பரிசுத்தத்தைத் துரத்தாதீர்கள்!

எதையாவது செய்து, அல்லது செய்யாமலிருந்து பரிசுத்தமாக உணர வேண்டும் என்ற நோக்கிலேயே பரிசுத்தத்தை துரத்திக்கொண்டு ஓடாதீர்கள். அந்த தற்காலிக பரிசுத்த உணர்வு போலியானது. இப்படி ஓடிய அனைவரும் நியாயப்பிரமாணத்துக்குள் சிக்குண்டு போனார்கள். அது பாலைநிலத்தில் கானல்நீரை விரட்டிக்கொண்டு ஓடுவது போன்றது.

நாம் ஆண்டவராகிய இயேசுவின் கிருபையால் பாவத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறோம், அதை நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் மீட்கப்பட்டத்தென்னவோ சர்வ நிச்சயம். ஆனால் அந்த விடுதலையை நாம் விசுவாசத்தின் உதவியோடு உணரும்போது, அந்த விடுதலை உணர்விலேயே லயித்திருக்கும்போது அளவற்ற நன்றியுணர்வும், மிகுந்த தைரியமும், பொங்கி வழியும் மகிழ்ச்சியும் நம்மை நிரப்புகிறது. அந்த உணர்வு ஆவிக்குரிய வளர்ச்சியின் அடுத்தடுத்த படிநிலைகளுக்கு நம்மை அழைத்துச் செல்லுகிறது. மற்றபடி நாம் விடுவிக்கப்பட்டுவிட்டோம் என்பதே நாம் பரிசுத்தமாக்கப்பட்டுவிட்டோம் என்றுதான் அர்த்தம். நாம் பரிசுத்தமாக இருப்பதை உணரவேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் அது தேவசாயலைப் பெற்ற ஆவிக்குரியவனின் இயல்புநிலை.

ஒரு சராசரி மனிதன் தான் ஆரோக்கியமாக இருக்கும்போது அதை உணர்ந்து, “நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்” என்று எல்லோரிடமும் போய் சொல்லுவதில்லை. ஏனெனில் அது அவனது இயல்புநிலை. இயல்புக்கு மாறான வியாதி அவனுக்குள் வரும்போதுதான் அவன் அதை உணர்கிறான், அவனுக்குள் இருக்கும் immune system அதை அவனுக்கு உணர வைக்கிறது. இயல்பு நிலையை உணர வைக்க நமக்குள் எந்த சிஸ்டமும் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை.

எனவே எதையாவது செய்து, அல்லது செய்யாமலிருந்து பரிசுத்தமாக உணர முயலாதீர்கள். அதைவிட விடுதலையை உணரவும், அந்த உணர்வில் லயித்திருக்கவும் நாடுங்கள். அது லாபகரமானது!

ஜெயராஜ் விஜய்குமார்
www.brovijay.com

Leave a Reply