பரிசுத்தம் இயல்பாக வருவது

இரட்சிக்கப்பட்டபின் எப்படியாவது பரிசுத்தமாய் வாழ்ந்து கர்த்தருடைய அன்பைப் பெற்றுவிட வேண்டுமென்று (சுய முயற்சியில்) போராடுவது தேவனுக்காக போராடுவதல்ல, தேவனோடு போராடுவது.

என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (யோவா 15:5) என்று இயேசு சொல்லியிருக்க அவரைச் சார்வதில்தான் வெற்றியிருக்கிறது என்பதை உணராமல் ஓடிக்கொண்டிருக்கும்வரை அவர் நம்மில் கிரியை செய்யக் கூடாதபடிக்கு நாமே தடையாக இருக்கிறோம்.

புதிய ஏற்பாடு முழுவதும் நம்மை பரிசுத்தமாக வாழவும், நற்கிரியைகளைச் செய்யவும், அன்பு செலுத்தவும் வலியுறுத்துகிறது, ஆனால் அவை கனிகளாக வெளிப்படவேண்டும் என்பதுதான் தேவதிட்டம். எந்த மரமும் கஷ்டப்பட்டுப் போராடி கனி கொடுப்பதில்லை. எல்லா மரங்களும் தன் காலத்தில் தன் கனியை இயல்பாகக் கொடுக்கிறன. இருளில் இருக்கும் வரை இருளின் கிரியைகளை நாம் இயல்பாக செய்தது போல, ஆச்சரியமான ஒளிக்குள் பிரவேசித்த பின்னர் ஒளியின் கிரியைகளையும் இயல்பாகத்தான் செய்ய வேண்டும்.

இங்கு பிரச்சனை என்னவென்றால் நமது மாம்சம் (சரீரமல்ல) சிலுவையில் மரணித்ததை அறியாமல் அதை இன்னும் வைத்துக் கொண்டு அது நம்மை ஆளுவதற்கு விட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பதால்தான் நமக்கு ஆவிக்குரிய வாழ்க்கையில் போராட்டங்கள் வருகின்றன. பாவத்துக்கு விரோதமாக போராடுவதில் நாம் இரத்தம் சிந்தத்தக்க அளவு எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. இடறல் உண்டாக்கும் அவையவங்களை பிடுங்கி எறிய வேண்டிய அளவுக்கு உக்கிரப் போராட்டம் நடத்த வேண்டியதிருக்கிறது.

உலக வாழ்வில் குழந்தைகள் சார்ந்து வாழ்பவர்கள், புருஷர்கள் (adult) சுயமாக வாழ்பவர்கள். ஆனால் ஆவிக்குரிய உலகமோ அதற்கு நேர்மாறானது. அங்கு குழந்தைகள் மாம்சத்துக்குரியவர்களாக இருந்து (1 கொரி 3:2) சுயத்தில் ஓடுபவர்கள், புருஷர்களோ (கிறிஸ்துவை) சார்ந்து வாழ்பவர்கள்.

எனவேதான் சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவா 8:32 ) என்று வேதம் சொல்லுகிறது. வேதம் சொல்லும் சத்தியம் என்ன? இதுவரை நம்மை பாவத்தில் அமிழ்த்திய ஆதாமின் சுபாவமான மாம்சம் ஏற்கனவே சிலுவையில் மரணித்துவிட்டது என்பதுதான். எந்த மனம் தனது மாம்சம் மரித்துவிட்டதை புரிந்து கொள்ளுகிறதோ அதுவே புதிதாக்கப்பட்ட மனம், புதிதாக்கப்பட்ட அந்த மனம் இனி நானல்ல கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் என்ற புரிதலுக்குள் வருகிறது. அந்தப் புரிதல் அந்த மனிதனையே மறுரூபமாக்கிவிடும். அவனுக்கு கனிகொடுத்தல் என்பதும் இயல்பாக வரும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

Leave a Reply