பிரசங்க பீடத்தை வீணடிக்காதீர்கள்

ஒன்றைச் செய்யக்கூடாதென்றால், வேறு எதைச் செய்ய வேண்டும் என்பது தெளிவாக விளக்கப்பட வேண்டும்.

மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது (1 பேதுரு 3:3,4)

இங்கு பேதுரு புறம்பான அலங்காரத்துக்கு பதிலாக ஆவிக்குரிய அலங்காரத்தைப் பேசுகிறார். ஆனால் இன்றைய பல பிரசங்கிமார்கள் இதே வசனங்களை எடுத்து புறம்பான அலங்காரத்துக்கு பதிலாக புறம்பான அலங்காரத்தையே பேசுகிறார்கள்.

அதாவது பேதுரு நகை அணிவதற்கு பதிலாக சாந்தம், அமைதலுள்ள ஆவி ஆகிய குணங்களைப் பேசுகிறார். ஆனால் இன்றைய பிரசங்கிகள் நகை அணிவதற்குப் பதிலாக நகை அணியாமையே அலங்காரம் என்று பேசுகிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

ஒருவேளை பேதுரு இன்று இருந்தால் உங்கள் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் அல்ல துதியே அலங்காரமாக இருக்கட்டும் என்று சொல்லியிருப்பார். ஆனால் இன்றைய பிரசங்கிகளோ ஒரு கிறிஸ்தவள் லிப்ஸ்டிக் போடுவதல்ல, போடாமல் இருப்பதே அலங்காரம் என்று பேசுகிறார்கள். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

பவுல் மட்டும் 1 தீமோ 2-ஆம் அதிகாரத்தில் விலை உயர்ந்த வஸ்திரங்களுக்குப் பதிலாக நாணம், தெளிந்த புத்தி மற்றும் நற்கிரியை போன்ற ஆவிக்குரிய சுபாவங்களோடு “தகுதியான வஸ்திரங்கள்” என்ற ஒரு புறம்பான காரியத்தையும் சேர்க்கிறார். ஆனால் எதெல்லாம் தகுதியான வஸ்திரம் என்று அவர் ஒரு லிஸ்ட் போடவில்லை. ஏனெனில் எது தகுதியான வஸ்திரம் என்பதை அவரவர் சுபாவங்களே போதிக்கும்.

தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன் (1:தீமோ 3:15) என்று பவுல் எழுதுகிறார். எனவே விசுவாசிகள் சபையிலும் வெளியிலும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சபைகளில் அறிவுறுத்துவது நல்லதுதான். ஆனால் அறிவுரைகளாக சொல்லப்பட வேண்டிய இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உபதேசங்களாக மாற்றி இவைகளுக்காகவே பிரசங்க பீடங்களை பயன்படுத்துவது வேதனைக்குரியது.

ஒரு விசுவாசி அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள், அவனது வாழ்க்கையை மாற்றக்கூடிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது, அஸ்திபார உபதேசங்களையே மறுபடி மறுபடி போதியாமல் பூரணராகும்படி கடந்து செல்லுங்கள் என்று வேதம் எபி 6:1-3 இல் நமக்கு போதிக்கிறது. ஆனால் நாமோ அந்த அஸ்திபாரத்தையே கூட இன்னும் ஒழுங்காகப் போடாமல் பாத்திரத்தின் வெளிப்புறத்தை சுத்தமாக்குவதைக் குறித்தே திரும்ப திரும்ப எவ்வளவு காலம் போதிக்கப்போகிறோம்.

முகநூலைத் திறந்தாலே சபைக்குள் ஷூ போடாதே, சபைக்குள் மொபைல் உபயோகிக்காதே, ஜீன்ஸ் போடாதே, லெக்கின்ஸ் போடாதே என்று இதே பிரசங்கங்கள் திரும்பத் திரும்ப உலவுவதையும், இவற்றைப் பேசும் பிரசங்கிகள் தைரியமுள்ள பிரசங்கிகள் என்று கொண்டாடப்படுவதையும் பார்க்கும்போது சபை எதை நோக்கிச் செல்லுகிறது என்ற வேதனை ஏற்படுகிறது. இவர்கள் கொண்டாடப்படுவதைப் பார்த்து மேலும் பலர் எழும்பி பிரசங்கப் பீடங்களை வீணடிக்க வாய்ப்புண்டு.

இப்படி பிரசங்க பீடங்களை வீணடிப்பதைவிட சத்தியத்தை சரியாக போதித்தாலே அந்த சத்தியம் மக்களை அழகான ஒழுங்குக்குள் நடத்திவிடும்.

Leave a Reply