யாகாவராயினும் மனம் காக்க!

ஒரு மனிதனின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்குப் பின்னால் பிசாசு இருக்கிறான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் நம்மில் பலர் நினைப்பது போல அந்தக் காலத்து ஓனிடா டிவி விளம்பரத்தில் வருவது போன்ற ஒரு உருவம் நமது கண்களுக்கு மறைவாக, முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு நமக்கு விரோதமாக கிரியை செய்வதில்லை. அவன் செயல்படும் விதத்தை நாம் அறிந்தால்தான் அதற்கான தீர்வையும் அறிந்து கொள்ள முடியும்.

சத்துருவின் இலக்கு நமது மனம்தான். நமது மனதில் எதிர்மறை சிந்தனைகளை பதிய வைப்பதின் மூலம் நமது வாழ்க்கையை சீர்குலைத்துப் போல முடியும் என்பதை அவன் நன்கு அறிந்திருக்கிறான். தேவனுக்கு விரோதமான எதிர்மறை சிந்தனைகள், நமக்கே விரோதமான எதிர்மறை சிந்தனைகள், நமது உறவுகளுக்கு விரோதமாக, நமது சூழ்நிலைகளுக்கு விரோதமாக, நமது எதிர்கால நம்பிக்கைக்கு விரோதமாக, நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விஷயங்கள், மற்றும் நம்மை சூழ்ந்துள்ள அத்தனைக்கும் விரோதமாக எதிர்மறை எண்ணங்களை நமது உள்ளத்தில் விதைத்து விடுகிறான்.

ஒருவன் கையில் கடப்பாறையைக் கொடுத்து அவனைப் புதைக்க அவனையே குழி தோண்டச் செய்வது எப்படியோ அப்படித்தான் பிசாசு நமது மனதில் தரும் எதிர்மறை எண்ணங்களும். அவை நமது வாழ்க்கையின் போக்கையே திசை திருப்பிவிடுகின்றன.

அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான் (நீதி 23:7) என்று வேதம் சொல்லுகிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று அடிக்கடி புலம்புகிறீர்களா? தேவன் உங்களுக்கு விரோதமாக இருப்பது போலவும், அதனிமித்தம் சூழ்நிலைகள் யாவும் உங்களுக்கு விரோதமாக மாறிவிட்டிருப்பதாகவும் எண்ணங்கள் அடிக்கடி நமக்கு வருகிறதா? அது தேவனிடமிருந்து வரும் எண்ணமல்ல. நீங்கள் ஒரு விசுவாசியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் பிதாவின் மானசீக அன்புக்கு பாத்திரமானவர்கள். அவர் உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். உங்களுக்கு அனுகூலமான கதவுகளை திறந்து வைத்திருக்கிறார் என்பதே உண்மை. மாற வேண்டியது கர்த்தர் அல்ல, நாம்தான்.

இதற்கு ஒரே தீர்வு கர்த்தருடைய வார்த்தைதான். சத்துருவின் இலக்கு மட்டுமல்ல, தேவனுடைய இலக்கும் நமது மனம்தான். “மனம் திரும்புதல்”, “மனம் புதிதாகுதல்” என்று புதிய உடன்படிக்கைக்குள் வந்த புது சிருஷ்ட்டியின் வாழ்க்கை மனதை மையமாகவே வைத்து இருப்பதை கவனித்தீர்களா? கர்த்தர் உங்களுக்கு யாராக இருக்கிறார், இரட்சிக்கப்பட்ட உங்களை அவர் எப்படிப் பார்க்கிறார். அவர் உங்களுக்கு கொடுத்த உரிமைகள், அதிகாரங்கள் என்ன என்பதை வேதத்தில் ஆராய்ந்து பாருங்கள். உங்கள் மனதை இறை வார்த்தையால் நிரப்புங்கள், அவை உங்களை ஆளுகை செய்யட்டும். அதுவரை உதட்டளாவே இருந்த துதி அதன்பின்புதான் நம்மிடமிருந்து இயல்பாக, தானாக மனதிலிருந்து பெருக்கெடுத்து வரும்.

உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2)

Leave a Reply