பரலோக ராஜ்ஜியம்: மேய்ப்பனின் குரலும் ஆட்டின் செவியும்(Part-1)

உம் அரசு வருக- பாகம் 6

இத்தொடரின் முந்தைய பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும்
இத்தொடரின் முதல் பாகத்தை வாசிக்க இங்கு சொடுக்கவும்

ஆதிமுதல் அந்தம் வரை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை திரும்பத் திரும்ப தேவன் ஒரே ஒரு காரியத்தை பிரதானமாக மனிதனிடம் குறிப்பாக சபையிடம் “கொடு” என்று கேட்கிறார். அது பணத்தை அல்ல, பொன்னை அல்ல, உடல் பெலத்தை அல்ல, தாலந்துகளையும் அல்ல, பிரதானமாக அவரே தன் வாயைத் திறந்து மறுபடியும் மறுபடியும் “கொடு, கொடு” என்று வருந்தியும், நயங்காட்டியும், கடிந்தும் கேட்பது நம் செவிகளைத்தான். மற்ற காரியங்களை நாம் அவருக்காகக் கொடுப்பது எளிதாகும், செவிகொடுப்பதே கடினம். செவிகொடுத்தல் என்பது “கேட்டல்” என்பதை விட ஆழமான அர்த்தமுடையது.

“நன்மைதீமை அறியத்தக்க கனியைப் புசிக்காதே…” என்ற தேவ சத்தத்தை ஆதாம் கேட்டான், ஆனால் பறித்து, புசித்து தன்னிடம் கனியைத் தந்த மனைவிக்கு செவிகொடுத்தான்.

கர்த்தர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்…(ஆதி 3:17)

எதிர்பாலரை இச்சையுடன் பாராதே..என்ற தேவ சத்தத்தை நம் காதுகளால் கேட்கிறோம், ஆனால் ஒரு சப்தமும் இன்றி, வார்த்தைகளும் இன்றி நம்முடன் பேசி கவர்ந்திழுக்கும் மாம்சத்துக்கு செவிகொடுத்து விழுந்து போகிறோம். இதுவே கேட்டலுக்கும் செவிகொடுத்தலுக்கும் உள்ள வேறுபாடு.

கர்த்தர் நமக்கு ஆண்டவரா (Master) இல்லையா என்பதை நாம் அவருக்கு உதடுகளினால் செய்யும் ஆராதனையில் அல்ல, அவருக்குச் செவிகொடுத்தல் மூலமாகவே விளங்கப்பண்ண முடியும். ஒரு மனிதனோ, சபையோ அவருக்குத் தன் செவியை விலக்கும் நாளில்தான் அதன் விழுகை ஆரம்பமாகிறது.

பழைய உடன்படிக்கையில் தேவசப்தம் மோசே முதற்கொண்டு தீர்க்கதரிசிகள், நியாயாதிபதிகள், ஆசாரியர்கள், பயபக்தியுள்ள அரசர்கள் மூலமாக இஸ்ரவேல் ஜனங்களுக்குள் ஒலித்தது. ஜனங்கள் அந்த சப்தத்துக்கு செவிகொடுக்கும் நாட்களில் வாழ்ந்து செழித்திருந்தார்கள். செவியை விலக்கிய காலங்களில் சத்துருக்களிடம் சிக்கி சீரழிந்தார்கள். (உபா 6:3, லேவி 26:21)

செவிகொடுத்தலின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் அறிய ஒரு ரிவர்ஸ் கியர் போட்டு வரலாற்றில் இன்னும் சற்று பின்னோக்கிப் போனால் நமக்கு ஒரு மிகமுக்கிய பாடம் காத்திருக்கிறது.

ஏதேன் தோட்டம்…

கர்த்தர் தனக்கும் மனிதனுக்குமான உறவை ஒரு அழகான கவிதையைப் போல வடிவமைத்திருந்தார். ஆதாம் நன்மை தீமை இன்னதென்கிற அறிவை தேவனிடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் இந்த உன்னதமான உடன்பாட்டுக்குள் மனிதன் இருக்கும்வரை அவன் ஜீவவிருட்சத்தின் கனியைப் புசித்து என்றென்றும் ஜீவித்திருக்க முடியும். ஆனால் அவனுக்கு இன்னொரு தெரிவும் கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது நன்மை, தீமை எது என்று அறிந்துகொள்ள எனக்கு தேவனுடைய உதவி தேவையில்லை. எனக்கு நானே எஜமானனாக இருந்து அதை நானே வகையறுத்துக்கொள்ள முடியும் என்பதுதான் அது. இந்த உண்மையை தேவன் ஆதாமுக்கு மறைக்கவில்லை, அதே சமயம் இந்தத் தெரிவை அவன் செய்தால் அதனால் ஏற்படும் நஷ்டத்தையும் சொல்லியே அவனை எச்சரித்தார்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் (ஆதி 2:16,17)

துரதிர்ஷ்டவசமாக அன்று முதல் இன்றுவரை மனிதனுக்கு இறைவார்த்தைக்கு செவிகொடுக்கும் வாஞ்சை இம்மியளவும் இல்லை. அவன் தெரிந்தெடுப்புகள் அத்தனையும் எதிர்மறையானவைகள். அதன் விளைவுகளைத்தான் இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இன்று அநீதியின் விளைவாக உலகம் சந்திக்கும் அவலங்களையும், கோரமான நியாயத்தீர்ப்புகளையும், அகால மரணங்களையும் பார்த்து துக்கத்தோடு தேவன் சொல்லும் வார்த்தை இதுவாகத்தானிருக்கும்

…நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும் (சங் 81:8)

இப்போது ஏதேன் தோட்டத்திலிருந்து முன்னோக்கிப் பயணித்து வரலாற்றின் வேறு எந்த நிறுத்தங்களிலும் நிற்காமல் ஏதேன் வனத்தை விட சிறப்பான, வனப்பான இன்னொரு தோட்டத்துக்குள் வந்து பாருங்கள்!

பரலோக ராஜ்ஜியம்…

பரலோக ராஜ்ஜியத்தின் உன்னத அழகுக்குக் காரணம் ஆதாமின் பாவத்தின் விளைவாக தேவனுக்கும் மனிதனுக்கும் விளைந்த பகை சிலுவையில் முறிக்கப்பட்டு உறவு மீட்கப்பட்டதே! ஆம், மீட்கப்பட்ட உறவு ஏதேன் உறவைக்காட்டிலும் மேன்மையானது, நெருக்கமானது!!

இது அப்பா பிள்ளை உறவு…

இந்த உறவின் இணைப்புப் பாலமே மேய்ப்பனின் குரலும், ஆட்டின் செவியுமே ஆகும். இனி முன்போல தேவன் தீர்க்கதரிசிகள் வழியாகப் பேசுவதைவிட ஒவ்வொரு ஆட்டுடனும் அவர்தாமே தனிப்பட்டவிதத்தில் பேசுகிறார்.

வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.

அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார். (யோவா 10:2-5)

பரலோக ராஜ்ஜியத்தின் அழகைப் பாருங்கள். மேய்ப்பன் தன் ஆடுகளோடு பேசுகிறார், ஆடுகள் மேய்ப்பனுக்கு செவிகொடுக்கின்றன. தான் கேட்பது மேய்ப்பனின் சத்தமா, அல்லது எதிரியின் சத்தமா? என்று எந்த ஆட்டுக்கும் குழப்பம் எழுவதில்லை. காரணம் அவைகள் மேய்ப்பனை அறிந்தும் மேய்ப்பனால் அறியப்பட்டும் இருக்கின்றன (யோவா 10:15). ஆனால் இன்று சபைகளுக்குள் இந்தக் குழப்பத்துடன் வாழ்பவர்கள் ஏராளம்! தான் கேட்பது இயேசுவின் சத்தமா அல்லது பிசாசின் சத்தமா என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. எல்லாவற்றுக்கும் தங்களது பாஸ்டரைச் சார்ந்திருக்கிறார்கள், சார்ந்திருக்கும்படி பழக்கப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள். அல்லது டி.வி ஊழியருக்கு கடிதம் எழுதிக் கேட்கிறார்கள். நமக்கு பாஸ்டரைத் தெரியும், டி.வி நட்சத்திர ஊழியரைத் தெரியும், ஆனால் பிரதான மேய்ப்பரைத் தெரியுமா? அவரது சத்தத்தை அறிந்திருக்கிறோமா?

நாம் அவருடைய சத்தத்தை ஐயமின்றி அறிந்திருப்பதும், அவருக்கு செவிகொடுத்து அவருக்கு பின்செல்லுவதுமே நாம் அவரது ஆடுகள் என்பதற்கு அடையாளமாகும். வெறுமனே பாஸ்டரின் ஆடாகவே வாழ்ந்து அவரிடம் கிடைக்கும் செய்திகளை மாத்திரமே உண்டு, அவரிடம் கிடைக்கும் நற்பெயருக்காகவே உழைத்து, அவரது ராஜ்ஜியத்தைக் கட்டுவதிலேயே வாழ்வைச் செலவிட்டு மரிப்போமாயின், “…நான் உங்களை அறியேன்!” என்பதே மணவாளன் நம்மை சந்திக்கும்போது நம்மைப் பார்த்துச் சொல்லும் வார்த்தையாக இருக்கும். அன்று நாம் மூடரைப் போல பலியிட்டு வஞ்சிக்கப்பட்டதை எண்ணிப் புலம்புவதைவிட இன்றே நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை அண்டிக்கொண்டு அவருக்கு செவிகொடுத்தல் நலம்.

மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள்.(பிர 5:1)

ஊழியக்காரர்களை விட்டு வெளியே வாருங்கள் என்று நான் சொல்லவில்லை. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டே தேவன் சபைக்கு ஊழியர்களைக் கொடுத்திருக்கிறார் என்று எபேசியர் 4:12 சொல்லுகிறது. அநேகர் அநேகரை வஞ்சிக்கும் விசுவாச துரோகம் நிறைந்த இந்தக் கடைசி காலத்தில் நம்மை தேவனிடத்தில் நடத்தாமல் தம்மண்டை இழுத்துக்கொள்ளுகிற கபடர்கள் நம்மிடையே அளவின்றிப் பெருகியிருக்கிறார்கள். எனவே நாம் வெகு ஜாக்கிரதையாக அவர்களை நிதானித்துப் பார்த்து அவர்களிடம் உறவுகொள்ள வேண்டும். போலிகளைக் கண்டறிந்து அவர்களைவிட்டு விலகவேண்டும். அறிவும், ஜாக்கிரதையும் உள்ள பிள்ளைகளை தேவன் விரும்புகிறார், பாராட்டுகிறார்.

நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும் … அறிந்திருக்கிறேன். (வெளி 2:2,3)

பரலோக ராஜ்ஜியத்தில் தேவனுக்குச் செவிகொடுத்தல் அதிமுக்கியமானது. பரலோக ராஜ்ஜியத்தின் முக்கியச் செய்திகளைச் சொல்லி முடிக்கும் போதெல்லாம் ஆண்டவர் மறக்காமல் சொன்ன ஒரு வார்த்தை: கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்… (மத் 11:15, 13:9, மாற்கு 4:9,லூக்கா 8:8).

ஆவியானவர் ஏழு சபைகளுக்குச் சொன்ன செய்தியில் ஒவ்வொரு செய்தியின் முடிவிலும் அவர் சொன்னது: ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. (வெளி 1,2,3 அதிகாரங்கள்)

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தனது சிநேகிதனாகிய லாசரு வீட்டுக்குச் சென்றபோது அவனது இரு சகோதரிகளில் ஒருத்தியாகிய மார்த்தாள் விருந்து உபசரிப்பில் அதிக கவனம் செலுத்தியவளாய் பம்பரமாய்ச் சுழன்று வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள், இன்னொருத்தியாகிய மரியாளோ அமைதியாய் இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து அவர் சொல்லுவதைக் கேட்டுகொண்டிருந்தாள். மார்த்தாள் மரியாளைக் குறித்து புகார் சொன்னபோது இயேசு அவளுக்கு அழகான, ஆழமான பதில் ஒன்றைச் சொன்னார்:

மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். (லூக்கா 10:41,42)

தேவையானது ஒன்றே!!! அது பிரதான மேய்ப்பனாகிய இயேசுவின் சத்தத்துக்கு செவிகொடுத்தலே! இதுவே நம்மை விட்டு நித்தியம் வரை நீங்காத நல்ல பங்காகும்.

செவிகொடுத்தல் பற்றி தொடர்ந்து தியானிக்கலாம்…

8 thoughts on “பரலோக ராஜ்ஜியம்: மேய்ப்பனின் குரலும் ஆட்டின் செவியும்(Part-1)”

 1. “ஆனால் ஒரு சப்தமும் இன்றி, வார்த்தைகளும் இன்றி நம்முடன் பேசி கவர்ந்திழுக்கும் மாம்சத்துக்கு செவிகொடுத்து விழுந்து போகிறோம்.” — உண்மையான வரிகள், தினமும் என்னை சிலுவையில் அறைய உதவுகின்ற வரிகள்..

  …நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும் (சங் 81:8),தேவையானது ஒன்றே!!! அது பிரதான மேய்ப்பனாகிய இயேசுவின் சத்தத்துக்கு செவிகொடுத்தலே! இதுவே நம்மை விட்டு நித்தியம் வரை நீங்காத நல்ல பங்காகும்.—–பிரதானம்

 2. ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால்… ((யோவா 10:4,5)

  கர்த்தாவே,
  எம் செவிகள் மேய்ப்பனாகிய உம் சத்தத்துக்கு மட்டுமே பழக்கப் படுவதாக!
  அந்நிய சத்தம் எமக்கு விநோதமாயிருப்பதாக!!
  கடைசி மட்டும் நாங்கள் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளாகவே இருப்போமாக!!!

Leave a Reply