தன் கண்களை துணியால் இறுகக் கட்டிக்கொண்டு ஒரு புல்டோசர் வாகனத்தில் ஏறி அதை தாறுமாறாக முழு வேகத்தில் செலுத்தும் மனிதன் எப்படிப்பட்டவனோ அப்படியே கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுப்பவனும் இருக்கிறான். அது எதிர்ப்படும் எண்ணங்களையெல்லாம் தகர்த்து நொறுக்கி தூளாக்கிவிட்டு இறுதியாக ஒரு மலையுச்சியில் போய் ஏறி நிற்கும். அந்த மலையுச்சி என்பது “தேவனை தூஷித்து, ஜீவனை விடு” என்ற சாத்தானின் ஆலோசனையே!
நான் சரியாகத்தான் இருக்கிறேன், கர்த்தர்தான் மாறவேண்டும் என்ற சுயநீதி, சுய பெருமை மற்றும் சுய பரிதாபமே முறுமுறுப்பின் ஆணிவேர். கர்த்தருடைய அன்பை சந்தேகிப்பதே முறுமுறுப்பு, இது மகா மோசமான தொற்று வியாதி, எனவே இதற்கு சரியான தடுப்பூசி போடப்பட வேண்டும். கர்த்தர் நல்லவர், அன்பும் இரக்கமும் உள்ளவர், என்றும் மாறாதவர், வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவர், நமது பலவீனங்களைக் குறித்து பரிதபிப்பவர் என்பது போன்ற தேவனைக்குறித்த சரியான, உயர்வான பிரசங்கங்களே முறுமுறுப்பிற்கு எதிரான தடுப்பூசி ஆகும். வேதத்தை தியானித்தும், அதுபோன்ற பிரசங்கங்களை அடிக்கடி கேட்டும் விசுவாசத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முறுமுறுக்கத் தெரியாது.
ஒரு ஊரில் கொடிய தொற்றுநோய் பரவும்போதுதான் தடுப்பூசி போடப்பட்ட பிள்ளைகளுக்கும், போடப்படாத பிள்ளைகளுக்கும் உள்ள வேறுபாடு தெரியும். முழு இஸ்ரவேல் சேனையும் கோலியாத்துக்கு முன்பாக நடுங்கிக் கொண்டிருந்தபோது விசுவாசத் தடுப்பூசி போடப்பட்டிருந்த தாவீது நிமிர்ந்து நின்றான் (1 சாமு 17), கானான் தேசத்தை உளவு பார்க்கச் சென்றவர்களில் யோசுவாவும், காலேபும் மட்டுமே விசுவாசத் தடுப்பூசி போடப்பட்டிருந்தவர்கள் (எண் 13,14). நீங்கள் கர்த்தரைக் குறித்த சரியான புரிதல் உள்ளவராக இருந்தால் இந்த முறுமுறுப்பு எனும் தொற்றுநோய் உங்களை அண்டாது.