பைபிள்ல போட்ருக்கா?

இது கிறிஸ்தவத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. சத்தியத்தை போதிக்க வேண்டும் என்று விரும்புபவர்களைவிட சத்தியத்தை திரிக்க வேண்டும் என்று முனைபவர்கள்தான் இந்தக் கேள்வியை அதிகம் கேட்கிறார்கள். “இயேசு தன்னைக் கடவுள் என்று சொன்னதாக பைபிள்ல போட்ருக்கா?”, “திரித்துவம் என்ற வார்த்தை பைபிள்ல போட்ருக்கா?” இன்னும் இப்படி ஏகப்பட்ட கேள்விகள். இதுமட்டுமல்ல மனிதனை முதன் முதலில் தேவனிடமிருந்து திசைதிருப்பியதே இந்தக் கேள்விதான். அன்று ஆதாம்-ஏவாளிடம் பைபிள் இல்லை, ஆனால் “தேவன் சொன்னது உண்டோ?(ஆதி 3:1)” என்ற கேள்வியைக் கேட்டுத்தான் முதல் மனிதனையே சத்துருவானவன் வஞ்சித்தான்.

கர்த்தராகிய இயேசுவையும் “… என்று எழுதியிருக்கிறதே” என்று சொல்லித்தான் சாத்தான் வஞ்சிக்க முயற்சித்தான். பதிலுக்கு அவர் “…. என்றும் எழுதியிருக்கிறதே” என்று சொல்லி அவனை ஜெயித்தார். இதை உதாரணமாகக் காட்டி பலர் “நீங்கள் வேதத்தை சரியாக வாசித்து அறிந்து வைத்திருந்தால்தான் ‘என்றும் எழுதியிருக்கிறதே’ என்று சொல்லி சாத்தானை ஜெயிக்க முடியும் என்று போதிக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு தாமே வார்த்தையானவராக இருந்தபடியால் அவரை வார்த்தையைக் கொண்டு வஞ்சிக்க முடியாது. ஆனால் நம்மைப் போன்ற எளியவர்களுக்கு அது சாத்தியமா? எத்தனை உபதேசக் குளறுபடிகளை இன்று மதம் செய்து வைத்திருக்கிறது! ஒரு வசனத்துக்கு எத்தனை விதவிதமான, முரண்பாடான விளக்கங்கள் இன்று கொடுக்கப்படுகிறது!! இந்த சூழலில் ஒரு விசுவாசியால் வேதத்தை முற்றிலும் கற்றுத்தேர்ந்து கர்த்தராகிய இயேசுவைப்போல சாத்தானுடன் விவாதம் செய்து அவனை ஜெயிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.

அனைவரும் பைபிளைக் நன்கு கற்றுத்தேர்ந்த மேதைகளாக இருந்தால்தான் வழிகெடாமல் தப்ப முடியும் என்று போதிப்பது “பைபிள்படியே” கூட தவறு ஆகும். ஏனென்றால் அந்த பைபிளே சொல்லுகிறது “அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை (ஏசாயா 35:8). ஆம், பேதைகளாக இருந்தாலும் திசைகெட்டுப் போக முடியாத ஒரு வழியைத்தான் நமக்கு நம்முடைய பிதாவானவர் உண்டுபண்ணியிருக்கிறார்.

இன்று “வார்த்தை” என்றவுடன் எல்லோருக்கும் ஒரு கருப்பு அட்டையும், ஆயிரத்து சொச்சம் பக்கங்களில் வெள்ளைத் தாளில் அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகம்தான் அநேகர் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால் வார்த்தை என்றவுடன் நமது நினைவுக்கு வரவேண்டியவர் “ஆவியானவர்தான்”. ஏனென்றால் சபைக்கு வார்த்தையை போதிக்கும்படி பரலோகம் நியமித்த authority ஆவியானவர்தான்.

நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக(1 யோவா 2:27)

என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். (யோவான் 14:26)

அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர் (நெகமியா 9:20)

அப்படியானால் நம் கையிலுள்ள பைபிளைக் குறித்து என்ன?

சபைக்கு வார்த்தையை போதிக்கும்படி பிதா நியமித்த authority ஆவியானவர்தான். இதை முதலாவது விசுவாசிகள் புரிந்துகொள்ள வேண்டும். அவரோடு சேர்த்து சில உபகரணங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு உபகரணம்தான் போதிக்கும் “ஆவியின்” வரத்தைப் பெற்ற போதகர்கள்(1 கொரி 12:8). அதைப் போலவே தேவன் கொடுத்த இன்னொரு உபகரணம்தான் பைபிள். அது தேவன் நமக்குத் தந்த மகத்தானதொரு ஆசீர்வாதம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வேதாகமத்தை நம் சொந்த மொழிகளில் நம் கைகளில் கொண்டுவந்து சேர்க்க பலர் தங்கள் இரத்தத்தை சிந்தி, தங்கள் ஜீவனைக் கொடுத்துள்ளார்கள். ஆகவே அதற்கான உரிய மரியாதையை நாம் எவ்விதத்திலும் குறைக்கக்கூடாது.

ஆக, நாம் மூன்று வழிகளில் வார்த்தையை நாம் பெறலாம்:

  1. ஆவியானவர் வேதத்தை நாம் வாசிக்கும்போது அதன் மூலம் நம்முடன் பேசுகிறார்.
  2. ஆவியானவர் போதகர்களைக் கொண்டு வேதத்தின் மூலம் நம்மோடு பேசுகிறார்
  3. ஆவியானவர்தாமே உள்ளுணர்வின் மூலமோ, அனுபவங்கள் மூலமோ, அல்லது வேறு பல்லாயிரம் வழிகள் மூலமோ நம்மோடு பேசுகிறார்.

சபையில் “வார்த்தை” என்னும் சிங்காசனம் ஆவியானவருக்கு உரியது. அந்த சிங்காசனத்தை ஆவியானவருக்குக் கொடுக்காமல் உபகரணங்களுக்குக் கொடுத்தால் அந்த சபையோ, அல்லது தனிமனிதனோ திசைகெடுவது உறுதி. இங்கே பிரச்சனை என்னவென்றால் யாரோ சிலர் “ஆவியானவர் சொன்னார், தரிசனம் கண்டேன், சொப்பனம் கண்டேன்” என்று சொல்லி தவறான காரியங்களை உபதேசிப்பதால் இன்று சபையானது சத்தியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள ஆவியானவரை விட்டுவிட்டு உபகரணத்தை நாட ஆரம்பித்துவிட்டது. அதாவது ஆவியானவரை விட்டுவிட்டு பைபிளை authority-யாக மாற்றி அதனை சிங்காசனத்தில் அமர வைத்துவிட்டது.

அப்படியெனில் தவறான போதனைகளை எப்படி இனங்கண்டுபிடிக்க முடியும்?…

தவறான ஆவியை நிதானிக்க சரியான ஆவி உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது அல்லவா? அதுபோக ஆவிகளை நிதானித்து அறியும் வரமும் சபைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக வேதத்தை ஆராய்வது தவறு என்று நான் சொல்ல வரவில்லை. ஆவியானவர் உதவியோடு வேதாகமத்தை தியானித்து எது சரி எது தவறு என்று பகுத்தறிவதில் எந்தத் தவறும் இல்லை. ஆவியானவரை விடுத்து சொந்த அறிவில் வேதாகமத்தை மட்டும் சார்ந்துகொள்ளாதீர்கள் என்பதே என் அறிவுரை.

நீங்கள் கிறிஸ்தவம் சீர்கெட்டிருக்கிறது என்பதற்காக நீங்களே பைபிளைக் கையில் எடுத்துக் கொண்டு அதை சீர்படுத்த முனைந்தீர்களானால் ஆவியானவரை மட்டுப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். ஆளாளுக்கு கையில் பைபிளை வைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு உபதேசித்ததால்தான் இன்று கிறிஸ்தவம் சீர்கெட்டுக் கிடக்கிறது. அதை ஆவியானவர்தான் சரிபடுத்த வேண்டும். அவரால்தான் அதைச் சீர்படுத்தவும் முடியும்.

ஏதோ சில சபைகள் ஆவியின் பெயரால் பரவச அனுபவங்களுக்கு முக்கியத்துவம் தருகிறது என்பதற்காக உங்கள் சபையை ஆவியானவரைவிட்டு உபகரணத்தை நோக்கி திசைதிருப்புவீர்களென்றால் வழிகெடப்போவது நீங்களும்தான். அப்படித்தான் இன்று பல சபைகள் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, பைபிள்” என்று ஒரு உபகரணத்தையே திரித்துவத்தோடு சேர்த்துவிட்டன. பைபிள் ஆவியானவருடைய கையில் இருந்து அதிலிருந்து அவர் உங்களுக்கு போதிக்கும்வரை நமக்கு எந்த பாதகமுமில்லை. ஆனால் பைபிளை உங்கள் அறிவைக் கொண்டு ஆராயத் தொடங்கி, அதை மட்டுமே சார்ந்து கொண்டு உங்கள் சபையை நடத்தத் துவங்கினீர்களென்றால் முடிவில் ஒரு பரிசேய சங்கத்தைத்தான் உருவாக்கியிருப்பீர்கள். எழுத்து கொல்லும் என்று அந்த எழுத்தே சொல்லுகிறதல்லவா? ஆவிதான் உயிர்ப்பிக்கும்…(2 கொரி 3:6 )

பரவச அனுபவங்கள், அந்நியபாஷை, வரங்கள் என்றால் ஆவியானவர், வார்த்தை என்றால் பைபிள் என்று நமக்கு யார் கற்றுக்கொடுத்தது? நீங்கள் ஆவியில் நிறைந்திருந்தால் வார்த்தையிலும் நிறைந்திருப்பீர்கள். ஆக, நாம் வார்த்தைக்கும் ஆவியானவரையே சார்ந்துகொள்ள வேண்டும். அதற்கு பைபிள் நமக்கு உதவுகிறது.

Leave a Reply