புரியாத கவிதை

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான் (I கொரிந்தியர் 2:15).

தேவனுடைய மனுஷனின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அவன் திறந்த புத்தகமாக இருப்பான். ஆனாலும் அதைப் படிக்கும் ஒருவனுக்கும் ஒன்றும் புரியாது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து திறந்த புத்தகமாகவே இருந்தார் ஆனாலும் அவரைச் சுற்றி இருந்தவர்கள், அவரது குடும்பத்தார் உட்பட அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எந்த கேள்விக்கு எந்தக் கோணத்தில் பதிலளிப்பார். ஒரு விஷயத்தை எப்படி புரிந்து வைத்திருக்கிறார் என்பது அவர் வெளிப்படையாக பேசும்வரைக்கும் ஒருவனுக்குப் புரியாதிருந்தது. பேசிய பின்னரும்கூட பலருக்கும் அது விளங்கிக்கொள்ள கடினமாயிருந்தது. தேவனிடத்தில் கற்றுக் கொண்டு ஆவிக்குரிய ஞானத்தில் நீங்கள் வளர வளர பிறகுக்கு விளங்க முடியாத புதிராக மாறிப்போவீர்கள்.

ஆனால் ஜென்ம சுவாபமுள்ள மனுஷனோ அவன் மூடிய புத்தகமாய் இருந்தாலும், அந்த மூடப்பட்ட புத்தகத்தில் இருப்பவை ஆவிக்குரியவன் கண்களுக்கு வெட்ட வெளிச்சமாகவே இருக்கும். “இயேசு அவர்களின் சிந்தையை அறிந்து, …நீங்கள் இப்படி உங்கள் இருதயங்களில் சிந்திக்கிறது என்ன?” என்று கேட்ட சம்பவங்களை வேதத்தில் பல இடங்களில் வாசிக்கிறோம்.

காரணம் என்னவென்றால் இறை ஞானம் என்பது முதலாவது நமது புரிதலை மாற்றுகிறது. எனவே நமது சிந்தை மாறுகிறது. எனவே உலகத்தின் போக்கில் சிந்திக்கவோ, பேசவோ, செயல்படவோ மாட்டோம். உண்மையில் மத அடையாளங்களோ, சடங்குகளோ அல்ல, இறைஞானமே நம்மை இந்த உலக மாயையில் இருந்து தனிமைப்படுத்துகிறது. எனவேதான் உலகத்தாருக்கு ஒரு ஆன்மீகவாதியை புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. ஆன்மீகவாதிக்கு உலகத்தாரை புரிந்துகொள்வது மிக எளிதாக இருக்கிறது.

ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். (நீதிமொழிகள் 4:7 )

Leave a Reply