கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக! ஆண்டவர் இயேசுவின் பெரிதான கிருபையால் எனது எழுத்தில் உருவான இந்தப் பாடலை சபைக்கு சமர்ப்பிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். பாடலைப் பாடிய மதிப்புக்குரிய சகோதரர் ஜாலி ஆபிரகாம் அவர்களுக்கும், இப்பாடலுக்கு இசையமைத்த அன்பு தம்பி ஜாக்சன் விக்டர் அவர்களுக்கும், மேலும் இப்பாடலுக்கு தங்கள் பங்களிப்பை அளித்த ஒவ்வொரு தேவபிள்ளைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
பாடல் வரிகள் கீழே:
பேரலை திரண்டு எழும்புதே!
பெருமழை இரைச்சல் கேட்குதே!
கையளவில் ஓர் கார்மேகம்
தொடுவானில் தென்படுதே!
தேசத்தில் எழுப்புதல் துவங்கியதே!
இயேசுவின் ஜெயக்கொடி பறக்கிறதே!
தேசம் அன்பில் நனையும் – இனி
சபைகள் நிரம்பி வழியும்
தேவ ஆவி பொழியும் – வலை
மீன்கள் நிரம்பிக் கிழியும்
ஆதி மகிமை திரும்பியதே
அறுவடைக்கான காலமிதே!
இயேசுவோடு இணக்கம் – இனி
இறுதி வரையில் இருக்கும்.
ஏதேன் தோட்ட நெருக்கம் – அது
எதிரி படைக்கு கலக்கம்!
சிலுவை தந்த உறவுயிதே -இனி
சாவும் பிரிக்க முடியாதே!
பேதம் யாவும் அகலும் – சபை
ஒன்றுகூடி மகிழும்
சாட்சியாகத் திகழும்
பரலோக வாசம் கமழும்
ஆரோன் சிரசின் தைலமிதே
ஆசியும் ஜீவனும் வழிகிறதே!
தடைகள் யாவும் தகரும்- இனி
சபையின் கொம்பு உயரும்
எதிரி கூட்டம் சிதறும் – இடம்
துதியினாலே அதிரும்
எரிகோ கண்முன் சரிகிறதே – நம்
எல்லைகள் பரவி விரிகிறதே!