பேய் ஓட்டும் ஊழியர்கள் கவனத்துக்கு…

சில ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க நாடு ஒன்றிலிருந்து சிங்கப்பூர் வந்த மிகப் பிரபல ஊழியர் ஒருவரின் விளம்பர சிடி பார்த்தேன். அதில் அவரது பேய் விரட்டும் வீரதீரப் பிரதாபங்கள் காட்டப் பட்டிருந்தன. அவரது மேடையில் பிசாசால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் போட்ட ஆட்டம் பார்க்க மிகப் பரிதாபமாக இருந்தது. அவர்களை வைத்து குரங்காட்டி வித்தை காட்டுவதுபோல அந்தப் பிரசங்கியார் அவர்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தார். அவர்களில் எத்தனை பேர் விடுதலை ஆக்கப்பட்டார்களோ தெரியவில்லை.

இன்று இந்தியாவிலும் அதே நிலைதான். இந்தியாவில் இன்று கிறிஸ்தவ தொலைக்காட்சிகள் பெருகிவிட்ட நிலையில் அநேக ஊழியர்கள் தங்கள் பேய் விரட்டும் சாகசக் காட்சிகளை தொலைக் காட்சிகளில் காண்பித்து தங்களை மார்க்கெட்டில் நிலைநிறுத்திக் கொள்ள பிரயாசப்படுகிறார்கள்.

ஆண்டவராகிய இயேசு இந்தக் காரியத்தை எப்படி அணுகினார் என்று ஆராய்ந்தேன். அவரும் ஜனங்கள் கூடியுள்ள பொது இடங்களில் வைத்தே பிசாசுகளைத் துரத்தினார் இதில் சந்தேகம் இல்லை (மாற்கு 1:23-27, மாற்கு9:17-27). எப்பொழுதும் அவரைச் சுற்றி ஜனக்கூட்டம் இருந்தபடியால் அது தவிர்க்கக் கூடாததாயிருந்தது. ஆனால் இயேசு அந்த அற்புதங்களை தனது ஊழிய விரிவாக்கத்துக்காகப் பயன்படுத்தினாரா என்றால் நிச்சயமாக இல்லை.

ஒருவேளை இயேசு இன்று இருந்திருந்தால் ஒரு கேமராமேனைக் கூடவே வைத்துக் கொண்டு அற்புதக்காட்சிகளையெல்லாம் படமாக்கி, தொகுத்து ஒரு டிவிடி தயாரித்து அதைத் தனது விளம்பரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பாரா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர் தனது ஊழிய வெற்றிக்கு பிதாவைத்தான் சார்ந்திருந்தாரேயொழிய வேறு எந்த மனித முறைமைகளையும் சார்ந்து கொள்ளவில்லை.

இந்த விஷயத்தில் பெரும்பாலும் பாதிக்கப் படுவது அப்பாவி கிராமத்து நடுத்தரவர்க்கப் பெண்களே!

பேய் ஓட்டும் காட்சியை வைத்து மார்கெட்டிங் செய்யும் ஊழியர்களே! அப்பாவிப் பெண்கள் மாராப்பு விலகிய நிலையில் தலைவிரி கோலத்தோடு அலைகழிக்கப் படும் அலங்கோலக் காட்சியைக் பகிரங்கமாகக் காட்டி விளம்பர ஆதாயம் தேட முனையும் வியாபார வித்தையை எந்த ஆண்டவரிடத்தில் அல்லது அப்போஸ்தலரிடத்தில் கற்றீர்கள்??? தேவபயம் வேண்டாம் குறைந்தபட்ச மனிதாபிமானமாவது வேண்டாமோ!!

அந்த அப்பாவிப் பெண்ணுக்கும் சுயகவுரவம் என்று ஒன்று உண்டு என்பதை ஒரு வினாடி சிந்தித்துப் பார்த்தீர்களா? அவள் ஒருவேளை ஒரு கல்லூரி மாணவியானால் அவள் தனது அலங்கோலக் காட்சியை ஊரே தொலைக்காட்சியில் பார்த்திருக்க எந்த முகத்தோடு கல்லூரிக்குப் போவாள்?? அண்டை அயலார் முகத்தில் எப்படி விழிப்பாள்?? அடுத்தவர் சுயமரியாதையைச் சுரண்டி ”தான்” கனப்படுவது எந்தவகையில் ஆவிக்குரியதாகும்?

கேள்வி: என்ன பிரதர்! நம்ம ஊழியக்காரர் அந்தப் பெண்ணைப் பிசாசு பிடியிலிருந்தே ஜெபித்து விடுதலையாக்கி இருக்கிறாரு அதை விட்டுட்டு சுயகவுரவம், அவமானம்னு ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கீங்களே??? இதுமூலமா பாஸ்டருக்கு விளம்பரம் கிடைக்கிறது ஒருபக்கம் இருக்கட்டும். அது மூலமா ஆண்டவருடைய நாமம் மகிமைப்படுதுல்ல??? இந்தக் காட்சியப் பார்த்து எத்தனை பேருக்கு விசுவாசம் வளரும்! அவிசுவாசிகள்கூட இதப் பார்த்துட்டு ஆண்டவர்கிட்ட வர வாய்ப்பிருக்கே! உண்மையச் சொல்லப்போனால் அந்த டிவியில் காட்டப்பட்ட பிசாசு அலைக்கழித்த சகோதரி ஒரு வகையில கர்த்தருக்கு ஊழியம்தான் செய்து இருக்காங்க. அதுனால அவங்களுக்கு ஆசீர்வாதம்தான் கிடைக்கும். நீங்க என்னமோ புதுசு புதுசா குழப்புறீங்களே!!!

பதில்: உண்மைதான் பிரதர்! அந்த சகோதரிகள் விடுதலையாகியிருந்தால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! விடுதலை செய்யத்தான் நம்மைக் கர்த்தர் இந்த பூமியில் வைத்திருக்கிறார். ஆனால் அதற்குப் பின்னால் நீங்கள் சொன்ன எல்லாமே தவறு. நவீன கிறிஸ்தவம் உங்களுக்கு இப்படி வேதத்துக்குப் புறம்பான காரியங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

சரி! நீங்கள் சொல்வதே சரியாக இருந்தாலும், அந்த ஊழியக்காரருக்கு அதே வயதில் ஒரு கல்லூரி செல்லும் மகள் இருந்து அவளுக்கு பிசாசு பிடித்திருந்தால். அந்தப் பிசாசு நீங்க வேண்டுமென்று அவர் அந்தரங்கத்தில் தேவனை நோக்கிக் கதறுவாரா? அல்லது ஆண்டவருடைய நாமம் மகிமைப் படட்டுமே என்று அவளுக்கு பிசாசு ஓட்டி அது அலைக்கழிக்கும் காட்சியை வீடியோவில் படமாக்கி அதை ஊரே பார்க்கும்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவாரா???? ஏன், அவர் தன் சொந்த மகளைக் கொண்டு ஆண்டவரை மகிமைப்படுத்தக் கூடாதா?

டி.வி நிகழ்ச்சியில் தனது சொந்தப் பிள்ளைக்கு நேர்த்தியாய் உடைஉடுத்தி பாடல் பாடச்செய்து அந்தப் பாடலை தனது பிரசங்க நேரத்துக்கு முன்னால் ஒளிபரப்பி அழகுபார்க்கும் ஊழியர், யாரோ ஒருவர் பெற்ற ஒரு பெண்மகள் பேய்பிடித்து ஆடும் அலங்கோலக் காட்சியை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தி கொள்வதுதான் கிறிஸ்தவ அன்பா? இப்படி தனது நாமம் மகிமைப் படுவதை ஆண்டவர் விரும்புவாரா?

“மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம் (மத் 7:12). என்று வேதம் ஆணியறைந்தாற்போல சொல்லுகிறது. ”உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசி” என்ற பிரதான கற்பனை இங்கு முற்றிலுமாக அடிபட்டுப் போகிறது.

சம்பந்தப்பட்ட பெண்கள் அந்த ஊழியக்காரரை அணுகி ஏன் எனது படத்தை இப்படிக் காட்டுகிறீர் என்று கேட்கவும் முடியாது. கேட்டால் ஆண்டவருடைய காரியத்துக்கு பயன்படுத்துகிறோம் அதைப் போய் கேள்வி கேட்கிறாயே என்று சொல்லி Spiritual Blackmail செய்வார்கள். இதேநேரம் மேல்தட்டு பெண்களாயிருந்தால் மானநஷ்ட வழக்கு போட்டு கோர்ட்டுக்கு இழுத்துவிடுவார்கள். ”நம்ம பட்டிக்காட்டுப் பொண்ணுங்கதானே அதுங்க என்ன செய்யும் என்ற தைரியம்”

பிசாசை வைத்து தன்னை மகிமைப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு பலர் இன்று துணிகரம் கொண்டுவிட்டார்கள். மதுரையில் உள்ள ஒரு பேர்போன பேய்விரட்டும் ஊழியர் கூட்டத்துக்கு சென்றிருந்தேன். அவர் ஒரு பிசாசு பிடித்த பெண்ணின் தலையில் கைவைத்து “ஆடு…ஆடு” என்று கட்டளை கொடுக்கிறார், பிசாசைப் பார்த்து ”ஓடு…ஓடு” என்றல்லவா கட்டளையிட வேண்டும்!!! அது ஆடினால் பலருடைய கவனம் ஈர்க்கப்படும், தன் மீது சபையாருக்கு உள்ள பயம் அதிகரிக்கும், தன் புகழ் ஓங்கும். தன்னை எல்லோரும் துடைத்துப் போடுகிற அழுக்காக பாவித்துக் கொண்ட பவுல் எங்கே? இவர்கள் எங்கே?

நான் ஆவிக்குரிய சபைகளுக்கு எதிரானவன் அல்ல. நானும் பெந்தேகோஸ்தே பின்னணியிலிருந்து வந்தவன்தான், பெந்தேகோஸ்தே அனுபவம் (அப்போஸ்தலர் 2) இல்லாத கிறிஸ்தவம் எப்படி ஆபத்தானதோ, அதுபோலவே கிறிஸ்து இல்லாத பெந்தேகோஸ்தேயும் அபாயகரமானது. அடிமையின் வேண்டுகோளுக்கு செவிகொடுத்து அப்பாவி, பாமர மனிதர்களை நேசியுங்கள். அவர்களை கனம் பண்ணுங்கள். ”ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்” என்று நீதிமொழிகள் 17:5 எச்சரிக்கிறது. முடியாவிட்டால் தயவுசெய்து குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு அந்த பெண்களுடைய முகத்தை Video Editing-இல் மறைக்கவாவது முயலுங்கள்.

30 thoughts on “பேய் ஓட்டும் ஊழியர்கள் கவனத்துக்கு…”

  1. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அற்புதங்களை ,
    பிதாவின் நாமத்தை மகிமைப்படுத்தவும்,
    ஜனங்கள் மீது கொண்ட அன்பு மற்றும் கரிசனையில் தான் செய்தாரே தவிர,
    வேறு என்ன நோக்கத்தில் செய்தார்.?

    இதை ஏன் இன்றைய ஊழியர்கள் புரிந்துகொள்வது இல்லை.?

    Praise the LORD brother.

    Good article..

    Praise the LORD.

  2. நல்ல கட்டுரை. இதுவே என் கருத்தும். தன் பிள்ளைகளை இப்படிக் காட்டுவார்களா? உண்மை அன்பும், உணர்வுள்ள இருதயமும் பல ஊழியக்காரர்களுக்கு இல்லாததையே இது காட்டுகிறது.

    அது மட்டும் அல்லாமல் , கூட்டங்களில் ஜனங்கள் வருத்தப்பட்டுக் கண்ணீர் வ்டிப்பதையும் காட்டி காசாக்கி விடுகிறார்களே. ஒருத்தர் அழுவதை விழுந்து விழுந்து படம் பிடித்து போடுவதில் என்ன தான் சந்தோஷமோ?

    மற்றும், கை தட்டுவது, கை அசைப்பது, அபிஷெகத்தில் நிறைவது, பொட்டு வைத்திருப்பது போன்ற் காரியங்களும் கேமிராவை உங்க பக்கம் இழுக்கும்.

  3. அருமையான படைப்பு சகோதரா தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்!!!

  4. எனக்கும் கூட உங்கள் கருத்துதான் ஒருவேளை இந்த ஊழியர்களின் பிள்ளைகளை இப்படி செய்தால் இவர்களின் பதில் என்னவாக இருக்கும்? சிந்திப்பார்களாக.

  5. நல்ல அருமையான கட்டுரை சகோதரா,
    இயேசு கிறிஸ்து நாமத்தை மகிமைப்படுத்தம் உங்க இருதயம் அருமை.

  6. மக்களுக்கும் சபை மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் சகோதரா . இயோசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக

  7. அன்பு சகோதரர் விஜய் அவர்களே,
    நல்லதொரு கட்டுரையினை உங்கள் பாணியில் படைத்திருக்கிறீர்கள்;நீங்கள் எழுதினால் அது உடனே சென்று சேரவேண்டிய இடத்தில் சேருகிறது;எல்லாவற்றுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் போலிருக்கிறது.

    ஆனாலும் நீங்களாவது நண்பர் என்ற முறையில் நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் இதுகுறித்து ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை ஒரு வரியாகிலும் குறிப்பிட்டிருந்தால் நமக்குள் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்பட வாய்ப்புண்டாகுமே..?

    நம்முடைய கட்டுரை (?!) யை தாங்கள் கவனிக்கவில்லையோ அல்லது அதன் பாதிப்பினால் நீங்கள் இதை எழுதினீர்களோ நான் அறியேன்…ஆனாலும் நமது மதிப்புற்குரிய வாசகர்களின் கவனத்துக்கு இதனைக் கொண்டுவருகிறேன்.

    அடியேன் ஆதாரத்துடனும் நேருக்கு நேராக பெயரைக் குறிப்பிட்டும் எழுதுவதால் எனக்கு எதிரிகள் அதிகம்,ஆனாலும் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்முடைய பாணி இதுவே என்று நிர்ணயித்துக்கொண்டேன்.

    நீங்கள் கட்டுரைகளாகவே எழுதி அதனைப் புத்தகமாகவும் போடுமளவுக்கு நேர்த்தியாக வேலை செய்கிறீர்கள்;உங்கள் அளவுக்கு நான் இந்த காரியத்தில் என்னால் சாதிக்கமுடியாத வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.

    http://chillsam.activeboard.com/t42362968/3g-to-heaven/

    http://chillsam.activeboard.com/t39030228/topic-39030228/

    1. அன்பு சகோதரர் அவர்களுக்கு, தங்கள் பின்னூட்டத்துக்கும் தங்கள் கட்டுரையின் தொடுப்பைத் தந்து அடியேனுடைய கட்டுரைக்கு வலு சேர்த்தமைக்கும் மிக்க நன்றி. தாங்கள் இணைத்துள்ள வீடியோ துக்கத்தையும் கோபத்தையும் வரவழைப்பதாக இருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் இந்த மாதிரி ஊழியர்களை விட அந்த இளைஞரைப் பிடித்திருந்த பிசாசே தேவலாம் போல இருக்கிறது. தனது சுய விளம்பரத்துக்காக ஒரு வாலிபரின் சுயமரியாதையைக் கிழித்து தெருவில் தொங்கவிட்டிருக்கிறார் நமது கனம் பொருந்திய ஊழியர்.

      //ஆனாலும் நீங்களாவது நண்பர் என்ற முறையில் நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் இதுகுறித்து ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை ஒரு வரியாகிலும் குறிப்பிட்டிருந்தால் நமக்குள் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்பட வாய்ப்புண்டாகுமே..?//

      மன்னிக்க வேண்டும் சகோதரரே! இந்தக் கட்டுரை கடந்த அக்தோபர் மாதம் எழுதப்பட்டு அடியேனுடைய பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டது. இக்கட்டுரை “உண்மை சுடும்” புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. தங்களது கட்டுரையை நான் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனாலும் இப்போது தொடுப்பைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

      //நீங்கள் கட்டுரைகளாகவே எழுதி அதனைப் புத்தகமாகவும் போடுமளவுக்கு நேர்த்தியாக வேலை செய்கிறீர்கள்;உங்கள் அளவுக்கு நான் இந்த காரியத்தில் என்னால் சாதிக்கமுடியாத வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.//

      ஊழியத்தை நினைக்கும் போதெல்லாம் நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் ஒரு காரியம் உண்டு சகோதரரே! அது கர்த்தராகிய இயேசு சொல்லும் “நல்லது உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனே!” என்பதுதான். அவர் “நல்லது பெரிதானவற்றை சாதித்த வெற்றிகரமான ஊழியனே!” என்று சொல்லவில்லை. “கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்றும் வேதம் சொல்லுகிறது. பாராட்டுகளிலிலும் வெற்றிகளிலும் மேன்மை பாராட்டாதபடி நம் தலையில் குட்டிவைக்கும் காரியங்கள் இவைகளே! நமது சாதனைகளல்ல “நமது உண்மையே” கடைசிநாளில் பேசப்படும் அல்லவா? தாங்கள் தைரியத்திலும், கிறிஸ்துவுக்காகப் பாராட்டும் வைராக்கியத்திலும் எட்டிப்பிடிக்க முடியாத தொலைவிலல்லவா இருக்கிறீர்கள்! தங்கள் வைராக்கியத்துக்கான வெகுமதியை கர்த்தருடைய கரத்திலிருந்து நிச்சயம் பெறுவீர்கள்!

  8. பேய் ஓட்டுகிறோம் என்ற பெயரில் தன்னை பிரபலபடுத்துவதும் அதன் மூலம் கொஞ்சம் காசு பார்ப்பதும் தான் தற்போது பேய் ஒட்டுவதில் நடக்கிறது. (விடியோ போன்று எடுத்து பேய் ஓட்டுவதை விளம்பர படுத்துகிறவர்களை மட்டுமே சொல்கிறேன்). ஆனால் ஆத்துமா பாரத்தினால் செய்கிறவர்கள் இதையெல்லாம் விளம்பர படுத்துவதில்லை. எங்கள் ஊரிலும் தற்போது ஒருவர் அமவாசை ஜெபம் என்ற பெயரில் முழு இரவு ஜெபம் நடத்துகிறார். அவரும் பேய் ஓட்டுவதை சிடி எடுத்து விளம்பரமோ விளம்பரம் செய்து வருகிறார். நல்ல காசும் பார்த்து வருகிறார். இப்போதெல்லாம் இவரின் பேய் ஓட்டும் விழாவுக்கு ஒரே கூட்டம் தான் போங்கள். (விஜயின் இந்த கட்டுரையை இவருக்கும் அனுப்பி யுள்ளேன்) இப்படிப்பட்ட ஊழியர்களின் பின்னே செல்லும் விசுவாசிகளில் கொஞ்சம் பேருக்காவது புத்தி தெளிவிக்க இந்த கட்டுரை உதவும் என நினைக்கிறேன். கர்த்தர் உங்கள் மூலமாக அநேக கட்டுரைகளை வரைய (வளர) செய்வாராக

  9. ரமேஷ் அவர்களே, இப்படி இலைமறை காய்மறையாக எழுதிய காலம் முடிந்துவிட்டது;அந்த பெரிய (?) மனிதர் யார் என்று வெளிப்படையாகச் சொல்லுங்கள்;வியாசர்பாடி மோகன் தாஸ் என்பீர்களாகில் அவரைக் குறித்து எழுத நானும் ஆயத்தமாக இருக்கிறேன்;

    “வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாக இருக்கிறது” என்று வேதம் சொல்லுகிறதல்லவா..? அல்லாவிட்டால் எனக்கு மின்னஞ்சல் மூலம் அந்த விவரத்தை அனுப்புங்கள் நான் வெளியிடுகிறேன்;

    குற்றஞ்சாட்டுவது முக்கியமல்ல,அது எப்படி குற்றமாகிறது,அதற்கு மாற்று என்ன என்பதையும் சொல்லியாக வேண்டும்;

    எனது மின்னஞ்சல் முகவரி:
    chillsam@rocketmail.com

  10. சில் சாம் அவர்களே அந்த ஊழியரின் பெயரை வெளிப்படையாக சொல்ல சொல்லியுள்ளீர்கள். நானும் யோசித்தேன். சொல்லுவது சரியாக இருக்குமா என்று.. அவரிடம் சென்றுள்ள இந்த கட்டுரையின் நகலுக்கு என்ன பதில் சொல்கிறார் என்று பார்த்து பிறகு சொல்லுகிறேன். நீங்கள் சொன்ன குறிப்பிட்டு சொன்ன நபரல்ல…
    தற்போது நான் சொல்லும் இந்த ஊழியர் ஜனவரி மாதத்தில் 2011க்கான தீர்க்கதரிசனங்கள் என்ற கூட்டத்தில் ஜப்பானில் சுனாமி வரும் என்று சொல்லி அது தற்போது நடைபெற்றுவிட்டதால் அந்த தீ.தரினசத்தில் பேசின சிடி வைத்து நல்ல விளம்பரம் செய்து வருகிறார். (தங்களுக்குள்ளே யார் அதை முன்னதே சொன்னது என்று சொல்லி அதற்காக தீ.தரிசிகள் தங்களுக்குள் அடித்து கொள்வதும் தற்போது நடந்து வருகிறது என்பது வேறு கதை..) போஸ்டர் அடித்தும் விளம்பரம் செய்துள்ளார்.. எப்படியெல்லாம் திர்க்கதரிசனங்கள் வியாபாரமாகிறது பாருங்கள்

  11. பெந்தேகோஸ்தே அனுபவம் (அப்போஸ்தலர் 2) இல்லாத கிறிஸ்தவம் எப்படி ஆபத்தானதோ, அதுபோலவே கிறிஸ்து இல்லாத பெந்தேகோஸ்தேயும் அபாயகரமானது.

  12. அன்பு சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! கட்டுரை மிகவும் அருமை, ஆனால் ஒரு சின்ன கேள்வி! என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவார்கள் என்று இயேசுகிறிஸ்து மாற்கு 16:17-இல் சொல்லியிருக்கிறாரே. அது இப்போது சாத்தியம் ஆகுமா? ஆகாதா தயவுசெய்து சற்று விளக்கவும்.

    1. பாஸ்டர் கிளமண்ட் அவர்களே! தங்கள் வருகைக்கும் கமெண்டுக்கும் நன்றி! ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் தங்களை அன்புடன் வரவேற்கிறேன். பிசாசுகளைத் துரத்துவது மாத்திரமல்ல விசுவாசிகளால் நடக்கும் அடையாளங்கள் என்று இயேசு சொல்லியிருப்பவைகளெல்லாம் இன்றைய விசுவாசிகளால் சாத்தியமே! நான் அற்புத அடையாளங்களெல்லாம் ஓய்ந்துவிட்டது என்று சொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவனல்ல. நான் இந்தக் கட்டுரையை எழுதிய நோக்கம் வரத்தைக் குற்றப்படுத்துவதல்ல. சிலர் அதை சுயவிளம்பரத்துக்காகச் செய்கிறார்களே, பிறரை அசிங்கப்படுத்தியேனும் தான் புகழடையவேண்டும் என்று நினைக்கிறார்களே அந்த துர்குணத்தைத் தோலுரித்து இப்படிப்பட்டவர்களிடம் மயங்காதீர்கள் என்று விசுவாசிகளுக்குச் சொல்லத்தான்.

    1. இடம் கொடுத்தால் பிடிப்பான்.
      தலை விரித்து ஆடினால் தான் பிசாசுக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.

      பேதுரு – அப்பாலே போ சாத்தானே என்று கடிந்து கொள்ளப் பட்டான்.
      யூதாஸ் – முழுவதுமாய் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு செத்தான்
      அனனியா, சப்பீராள் – ஆண்டவருக்கு விரோதமாக பொய் சொல்லும்படி பிசாசு தூண்டினான்.

      1. Peter was rebuked by Jesus Christ for his evil taught, the Bible does not say that he was possessed by demon. Judas not true Jesus’ follower.
        Satan can tempt anyone because he tempted Jesus Christ.
        Posses by the demon is deferment from tempting. understand my qstn no true believer will be posses by demon

    1. Before I answer ur question dear brother I would like to know ur understanding. “Who is a believer?”

      Because Paul, Peter, John, Hudsun Taylar, Charles Fenny are believers. Those who pray just a sinners prayer in a meeting but totally living a worldly life also claim himself as a believer. Who is a Believer as per ur understanding?

    1. Thanks for your answer brother. Sorry for dragging the discussion i need more answers from you so that i can give u a proper answer.

      My next question is what do you mean by accepting “Jesus a personal Saviour”? Saving from what? Saving for what?

      1. Knowing Jesus personally and having fellowship with Him and living a righteous life. saving from Sin and saving escape the wrath of God

  13. நான் இப்பொழுது தான் இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது
    மிகவும் அருமையான கட்டுரையை தந்துள்ளிர்கள் நண்பரே

    ____________________________________________________
    முடியாவிட்டால் தயவுசெய்து குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு அந்த பெண்களுடைய முகத்தை Video Editing-இல் மறைக்கவாவது முயலுங்கள்.முடியாவிட்டால் தயவுசெய்து குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு அந்த பெண்களுடைய முகத்தை Video Editing-இல் மறைக்கவாவது முயலுங்கள்.
    __________________________________________________

    நல்ல ஆலோசனை நண்பரே………..

  14. பெந்தேகோஸ்தே அனுபவம் (அப்போஸ்தலர் 2) இல்லாத கிறிஸ்தவம் எப்படி ஆபத்தானதோ, அதுபோலவே கிறிஸ்து இல்லாத பெந்தேகோஸ்தேயும் அபாயகரமானது

Leave a Reply