புத்திரன் என்பவன்…

இந்த உலகத்தின் ஆலோசனைகள் வேறு, தேவனுடைய ஆலோசனைகள் வேறு. நாம் உலகத்திடம் ஆலோசனைகளைக் கற்றுக்கொண்டு வந்து அதை தேவனிடம் நிறைவேற்றச் சொல்லிக் கேட்பது வில்லங்கமான ஜெபம். புறஜாதியாரைப்போல தங்களையும் ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்தித் தரும்படி இஸ்ரவேலர் சாமுவேலிடம் வைத்த விண்ணப்பமும் அத்தகையதுதான். அது எத்தகைய மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை வேதாகமம் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.

தேவனுக்கு ஆலோசனை கொடுப்பதைவிட அவரை நோக்கி அபயமிடுவது சிறந்தது. எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலருக்கு புறஜாதிகளைப் பார்த்தெல்லாம் தேவனுக்கு ஆலோசனை சொல்லி ஜெபிக்கும் அளவுக்கு அறிவில்லை. ஆகவே அவரை நோக்கி அபயமிட்டார்கள். ஆபத்து வரும்போது அப்பாவை நோக்கி அபயமிடுவது பிள்ளைகளின் குணம். தேவன் அவர்களுக்கு வரலாறு காணாத ஒரு விடுதலையைக் கட்டளையிட்டார். தேவனை அவருடைய ஸ்டைலில் நம்முடைய வாழ்வில் செயல்பட விட்டுக்கொடுப்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவங்களை நமக்குப் பரிசாகக் கொடுக்கும்.

தேவனை நோக்கி அபயமிடுவதைவிட அவரை அறிந்து விசுவாசிப்பது இன்னும் சாலச் சிறந்தது. விசுவாசத்தில் நடப்பது என்பது இயேசுவின் முன்மாதிரி. ஆபத்து வரும்போது அப்பாவைப்போல நடந்துகொள்ளுவது புத்திரர்களின் குணம். புத்திரன் தேவனுக்கு ஆலோசனை சொல்லவும்மாட்டான், பயத்தில் அவரை நோக்கி அபயமிடவும் மாட்டான். அப்பாவிடம் கற்றுக்கொண்டது எதுவோ அந்த ஆலோசனைகளை அப்பாவின் பிரதிநிதியாக பூமியில் நின்று நிறைவேற்றுகிறவனாக இருப்பான். பிதா நம்மில் எதிர்பார்ப்பது இதைத்தான்.

Leave a Reply