அன்று ஞாயிறு ஆராதனையில் சிறப்புப் பாடல் பாட வேண்டும். ஜேனட் அதற்காக அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். தன்னுடன் இணைந்து பாடவிருக்கும் மெர்சி, மேரி, டெபி மற்றும் சர்ச்சுக்கு வரும் அனைத்துப் பெண்களையும் விட தானே உடையும், நகையும் சிறப்பாக அணிந்திருக்க வேண்டுமென்ற ஆசை அவளுக்கு. சில காஸ்ட்லி நகைகளை அள்ளிப் போட்டுக்கொண்டாள்.
அதே ஊரின் இன்னொரு மூலையில் மெர்சி தன்னிடமிருக்கும் தங்கம் போலவே தோற்றமளிக்கும் சில கவரிங் நகைகளை பீரோவிலிருந்து எடுத்து அணிந்து கொண்டாள். அவளுக்கு நகை மீதெல்லாம் ஆசையில்லை. ஆனால் சொற்பமே சம்பாதிக்கும் தனது கணவனை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் அவளுக்கு. அதைவிட தன்னை நம்பும் அவளை கர்த்தர் வறுமையில் தவிக்க விட்டு விட்டாரே என சுற்றத்தார் கர்த்தரை இகழ்ந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் கொண்டவள்.
இன்னொரு பக்கம் பெரும் பணக்காரியாகிய மேரி, ஆனால் நகை அணிவதை விரும்பாதவள். அதற்கு காரணம் வெளிப்புற அலங்காரமல்ல, உள்ளான அழகே கர்த்தருக்குப் பிரியம் என்ற விசுவாசம் அவளுக்கு. அதுமட்டுமன்றி ஆராதனைக்கு வரும் ஏழை சகோதரிகள் தனது படோபடடோபத்தைப் பார்த்து ஏங்கிப்போய் விடக் கூடாது, அவர்களுக்கு இடறலாக தான் இருக்கக் கூடாது என்ற சிந்தையுள்ளவள்.
கடைசியாக டெபி, அவளுக்கு நகை என்றால் கொள்ளை ஆசை, ஆனால் அவளுக்கு வீட்டில் நகை அணிய தடா. காரணம் நகை அணிவது பாவம் என்ற பாரம்பரியத்தில் வாழும் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவள். குடும்பத்தார் பார்க்காத வேளைகளில் தனது தோழிகளின் நகைகளை வாங்கி அணிந்து கண்ணாடியில் அழகு பார்த்துக்கொள்வது அவள் வழக்கம்.
நால்வரும் அழகிய குரல்வளம் கொண்டவர்களாதலால் அவர்களுக்கு அன்று ஆராதனையில் சிறப்புப் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. நால்வரையும் பார்த்த அன்று போதிக்க வந்த வெளியூர் பிரசங்கியார் குழம்பிப் போனார். இதென்ன இந்த சபையில் ஒழுங்கே இல்லையே! நால்வரில் இருவர் நகையணிந்திருக்கிறார்கள், இருவர் அணியவில்லை. நகை குறித்தெல்லாம் இந்த போதகர் பிரசங்கிக்க மாட்டாரா? ம்ம்ம்… மக்களை தக்க வைக்க வேண்டுமென்றால் சில பிரசங்கங்களை தவிர்க்கத்தான் வேண்டியதிருக்கிறது. என்னே மாய்மாலம் இது! இதுவே எனது சபையாக இருந்திருந்தால்….
இப்படி அவர் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே பாடல் முடிந்து பிரசங்கத்துக்கான அழைப்பு வந்ததது. “கர்த்தாவே! தேவையுள்ள ஆத்துமாக்களோடு பேசும்!” என்று மனதுக்குள் ஜெபித்த படியே பீடத்தில் ஏறினார். ஏறி நின்றதும் எதிரே வாசலின் நிலைக்காலின் மேல் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த வசனம் அவர் கண்களில் மின்னியது.
மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1 சாமு 16:7)