…லாமா?

கிறிஸ்தவக் கருத்தரங்குகளில் கேள்வி-பதில் பகுதியில் விசுவாசிகளை கேள்வி கேட்கச் சொன்னால் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் இப்படியாகத்தான் இருக்கும். “கிறிஸ்தவர்கள் இதைச் செய்யலாமா?, அதை உண்ணலாமா?, இதை அனுசரிக்கலாமா?, அதை அணியலாமா? இப்படி ஏகப்பட்ட “…லாமா?” கேள்விகள் நீண்டுகொண்டே போகும்.

பிரசங்க மேடையில் நிற்கும் கிறிஸ்துவின் ஊழியக்காரரும் மோசேயின் ஊழியக்காரராக மாறும் நிர்பந்தத்துக்கு ஆட்பட்டு, தனது வேத அறிவைக் காட்டும்படி ‘செய்யலாம் அல்லது செய்யக்கூடாது’ என்று பிரசங்கிக்க ஆரம்பித்துவிடுவார்.

அவைகளை செய்தால் அல்லது செய்யாமல் இருந்தால் வரும் ஆபத்தைவிட மிகப் பெரிய ஆபத்தில் அந்த சபை இருக்கிறது.

அங்கு என்ன நடக்கிறது?

கிறிஸ்துவின் விசுவாசிகள் சீனாய் மலையின் அடிவாரத்தில் நின்று தங்களுக்கு மீண்டும் ஒரு பிரமாணத்தை தரச்சொல்லி கேட்கிறார்கள். மீண்டும் கற்பலகையில் கட்டளைகளை எழுதித் தருவதா நமது ஊழியம்? பிரமாணத்துக்கு உட்பட்டு ஒரு விஷயத்தை செய்வதாலும், செய்யாமல் இருப்பதாலும் நாம் நீதியைப் பெற்றுக்கொள்வதில்லை அல்லது இழப்பதில்லை. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே (கலா 2:21)

அவர்களை கி.முவிலிருந்து கி.பிக்கு இழுத்துக்கொண்டு வரவேண்டியது அந்தப் பிரசங்கியாரின் கடமையல்லவா? செய்யலாமா, செய்யக்கூடாதா என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், முதலில் நியாயப்பிரமாணம் என்றால் என்ன, சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணம் என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று புதிய ஏற்பாட்டைக் கையில் எடுக்க வேண்டாமா?

நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள் (கலா 5:1).

அப்படியானால் “எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துகொள்” என்று பிரசங்கிக்கச் சொல்லுகிறீர்களா என்ற கேள்வி எழும்பும். இங்கு பிரச்சனை அதுவல்ல, நோயாளியின் அறிகுறிகளைப் பார்த்து, வியாதி என்ன? எந்த சிகிச்சையை பிரதானமாக அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யவேண்டியது மருத்துவரின் கடைமை. அந்த “…லாமா?” கேள்விக்கு பதிலளிப்பதை விட தான் எந்தப் பிரமாணத்தின்கீழ் இருக்கிறோம் என்பதையே அறியாமல் அந்த விசுவாசி இருப்பதைத்தான் பிரதான பிரச்சனையாகக் கருதி, அதைத்தான் ஊழியக்காரர்கள் முதலாவது டீல் பண்ண வேண்டும் என்பதை உணர்த்துவதே இப்பதிவின் நோக்கம்.

ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com

Leave a Reply