யெகோவாயீரே கார் தருவாரா?

Jehovah Jireh? It’s not talking about providing a car. It’s talking about providing a lamb.

யெகோவாயீரே என்ற பதம் உங்களுக்கு கர்த்தர் ஒரு கார் கொடுப்பதைப் பற்றி பேசவில்லை, அது உங்களுக்காக பலியாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுப்பது பற்றி பேசுகிறது.

இந்த quote இன்று இணையத்தில் அதிகமாக உலா வருவதைப் பார்க்க முடிகிறது. நான் மிகவும் மதிக்கும் ஒரு போதகர் சொன்னதுதான் இது. கர்த்தரை வெறும் உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களை மட்டும் கொடுக்கும் ஏ.டி..எம் மெஷின் போல பார்க்காதிருங்கள் “யெகோவாயீரே” என்ற பதத்தின் பொருள் அதனினும் ஆழமானது, அது ஆத்தும மீட்பைப் பற்றியது என்பதை உணர்த்துவதற்காக அவர் சொன்னது இது. அந்த “யெகோவாயீரே” என்ற வார்த்த்தை வரும் வேதாகமக் context-ம் அதுதான்.

ஆனால் சமீபத்தில் திரும்பத் திரும்ப இதே quote-ஐ முகநூலில் பார்த்தபோதும் அந்தப் பதிவுகளில் பின்னூட்டமிட்டிருந்த விசுவாசிகளிடம் வெளிப்பட்ட பரிசேய மனநிலையையும் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வை இங்கு பகிர விரும்புகிறேன். நீங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தவராக இருந்துகொண்டு தனது தேவைக்காக ஆண்டவரிடம் கேட்கும் ஒரு எளிய விசுவாசியை அற்பமாக எடைபோடக்கூடாது. நீங்கள் ஆரோக்கியமாக இருந்துகொண்டு சரீர சுகத்துக்காக கர்த்தரிடம் வரும் ஒரு விசுவாசியின் நோக்கத்துக்கு களங்கம் கற்பிக்கக் கூடாது. அவரவர்கள் பாதையில் போய் பார்த்தால்தான் அவரவர் படும் கஷ்டங்கள் புரியும்.

எனக்குத் தெரிந்தவரை இந்தப் பதிவை பகிர்ந்த பலரும் சொந்தமாக ஒரு நல்ல கார் வைத்திருப்பவர்கள்தான். அவர்களுக்குத் இந்தக் கேள்வி:

யெகோவாயீரே உங்களுக்காக பலியாக தேவாட்டுக்குட்டியை கொடுத்தது உண்மைதான். ஆனால் உங்கள் காரை உங்களுக்குக் கொடுத்தது யார்?

எனது காரையும் கர்த்தர்தான் கொடுத்தார் என்பது உங்கள் பதிலாக இருந்தால், பின்னர் ஏன் இதைப் பகிர்கிறீர்கள்? யெகோவாயீரே காரையும் கொடுக்கிறார்தானே?

ஒரு விசுவாசி தனது உலகத் தேவைக்காக மட்டுமே அவரைத் தேடுவது தவறு என்பதை I கொரிந்தியர் 15:19 -இல் சுட்டிக் காட்டும் அதே வேதம் மீட்புக்காக மட்டுமல்ல, சொந்தத் தேவைகளுக்காகவும் ஆண்டவரிடம்தான் வரவேண்டும் என்பதையும் மத்தேயு 6:11-இல் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.

“அவர் எனக்கு பரிசுத்தத்தை மட்டும் தரட்டும் மற்றெதெல்லாம் நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்பவர்கள் மீட்பின் முழுமையை அனுபவிக்க விரும்பவில்லை அல்லது அதைக் குறித்த புரிதலில்லை என்பதே புலனாகிறது. நமது சரணடைதல் முழுமையானதாக இருக்க வேண்டுமென்றும், அவரே நமக்கு எல்லாமாகவும் இருக்க வேண்டுமென்றும் கர்த்தர் விரும்புகிறார்.

மீட்பு, அபிஷேகம், ஊழியம் மற்றும் வரங்களை மட்டுமல்ல, நாம் இன்று பயன்படுத்தும் சிறு குண்டூசி வரை எல்லாமே அவர் கொடுத்ததுதான். ஆத்தும மன்னாவை மட்டுமல்ல, நமக்கு அன்றாடம் சோறு போடுபவரும் அவர்தான். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது. இது ஒரு குடும்பம், அவர் நமது அப்பா! நாம் இந்த பூமியில் வாழும்வரை நமது தொண்டையில் இறங்கப்போகும் கடைசி சொட்டு தண்ணீர்கூட அவரது ஈவுதான்.

நாம் முற்றிலும் அவருடையவர்கள். அவர் நம்முடையவர். இந்த உணர்வுதான் அழகான, முழுமையான ஆராதனை!

Leave a Reply