ராஜாக்களின் மேன்மை

காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை (நீதி 25:2).

ராஜாக்களுக்கென்று ஒரு தனிப்பட்ட குணம் உள்ளது. அது காரியங்களை ஆராய்வது. அதாவது ஒரு விஷயத்துக்குப் பின்னால் இருந்து செயல்படுவது யார் என்று கண்டுபிடிப்பது. அவன் நல்ல ராஜாவோ, மோசமான ராஜாவோ அவனுக்குள் இந்த குணம் இருந்தே தீரும்.

ஒரு நெகட்டிவ்வான உதாரணத்தையே இங்கு உங்களுக்குத் தருகிறேன். கர்த்தர் மோசேயைக் கொண்டு எகிப்தை வாதைகளால் அடித்தார். தேசத்தை தவளைகள் மூடிக்கொண்டது என்று யாத் 8: 6 சொல்லுகிறது. பார்வோனிடத்தில் கைதேர்ந்த மந்திரவாதிகள் இருந்தார்கள். அவர்களைக் கொண்டு பார்வோன் என்ன செய்திருக்க வேண்டும்? கர்த்தர் அனுப்பிய தவளைகளை தேசத்தை விட்டு துரத்தவோ அல்லது அழிக்கவோ செய்திருக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்தது? மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள் (யாத் 8:7) என்று வேதம் சொல்லுகிறது. ஏற்கனவே தேசத்தை மூடியிருக்கும் தவளைகள் பத்தாது என்று தங்கள் மீது தாங்களே தவளைகளை வரவழைத்துக் கொண்டார்கள். பார்வோன் தன்னைப் பற்றி கவலைப்படவில்லை, தன் மக்களைப் பற்றியும் கவலைப்படவில்லை. கடைசியில் பார்வோன் பிறப்பித்த அந்த தவளைகளையும் சேர்த்து அத்தனை தவளைகளையும் கர்த்தரே நீக்க வேண்டியதாயிற்று. தண்ணீர் இரத்தமாக மாறினபோதும், மந்திரவாதிகளை வைத்து தன் தேசத்து தண்ணீரை தானே இரத்தமாக மாற்றிக்கொண்டான். என்னது இவன், மறை கழண்ட கேசாக இருப்பானோ? என்று நினைத்தால் அதுதான் இல்லை.

எகிப்து என்பது “உலக ஞானத்தின்” பிறப்பிடம். அதன் பழைய பெயர் “கெமிட்” என்பதாகும். அதற்கு இருள் என்று பொருள். “கெமிஸ்ட்ரி (Chemistry)”, “அல்கெமி (Alchemy)” போன்ற வார்த்தைகள் இதிலிருந்து பிறந்ததுதான். பல பழமையான மதங்களும், தத்துவங்களும் எகிப்திலிருந்துதான் பிறந்தன. அக்கால உலக வல்லரசும் எகிப்துதான். அப்படிப்பட்ட தேசத்தின் தலைவன் ஏன் இப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்கிறான்?

யாத்திராகமம் 8: 16-19 வசனங்கள் அதற்கு பதில் சொல்லுகிறது. கர்த்தர் தேசமெங்கும் பேன்களை அனுப்பியபோது எகிப்தின் மந்திரவாதிகளும் அப்படி செய்ய முனைந்து, முடியாமல் போய் கடைசியில் “இது தேவனுடைய விரல்” என்று கண்டறிந்து பார்வோனுக்கு அறிவிக்கிறார்கள். பார்வோனைப் பொறுத்தவரை தானும், தன் மக்களும் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை இந்த வாதைகளுக்கு பின்னால் இருக்கும் சக்தி எது என்பதைக் கண்டறிய அவன் படாதபாடு பட்டான். அக்காலத்தில் மாயவித்தை என்பது சாதாரண காரியம். ஒருவேளை மோசேயும் ஆரோனும் மாயவித்தைக்காரர்களோ என்ற சந்தேகம் அவனுக்கு இருந்திருக்கலாம். எனவேதான் இந்த வாதைகளுக்குப் பின் இருந்து இயக்குவது யார் என்று கண்டறிய அவன் விரும்பினான். கர்த்தரும் அடிக்கடி “பூமியில் நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இதைச் செய்வேன்” என்று அவனிடம் சொல்வதை நாம் அந்த வேதபகுதி முழுவதும் காணலாம்.

அவன் உண்மையைக் கண்டறிந்த பின்னரும் மனந்திரும்பாமல் நியாந்தீர்க்கப்பட்டது வேறு விஷயம். ஆனாலும் ஒரு காரியத்துக்குப் பின்னால் இருப்பது யார் என்று ஆராய்வது ராஜாக்களுக்கே உரிய குணம். பிரியமானவர்களே நமக்குள் ஓடுவது ராஜாதி ராஜாவின் இரத்தம்தான். எனவேதான் நமக்கு “ஆவிகளைப் பகுத்தறியும் வரம்” என்ற ஒரு வரமே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மத்தேயு 16-ஆம் அதிகாரத்தில் கர்த்தராகிய இயேசுவும் பேதுரு தன்னை “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று அறிக்கையிட்டபோது அவனுக்குப் பின்னால் இருந்த பிதாவைப் பார்த்தார், அதே அதிகாரத்தில் அதே பேதுரு தன்னை சிலுவைக்கு போகக்கூடாது என்று தடுத்தபோது அவனுக்குப் பின்னால் இருந்த சாத்தானைப் பார்த்தார்.

அப்போஸ்தலர் 16-ஆம் அதிகாரத்தில் பவுலை புகழ்ந்துகொண்டே வந்த பெண்ணை பவுல் சினங்கொண்டு திரும்பிப்பார்த்து அவளுக்குப் பின்னால் இருந்த ஆவியை துரத்துவதைக் காணமுடியும்.

நீங்கள் ராஜாவின் புத்திரராக இருந்தால் உங்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் பின்னால் இருப்பது என்ன, அல்லது யார் என்பதை ஆவியானவரின் துணையோடு நிதானிக்க வேண்டும். உலகத்தின் ஆளுகை தேவபிள்ளைகளின் கைகளுக்கு வரப்போகும் காலம் இது, நமக்குள் இருக்கும் ராஜரீக குணங்களைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்வோம்.

Leave a Reply