே ஒரு முன்னுதாரணமான சாட்சியாக இருக்கும். இவ்வளவு கொடும்பாவம் செய்த இந்த மனிதனையையே அவர் மன்னித்து ஏற்றுக்கொள்ளக் கூடுமானால் அவர் என்னையும் ஏற்றுக்கொள்ள முடியும் என்று தைரியம்கொண்டு அநேகர் உம்மிடம் மனந்திரும்புவார்கள்”. இதுதான் தாவீதின் நோக்கம்.

வாவ்!!! கர்த்தருடைய காரியம் என்று வரும்பொழுது தாவீது ஒருநாளும் தன் இமேஜைக் குறித்து கவலைப்பட்டதே இல்லை. இல்லாவிட்டால் சணல் நூல் ஆடை தரித்து ஒரு சாதாரண மனிதன் போல உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு நடனம் ஆடியிருப்பானா? அதனால்தான் அவன் அவருடைய இருதயத்துக்கு ஏற்றவன்!

நாம் இதுவரை செய்த பிரசங்கங்களையும், சமூவவலைதளப் பதிவுகளையும் சற்று மறு ஆய்வு செய்து பார்ப்போமா? நம்மில் பலருடைய பிரசங்கங்களிலும், பதிவுகளிலும் “தேவன் நல்லவர்” என்பது பகிரங்கமாகவும், “நானும் நல்லவன்தான்” என்பது இலைமறைக் காயாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும், “தேவன் பரிசுத்தர்” என்பது வெளிப்படையாகவும் “நானும் பரிசுத்தன்தான்” என்பது மறைமுகமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

Reading between lines என்பார்களே, அதுபோல உங்கள் பதிவுகளையும், பிரசங்கங்களையும் வரிகளுக்கு இடையே வாசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அவை உங்களைப் பற்றி மறைமுகமாக என்ன கூறுகின்றன? வரிகளில் வாசிப்பது பெரும்பாலும் மூளைக்கும், வரிகளுக்கு இடையே வாசிப்பது பெரும்பாலும் ஆழ்மனதுக்கும் சென்றுவிடும். மூளைக்குள் சென்றது நாளடைவில் மறைந்துவிடும், ஆழ்மனதுக்குள் சென்றதுதான் நிலைக்கும்.

உதாரணத்துக்கு சினிமாக்களில் ஊழல் செய்யும் அரசியல்வாதியை ஹீரோ எதிர்த்து நிற்பான். அவனை மிரட்ட அந்த அரசியல்வாதி 50 ரவுடிகளை அனுப்புவான். அந்த 50 பேரையும் ஹீரோ தனி ஆளாக நின்று பந்தாடுவான். இதைப் பார்க்கும்பொழுது படத்தின் இயக்குனர் மிகவும் நல்ல கருத்தை சொல்லியிருக்கிறார். தவறு செய்யும் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். அதே நேரத்தில் அந்தத் தவறுகளை எதிர்த்து தட்டிக் கேட்பதே நியாயம் என்றும் சொல்லியிருக்கிறார் என்று நமக்குத் தோன்றும். ஹீரா ஜெயிப்பதைப் பார்க்கும்பொழுது மூளைக்குள் டோபோமைன் சுரக்கும். இரசிகன் உற்சாகத்தில் விசிலடித்து கைதட்டுவான். இது அவன் மூளைக்குள் செல்கிறது, அதாவது வரிகளில் வாசிப்பது போல.

அதே நேரத்தில் subliminal-ஆக இன்னொரு செய்தி அவன் ஆழ்மனதுக்குள் பதிக்கப்படுகிறது. அதாவது “அரசியல்வாதிகள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் செய்யும் அநியாயங்களைத் தட்டிக்கேட்டால் வீட்டுக்கு அடியாட்களை அனுப்புவார்கள். ஹீரோவைப் போல சூப்பர்மேனாக இருந்தால் மட்டுமே அவர்களை சமாளிக்க முடியும். இல்லாவிட்டால் நமக்கு சாவு நிச்சயம். எனவே நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது” இப்படியாக இரசிகனின் மூளைக்குள் நேரடியாக உற்சாகமும், ஆழ்மனதில் மறைமுகமாக பயமும் விதைக்கப்படுகின்றன. தியேட்டரை விட்டு வெளியேவரும் பொழுது டோபோமைன் தந்த இன்பம் மறைந்து போகிறது, ஆழ்மனதில் விதைக்கப்பட்ட பயம் மட்டும் நிலைத்து நிற்கிறது. அது அவனது சமூக வாழ்வில் ஒரு நிரந்தரத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தாவீதின் சங்கீதங்களை வரிகளுக்கு இடையே வாசிக்கும்பொழுது நமது ஆழ்மனதுக்குள் செல்லும் செய்தி என்ன தெரியுமா? தாவீதை விடவா நமக்கு எதிரிகள் இருக்கப்போகிறார்கள்? இதைவிடவா நமக்கு நெருக்கம் வந்துவிடப்போகிறது? அந்த சூழ்நிலையிலேயே தாவீதுக்கு உதவின தேவன் நமக்கு உதவாமலா போய்விடப் போகிறார்! பத்சேபாளைக் கவர்ந்து, உரியாவை தந்திரமாகக் கொன்று… இப்படிப்பட்ட பெரும்பாவம் செய்த தாவீதுக்கே மனந்திரும்பும்போது மன்னிப்பு உண்டென்றால் நமக்கும் கிருபை கிடைக்கும்தானே! என்பது போன்ற செய்திகள்தான் நமது ஆழ்மனதுக்குள் சென்று சேரும். தாவீதின் சங்கீதங்கள் மட்டுமல்ல, வேதாகமம் முழுவதுமே வரிகளுக்கிடையே வாசிக்க வாசிக்க நம் ஆழ்மனதை குணமாக்கும் அருமருந்துகளால் நிறைந்ததுதான்.

ஆனால் நம்மில் பலருடைய தேவசெய்திகளும், முகநூல் பதிவுகளும் எப்படியிருக்கிறது? அவை வெளிப்புறமாகக் கேட்க மிக நன்றாக இருக்கிறது. அனலாக, அக்கினியாக, பட்டயமாக, சம்பட்டியாக இருக்கிறது. ஆகா சத்தியத்தை சத்தியமாக பேசியிருக்கிறார் என்று கேட்பவர்கள் புளங்காகிதம் அடைவார்கள்.

ஆனால் அது subliminal-ஆக என்ன சொல்லுகிறது? “அடேங்கப்பா! கிறிஸ்தவம் எவ்வளவு உன்னதமானது!! ஆவிக்குரிய வாழ்க்கை எவ்வளவு மேன்மையானது! ஆனால் அதற்கு இவரைப்போல ஜெபவீரனாகவும், உபவாச சாம்பியனாகவும், தியாகச் செம்மலாகவும், மகாபரிசுத்தவானாகவும், சுத்தக்கண்ணனாகவும், தூயநெஞ்சனாகவும் இருந்தால் மட்டுமே சாத்தியம்! ஆனால் நம்மைப்போல அடிக்கடி விழுந்து எழும்பும் சாதாரண மனிதர்களால் இது சாத்தியமா?” என்ற செய்திதான் விசுவாசிகளின் ஆழ்மனதுக்குள் சென்று சேர்கிறது. அவர்களையும் அறியாமல் நம்மைப்போன்றவர்கள் வெற்றியுள்ள ஆவிக்குரிய வாழ்க்கை வாழவே முடியாது என்ற அவநம்பிக்கை அவர்களுக்குள் வேரூன்றிவிடுகிறது.

தேவசமுகத்தில் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், ஊழியம் செய்யும் நம்மில் எத்தனைபேர் இரட்சிக்கப்பட்டபிறகு தேவதூதரைப் போல வாழ்வதாக ஒரு போலிபிம்பத்தை மனிதர்களிடம் காட்டுகிறோம். நமது விழுகைகளையும், தோல்விகளையும் சக விசுவாசிகளிடம் ஏன் மறைக்கிறோம்? நம்முடைய வாழ்க்கை ஏன் ஒரு திறந்த புத்தகமாக இல்லை? நம் உண்மை முகத்தை மறைத்து, ஒரு போலி பிம்பத்தைக் காட்டி நாம் பிரசங்கிப்பதும், எழுதுவதும் எப்படி ஒரு ஆவிக்குரிய தாக்கத்தை தேவபிள்ளைகளிடத்தில் ஏற்படுத்தும்?

ஊழியக்காரன் என்ற பெயரில் நாம் காட்டும் இந்த போலிபிம்பம்தான் நம்மை சக விசுவாசிகளிடமிருந்து பிரிக்கிறது. நம்மை நெருங்கவும், நம்மிடம் பேசவும் அவர்கள் பயப்படுகிறார்கள். மனதளவில் நம்மிடமிருந்து ரொம்பவும் அந்நியப்பட்டுவிடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் நாம் காட்டும் போலிபிம்பம் மக்களுக்கு நம்மைக் குறித்த ஒரு பயத்தையும், மரியாதையையும், அளவு கடந்த எதிர்பார்ப்பையும் நம்மீது ஏற்படுத்திவிடுகிறது. நம்மிடம் நெருங்கிப் பழகும்போது நம்முடைய சுயரூபம் தெரிந்தவுடன் அந்த போலி பிம்பம் நொறுங்கிப் போவதுமட்டுமல்ல, நம் நிமித்தம் அவர்களது விசுவாச அஸ்திபாரமும் ஆட்டம் கண்டுவிடுகிறது. நாம் அவர்களுக்கு சாட்சியாக அல்ல, இடறலாக மாறிவிடுகிறோம்.

ஆனால் கர்த்தராகிய இயேசுவைப் பாருங்கள்! அவர் பாவமே பாராத சுத்தக் கண்ணராக இருந்தும் எப்பேற்பட்ட பாவியும் நெருங்கிப் பழகும் அளவுக்கு எவ்வளவு எளிமையானவராக, down to earth personality-யாக இருந்தார்!

நம் வாழ்க்கை திறந்த புத்தகமாகவும், எந்தவித போலிபிம்பத்தையும் கட்டியமைக்காமல் இயல்பானதாகவும், நம் பிரசங்கங்கள் நம்முடைய நிஜ வாழ்க்கையிலிருந்து வெளிப்பட்டதாகவும் இருந்து, அப்படி சத்தியத்தை பிரசங்கிப்போமானால் அதுவே கேட்பவர்கள் மனதைத் தொடும், கிரியை செய்யும். அவர்களை மாற்றும். இல்லாவிட்டால் பூமியில் நமக்கு பாராட்டுகளும், லைக்குகளும் கிடைக்கும். ஆனால் தேவராஜ்ஜியம் அதை ஒருபோதும் அங்கீகரிக்காது.

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் (மத்தேயு 5:37)

Leave a Reply