மோட்சத்தின் முன்ருசி

கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷரில் தமக்கு நெருக்கமான பேதுரு, யாக்கோபு, யோவான் மூவரையும் கூட்டிக்கொண்டு உயர்ந்த மலையின்மேல் போய் அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார் என்று மத்தேயு 17-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அப்போது மோசேயும் எலியாவும் அவர்களுடன் பேசுபவர்களாகக் காணப்பட்டனர்.

தேவசமூகத்தில் இருந்து வந்த மோசேயும் எலியாவும் பரலோக வாசனையை சுமந்தவர்களாக வருகின்றனர். இயேசுவும் மறுரூபமடைந்தவராக காணப்படுகிறார். அந்த சில மணித்துளிகள் சீஷர்கள் பூமியிலிருந்தபடியே பரலோக வாசனையை உணர்கிறார்கள். அப்போது பேதுரு செய்த காரியத்தைப் பாருங்கள்!

அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான் (மத்தேயு 17:4)

அந்த சில மணித்துளி அனுபவம் பூமிக்குரிய வாழ்வு அத்தனையையும் மொத்தமாக மறக்கடித்து “இப்படியே இங்கேயே இருந்துவிட்டால் என்ன” என்ற ஆசையை சீஷர்களுக்கு உண்டாக்கி விடுகிறது. நமக்கு வாக்கருளப்பட்ட இடத்தின் மேன்மை அதுதான்! கிறிஸ்துவின் மறுரூப தரிசனமும், அங்கிருந்து வந்த இருவரும் சுமந்து வந்த பிரசன்னமுமே அத்தகைய உணர்வை சீஷர்களுக்கு உருவாக்கியிருந்திருக்குமானால் பிதாவே வாசம் பண்ணும் அந்த இடம் எத்தனை அருமையானதாக இருக்கும்!

தன்னுடைய மோட்ச வீட்டின் முன்ருசியைக் காட்டிவிட்டு அந்த அனுபவத்திலேயே தங்கி தாபரிக்க ஏங்கும் தனது பிள்ளைகளுக்கு பிதா அடுத்த வசனத்திலேயே ஒரு கட்டளை கொடுக்கிறார். அந்த ஒரு கட்டளைக்கு கீழ்ப்படிந்தால் போதும் அதுவே ஒருவனை மோட்ச வீட்டில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

அந்தக் கட்டளை:
இவருக்குச் (இயேசுவுக்கு) செவிகொடுங்கள் (மத்தேயு 17:5)

Leave a Reply