மறுரூபமாக்கப்பட்ட சந்ததி

தேவன் ஒரு நொடியில் கட்டியதை இடித்து முடிக்க பிசாசுக்கு பல யுகங்கள் ஆகும். ஆனால் பிசாசு பல யுகங்கள் வேலை செய்து கட்டியதை இடிக்க தேவனுக்கு ஒரு நொடி போதும். பிசாசு பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டி எழுப்பிய பாபிலோனும் ஒரே நாளில் தகர்க்கப்பட்டு தரைமட்டமாகும்.

வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான் (வெளி 14:8)

பாபிலோனின் அஸ்திபாரமே பணத்தை அடிப்படையாகக் கொண்ட வணிகம்தான். அந்த வணிகம் வேரோடு சாய்க்கப்படும் காலம் வந்துகொண்டிருக்கிறது.

இன்றைய அறிவியலாளர்கள் குவாண்டம் இயற்பியலை அடிப்படையாகக் கொண்டு டெலிப்போர்ட்டேஷனை சாத்தியமாக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். டெலிப்போர்ட்டேஷன் என்றால் ஒரு மனிதனையோ, பொருளையோ ஒரு நொடியில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பும் முறை.

அதாவது ஒரு மனிதன் அல்லது பொருளின் தகவல்களை டேட்டாவாக மாற்றி டெலிப்போர்ட் செய்து அங்கு மறுபடியும் அதை மனிதனாக, பொருளாக அசெம்பிள் செய்யும் முறை. “ஸ்டார்ட்ரக்” போன்ற படங்களில் இதுபோன்ற காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.

2012-இல் சீனாவைச் சேர்ந்த ஒரு பல்கலைக் கழகம் ஒளியின் துகளான ஃபோட்டானை 97 கிலோமீட்டர் டெலிப்போர்ட் செய்து சாதனை படைத்தது. ஆனால் மனிதனையோ, திடப்பொருட்களையோ டெலிப்போர்ட் செய்வது இப்போதைக்கு உள்ள தொழில்நுட்பத்தால் சாத்தியமில்லை. இது சாத்தியமானால் ஒரு நொடியில் சென்னையிலிருந்து நியூயார்க்குக்குச் சென்றுவிடலாம்.

சற்று கற்பனை செய்துபாருங்கள் ஒருவேளை இதுமட்டும் சாத்தியமாகிவிட்டால் பெட்ரோலியம் மற்றும் வாகன உற்பத்தி துறைகள் மொத்தமாகப் படுத்துவிடும்.

ஆனால் இதைவிட மிக நவீன தொழில்நுட்பத்தை ஆவியானவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே செய்து காட்டிவிட்டார். ஆவியானவர் பிலிப்புவைப் பயன்படுத்திய விதத்தை அப்போஸ்தலர் நடபடிகள் 8:39,40-வசனங்களில் பார்க்கிறோம். பிலிப்பு ஒரு எத்தியோப்பிய மந்திரிக்கு சுவிசேஷம் அறிவித்து, ஞானஸ்நானம் கொடுக்கிறார். அதன் பின்னர் நடந்தவைகளைப் பாருங்கள்:

அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான். பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம் பண்ணி செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்(அப் 8:39,40).

அதேபோல வெவ்வேறு இடங்களில் உள்ள இரு மனிதர்கள் எண்ணங்கள் வழியாக ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வது, அல்லது ஒருவர் மனதில் உள்ளதை அறிந்து கொள்வது “டெலிபதி” என்னப்படும். இது சம்பந்தமான ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்தியா மற்றும் பிரான்சில் இருந்த இரு நபர்களின் மூளையை EEG மூலம் தொடர்புகொள்ள வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அதில் முதற்கட்ட வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்று உலகில் இரு மூலையில் உள்ள மனிதர்கள் எண்ணங்கள் வழியாக பேசிக்கொள்வது சாத்தியமாகிவிட்டால் பல்லாயிரங்கோடிகளை கல்லாக் கட்டிக்கொண்டிருக்கும் தொலைத்தொடர்பு என்ற மாபெரும் துறை ஒன்றுமில்லாமல் போய்விடும்.

இதையும் விட பெரிய தொழில்நுட்பத்தை அதாவது கிறிஸ்தவ மொழியில் அற்புதத்தை ஆவியானவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டிவிட்டார். அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய “ஆவியில்” அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன?…என்றார் (மாற்கு 2:8)

பாபிலோனின் தூணாக இருக்கும் மற்றொரு பணங்கொழிக்கும் பகாசுரத் துறை மருத்துவம். இதற்கும் பதில் ஆவியானவர்தான். ஜீவதண்ணீர் நதியாகிய ஆவியானவர் பாயுமிடமெல்லாம் ஆரோக்கியம் என்று வெளி 22:2 சொல்லுகிறது.

இங்கே எல்லாவற்றுக்கும் மாற்றாக ஆவியானவர் இருப்பதைப் பாருங்கள். இன்னொருவிதமாகச் சொல்லப்போனால் எதையெல்லாம் ஆவியானவரால் செய்ய முடியுமோ அதையெல்லாம் அறிவியலின் துணைகொண்டு சாதித்து அதைச் சார்ந்துகொள்ள உலகம் முனைகிறது. ஆனால் அறிவியலால் உபகரணங்களை மட்டுமே உருவாக்க முடியும், மனிதனை மறுரூபமாக்க முடியாது. உள்ளே தேவனுடைய வித்து இருந்து, அதை வளர்த்தெடுக்க ஆவியானவரும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்,.

சத்துருவாகிய சாத்தான் தனது சகல முயற்சிகளையும் திரட்டி தேவனற்ற ஒரு புதுவுலகு படைக்க நினைத்துக் கொண்டிருக்கும்போது தேவன் செய்யும் காய்நகர்த்தலை கவனியுங்கள்:

அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.(யோவேல் 2: 28-30)

தேவனுடைய யுத்த ஞானம் இதுதான். இது ஆவியானவரின் யுகம். அவர் ஊற்றப்பட்டாயிற்று. வெளிப்பார்வைக்கு இன்று சபைகள் அனலற்று, கனியற்று இருப்பதுபோல தோன்றினாலும். தான் எப்பொழுது எதைச் செய்ய வேண்டுமோ அப்பொழுது அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறார். சபையை ஒரு மகிமையிலிருந்து அடுத்த மகிமைக்குள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். இது ஆரம்பம்தான் கிளைமாக்ஸ் இனிதான் இருக்கிறது. ஆவியானவர் தாம் பூமிக்கு வந்த நோக்கத்தை முடிக்காமல் பின்வாங்க மாட்டார். இப்படித்தான் பன்னெடுங்காலமாக ஜலத்தின் மேல் அமைதியாக அசைவாடிக்கொண்டிருந்தார் அதன்பின்னர் நடந்த அதிசயங்களை நாம் அறிவோமல்லவா?

அப்படித்தான் இப்பொதும் சபையின் மேல் அசைவாடிக்கொண்டிருக்கிறார். இனி நம்மைக் கொண்டு என்னவெல்லாம் செய்வார் என்பதை நம்மால் இப்போது கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. ஆவியானவர் ஒரு மனிதனுக்குள் இருந்து அவனை மறுரூபப்படுத்தினால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இந்த உலகம் இனி காணும். அந்த முன்ருசியைத்தான் கர்த்தராகிய இயேசுவின் வாழ்விலும், ஆதி அப்போஸ்தலர்களின் வாழ்விலும் கண்டோம். கர்த்தராகிய இயேசுவின் முன்னுரைப்பின்படி இனி அதனினும் மேலானவைகளைக் காண்போம். ஆவியானவரால் மறுரூபப்பட்ட ஒரு சந்ததி அறிவியல் உருவாக்கி வைத்த உபகரணங்களைக் கண்டு ஏளனமாகச் சிரிக்கும். ஆயிரம் வருட அரசாட்சியில் மனிதன் பயன்படுத்திய உபகரணங்கள் வெறும் மியூசியங்களில்தான் இருக்கும்.

ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன் பாபிலோனைத் தகர்த்தெறியப்போவது ஆவியானவர்தான். அதற்குப் பின் வணிகமும் இருக்காது, பணமும் இருக்காது, எனவே ஏழையும் அடிமையும் பெலவீனரும் இருக்க மாட்டார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வனாந்திரத்தில் ஒட்டகமயிர் உடைதரித்த அந்த தீர்க்கதரிசி சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறும்.

பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் (லூக்கா 3:4)

1 thought on “மறுரூபமாக்கப்பட்ட சந்ததி”

Leave a Reply