பிரச்சனையை விட ஆபத்தான தீர்வு

உலக மக்கள் மீது ஒடுக்குதல்களைக் கட்டவிழ்ப்பவன் பிசாசு. அந்த ஒடுக்குதலால் ஏற்படும் எதிர்வினையை இயக்குபவனும் அவனே! ஒடுக்குதலால் ஏற்படும் விளைவைவிட எதிர்வினையால் ஏற்படும் விளைவுதான் அவன் உண்மையிலேயே எதிர்பார்ப்பது.

சித்தாந்தங்களை வலது, இடது என்று பிரிப்பதிலிருந்தே அது இரண்டும் தோன்றியது ஒரே மூலம்தான் என்பதை அறிந்துகொள்ளலாம். வலது கையும், இடது கையும் ஒரே தோள்ப்பட்டையுடன்தானே இணைக்கப்பட்டுள்ளது! அந்த இரு கைகளையும் இயக்குவது ஒரே மூளைதானே!!

சத்துரு ஒரு பிரச்சனையை ஏற்ப்படுத்துதன் நோக்கமே, ஏற்கனவே தான் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு தீர்வை நோக்கி ஜனங்களை நகர்த்தத்தான். பிரச்சனையை விட அந்தத் தீர்வுதான் அவனது பிரதான திட்டமாகவே இருக்கும்.

ஒரு காலத்தில் பெண்களை மிகக் கடுமையாக அடிமைப்படுத்தி அவர்களை நசுக்கிப் பிழிந்தது பிசாசின் செயல். பெண்களை அவனுக்கு அறவே பிடிக்காது. காரணம் ஸ்திரீயின் வித்துதானே சர்ப்பத்தின் தலையை நசுக்கினது. பெண்ணினத்தைக் கடுமையாக அடிமைப்படுத்தும்போது நல்லவர்களிடமிருந்தும், நேர்மையாளர்களிடமிருந்தும் எதிர்ப்புக் குரல் எழும்பும். பெண்ணுரிமைக்கான அந்தக் குரல்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அதை அடுத்த extreme-க்கு இழுத்துச் செல்வதுதான் பிசாசின் பிரதான நோக்கமே!

பாபிலோன் வேசியாகிய யேசபேலின் ஆவி அதைத்தான் இப்போது இவ்வுலகில் மும்முரமாக செய்து கொண்டிருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு மீடியாக்களில் காட்டப்படுபவைகளையும், இவ்வுலகின் அன்றாட நகர்வுகளையும் கவனிப்பீர்களானால் எல்லாம் தெளிவாகப் புரியும். அவன் பெண்ணடிமைத்தனத்தை மதங்கள் மூலம் கொண்டு வந்ததே அதற்குத்தான்.

கடைசி காலத்தைச் சேர்ந்த இந்தத் தலைமுறைப் பெண்களிடம் “எதிர்த்து நிற்கும் கலக ஆவியை” விதைப்பதே சத்துருவின் நோக்கம். அதற்காக அவன் ஆண்களையெல்லாம் விட்டுவைத்திருக்கிறானா என்றால் நிச்சயமாக இல்லை. ஆண்களை ஆகாப்களாகவும், பெண்களை யேசபேல்களாக மாற்றவும். அதன் மூலம் தேவன் உருவாக்கின குடும்பக் கட்டமைப்பை உடைக்கவும் பிசாசானவன் முனைந்து கொண்டிருக்கிறான்.

எதிர்கால சந்ததியின் கருவைச் சுமப்பவர்கள் பெண்கள்தான். அவர்களுக்குள் தொடர்ந்து விதைக்கப்படும் கடுமையான கலககுணம் அவர்கள் மரபணு வரை பாதிக்கிறது. மிகவும் கடுமையான உணர்வுகள் மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ உலகம் சொல்லுகிறது. மரபணுவை பாதித்தால்தான் “எதிர்த்து நிற்கும் கலகக்காரனான” அந்திகிறிஸ்துவின் ஆவியால் எளிதில் பீடிக்கப்படக்கூடிய மனநிலையைக் கொண்ட அநேக பிள்ளைகளை இந்த உலகத்தில் தோற்றுவிக்க முடியும்.

அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்(2 தெச 2:4)

இங்கு ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. பெண் ஆணைவிட தாழ்ந்தவளுமல்ல, உயர்ந்தவளுமல்ல, ஆணுக்கு சமமானவளுமல்ல. அதே போல ஆணும் பெண்ணைவிட தாழ்ந்தவனுமல்ல, உயர்ந்தவனுமல்ல பெண்ணுக்கு சமமானவனுமல்ல. பெண்கள் ஒருவிதத்தில் விசேஷித்தவர்கள், ஆண்கள் ஒருவிதத்தில் விசேஷித்தவர்கள். இருவருமே தேவனுக்குப் பிரியமானவர்கள். அவ்வளவுதான்!

ஆண்களே, ஆண் பெண்ணைவிட உயர்ந்தவன் என்ற மாயைக்குள் சிக்கி பெண்களை அற்பமாக எண்ணி அடிமைப்படுத்தாதீர்கள். பெண்களே, Feminism என்ற பெயரில் இன்று விதைக்கப்படும் பிசாசின் நஞ்சுக்கு எச்சரிக்கையாய் இருங்கள்! உங்கள் கருவிலிருந்து கர்த்தரை நேசிக்கும் உத்தம சந்ததி உருவாகட்டும்.

Leave a Reply