மனுபுத்திரனே என்னத்தைக் காண்கிறாய்?

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பதில்களால் நிறைந்திருக்கிறது, நம்முடைய இருதயத்துக்குள் கேள்விகள் குவிந்திருக்கிறது. நம்முடைய கேள்விகள் அதற்கேற்ற பதிலைக் கண்டுபிடிக்க முடியாதபடி இரண்டுக்கும் இடையே ஒரு திரை மறைத்திருக்கிறது. அந்தத் திரை ஆதாமின் மீறுதலால் உண்டானது. அது நம்முடைய கண்ணை மூடியிருக்கும் திரையல்ல, கருத்தை மூடியிருக்கும் திரை.

அதென்ன கருத்தை மூடும் திரை? உங்கள் கேள்விக்கான பதிலை நீங்களே உங்கள் கண்களால் ஆயிரம் முறை பார்த்தாலும் அதுதான் உங்கள் கேள்விக்கான பதில் என்பது உங்களுக்குத் தெரியாது.

உதாரணத்துக்கு பாலைவனத்தில் வசித்த ஆபிரகாம் அனுதினமும் இரவு வானத்தையும் அதில் மின்னும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். நமக்கு புத்திர பாக்கியம் கிடைக்குமா? நம் பெயர் சொல்லவும், சந்ததி நிலைக்கவும் ஒரே ஒரு குழந்தையாவது பிறக்குமா? என்ற கேள்விகள் எப்போதும் அவர் மனதுக்குள் அலைமோதிக்கொண்டுதான் இருந்தது. ஒருநாள் தேவன் இடைப்பட்டு, கூடாரத்தை விட்டு வெளியே அழைத்து, “வானத்தை அண்ணாந்து பார், நீ என்ன பார்க்கிறாயோ அதுதான் உன் கேள்விக்கு பதில்” என்ற பொழுதுதான் ஆபிரகாம் தனக்கான தீர்வைப் பெற்றுக்கொண்டார்.

தேவன் ஆபிரகாமை கூடாரத்துக்குள் உட்கார வைத்தே “உனக்கு பிறக்கப்போகும் சந்ததி திரளாக இருக்கும், அதை யாராலும் எண்ண முடியாது” என்று சொல்லியிருக்கலாம் அல்லவா. ஏன் வானத்தை அண்ணாந்து பார் என்று சொல்ல வேண்டும்? உங்கள் பரமபிதா உங்களை போஷிப்பார், உடுத்துவிப்பார் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெறுமனே சொல்லியிருக்கலாம் அல்லவா? ஏன் ஆகாயத்துப் பறவைகளை கவனித்துப் பாருங்கள், காட்டுப் புஷ்பங்களை கவனித்துப் பாருங்கள் என்று சொல்ல வேண்டும்? ஏனெனில் சத்தியத்தைக் காண்பதற்கு அவர் நமது கண்ணைப் பழக்குவிக்க விரும்புகிறார். அவரது வார்த்தையைக் கேட்க நமது செவியைப் பழக்குவிக்க விரும்புகிறார்.

வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளுக்கு ஒரு தரிசனத்தைக் காட்டி, “மனுபுத்திரனே நீ என்னத்தைக் காண்கிறாய்?” என்று தேவன் அடிக்கடி கேட்பதை வாசித்திருக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு தனது பிரசங்கத்தில் பலமுறை “கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று சொன்னதை கவனித்திருக்கிறீர்களா? ஆவிக்குரிய வளர்ச்சியில் அடிப்படையான ஒரு முக்கிய அங்கம் ஆவிக்குரிய கண்ணால் காண்பதும், ஆவிக்குரிய செவியால் கேட்பதும் ஆகும். அப்பொழுதுதான் ஆவிக்குரிய பரிமாணத்தில் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து, பெளதிக பரிமாணத்தில் அதன் பலனை அறுவடை செய்ய முடியும்.

ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே கண்களோடும், செவிகளோடும்தான் பிறக்கிறது. அதற்குப் பார்வையும் இருக்கிறது, கேட்கும் திறனும் இருக்கிறது. பார்வையும், கேட்கும் திறனும் இருந்தாலும் தான் என்னத்தைக் காண்கிறேன் என்றோ, தான் என்னத்தைக் கேட்கிறேன் என்றோ அதற்குப் புரியாது. அக்குழந்தை ஒரு மொழியையும், அந்த மொழிக்குப் பின்னால் இருக்கும் அறிவையும் கற்று பழகிக்கொண்டால் மாத்திரமே ஒரு மேஜையைப் பார்த்தால் அது மேஜை என்று அதற்குத் தெரியும், “இங்கே வா” என்று அழைத்தால் அழைத்தவரிடம் போக வேண்டும் என்று அதற்குப் புரியும்.

நம்முடைய ஆவி மனிதனும் அப்படியே, அவன் இரட்சிக்கப்படும் அந்த நொடியிலேயே அவனது ஆவிக்குரிய கண்ணும், செவியும் திறக்கப்படுகின்றன. அவை திறப்பதனால் மாத்திரம் பயனில்லை, அவன் ஆவிக்குரிய மொழியையும், ஆவிக்குரிய அறிவையும் கற்க வேண்டும். அதை ஆவியானவரிடமிருந்து மாத்திரமே கற்க வேண்டும். அப்பொழுதுதான் அவனது ஆவிக்குரிய கண்ணும், செவியும் அவனுக்குப் பயன்படும். சரி அப்படி ஆவியின் மொழியையும், ஆவியின் அறிவையும் கற்றுக்கொண்டு நமது ஆவிக்குரிய புலன் உறுப்புக்களை பயன்படுத்தப் பழகுவதால் என்ன லாபம்?

வெளிச்சத்தில் நடக்க ஆரம்பிப்போம். ஆம், அதுதான் இதில் உள்ள பிரதான நன்மை. வெளிச்சத்தில் நடக்கிறவன் இடறமாட்டான் என்று யோவா 11:9,10 வசனங்கள் கூறுகின்றன. வெளிச்சத்தில் நடப்பது என்றால் என்ன? தேவன் நம்மைச் சுற்றிலும் பதில்கள் வைத்திருக்கிறார். அந்த பதில் ஒரு வேத வசனமாகவும் இருக்கலாம், அல்லது நம் கண்ணில் தென்படும் ஒரு காட்சியாகவோ, நம் முன் நடக்கும் ஒரு சம்பவமாகவோகூட இருக்கலாம். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் பார்த்தீர்களானால் ஒரு செயலை நாடகமாக நடித்துக் காட்டி, அதற்கு ஒரு வசனத்தை தீர்க்கதரிசனமாகச் சொல்வார்கள். அப்படியானால் அந்த செயலும், அந்த வசனமும் ஒன்றுதான்.

அதுமட்டுமல்ல உங்களுக்கான பதில் ஒரு தரிசனமாகவோ (mind picture), கனவாகவோ, செவிகளில் கேட்கும் மெல்லிய சத்தமாகவோ, ஆவிக்குள் தொனிக்கும் சத்தமாகவோகூட இருக்கலாம். எல்லாமே வசனம்தான், இவை அனைத்துமே ஆவியானவரின் மொழிதான். அதுமட்டுமல்ல, வேதாகமத்தின் ஒரு பிரதி உங்கள் இருதயமாகிய பலகையிலும் பொறிக்கப்பட்டுள்ளதாக எபிரேயர் 10:16 கூறுகிறது.

இப்படி சுற்றிலும் சூழ்ந்தும், உள்ளும் புறமும் வசனத்தில் மூழ்கித் திளைப்பதுதான் ஐசுவரியத்திலெல்லாம் பெரிய ஐசுவரியம். வெறுமனே புத்தகத்தில் வசனத்தை வைத்துக்கொண்டு, அதுவும் புரியாமல் திரிவதுதான் கடைசி காலத்தில் நேரிடுவதாக தீர்க்கதரிசனங்கள் சொல்லும் வசனப் பஞ்சம்! கண் திறக்கப்பட்டவன் ஒருநாளும் வசனப்பஞ்சத்தில் சிக்கமாட்டான்.

பூமியில் மனிதன் தோன்றிய பிறகுதான் மனிதருக்குரிய மொழிகள் தோன்றின. ஆனால் கர்த்தருடைய வார்த்தை மொழிகளுக்கும் முந்தினது. அந்த வார்த்தைதான் இந்த உலகத்தையே உண்டாக்கியது. அந்த “வார்த்தை” மனித மொழிநடையில் அதாவது எபிரேய, கிரேக்க, அரமேய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதுதான் நம் கையிலுள்ள வேதம். அந்த அதி உன்னதமான புத்தகத்துக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஆனால் வேதம் என்பதை ஒருபோதும் ஒரு புத்தகம் என்ற நிலையில் மட்டும் சுருக்கி விடாதீர்கள்.

இந்த உலகமே வார்த்தையினால் உண்டானதாக இருக்கிறபடியால் எனவே எங்கும் எதிலும் நம்மால் வார்த்தையைக் காணமுடியும். எதைக் கொண்டும் ஆண்டவரால் நம்மோடு பேசமுடியும். எனவேதான் “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது” என்று சங்கீதக்காரன் பாடுகிறார் (சங் 19: 1-4). அதற்குப் பேச்சுமில்லை, வார்த்தையும் இல்லை. ஆனாலும் அது வசனம்தான். இதிலிருந்து வசனம் என்பது மொழிநடையிலும் இருக்கிறது, மொழிக்கு அப்பாற்ப்பட்ட வடிவங்களிலும் இருக்கிறது என்பது விளங்குகிறதல்லவா?

கடலில் மூழ்கிய ஒரு மனிதன் முற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறது போல, கண் திறக்கப்பட்டவன் முற்றிலும் வசனத்தால் சூழப்பட்டிருக்கிறான். அவனால் எங்கும், எதிலும் வார்த்தையைக் காண முடியும். 24/7 தேவனோடு உறவாட முடியும். இதன் பொருள் இனி வேதாகமத்தை வாசிக்க வேண்டியதில்லை என்பதல்ல, கண்ணில் காண்பதிலெல்லாம் வார்த்தையைக் காணமுடியுமானால், வார்த்தையையே வாசிக்கும் அனுபவம் எத்தனை மகிமையானதாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்! கண் திறக்கப்பட்டவனுக்கு வேதம் வாசிக்கும் அனுபவம் வேதத்தில் உள்ள அதிசயங்களில் திளைக்கும் அனுபவமாக (சங் 119:18) மாறிப்போகும்.

இப்படிப்பட்ட மேலான அனுபவத்தைப் பெற்றபிறகு அதுவரை குழந்தை தவழ்வதைப் போல இருந்த நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சி சிறுத்தையின் பாய்ச்சலைப்போல வேகமெடுக்கும். தேவனோடு அனுதினம் உறவாடும் அனுபவத்தைக் குறித்த ஆர்வம் பலமடங்கு எகிறிவிடும். இன்று என்ன அதிசயம் காத்திருக்கிறதோ என்கிற எதிர்பார்ப்பு அந்த நாளையே மகிழ்ச்சியானதாக, அர்த்தமுள்ளதாக மாற்றிவிடும். அப்படித்தான் ஏனோக்கு தேவனோடு பேசிக்கொண்டே நடந்து, அதில் லயித்து அவரோடுகூடவே போய்விட்டார் என்று நினைக்கிறேன்.

Leave a Reply