நீங்க நல்லவரா, கெட்டவரா? – பாகம் 3

இயல்பாகவே மனிதனுக்கு கடவுளைக் குறித்த மிகப்பெரிய பயம் இருக்கிறது. கடவுள் பயங்கரமானவர், இரக்கமற்றவர், கோபக்காரர். நாம் அவரை திருப்திப் படுத்தாவிட்டால் அவர் நமக்கு தீங்கு செய்துவிடுவார் என்று மதங்கள் காலகாலமாக கடவுளைக் குறித்து தவறான படத்தையே மனிதனுக்குக் காட்டி வந்திருக்கிறது. மதங்கள் போதித்தது இருக்கட்டும், முதல் மனிதரான ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபின்பு, தேவபிரசன்னதை விட்டு விலகி, ஓடி ஒளிந்துகொண்டார்களே அவர்களுக்கு அதை யார் போதித்தது?

ஆதாம் ஏவாளுக்கு யாரும் அதை போதிக்கவில்லை. தேவனைக் குறித்த அப்படிப்பட்டதொரு தப்பெண்ணம் பாவத்திலேயே program செய்யப்பட்டிருக்கிறது. பாவம் எனும் வைரஸ் உங்களுக்குள் install ஆகும்போது அந்த எண்ணமும் இயல்பாகவே உங்களுக்குள் கிரியை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. அந்த வைரஸானது இயேசுவின் இரத்தத்தால் கழுவி, அகற்றப்பட்டு “தேவநீதி” எனும் சரியான application உங்களுக்குள் தேவ வார்த்தையின் வழியாக install செய்யப்பட்டு, அது இயங்க ஆரம்பிக்கும்போது “நான் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவன்” என்கிற உணர்வும் தானாக உங்களுக்குள் கிரியை செய்யத் தொடங்கிவிடும். இதுதான் தேவன் ஏற்படுத்திய சரியான வழி.

ஆனால் இது ஒரே நாளில் மேஜிக்காக நடந்துவிடுவதில்லை. தேவ வார்த்தையைக் கொண்டு பரிசுத்த ஆவியானவர் இந்த மாற்றத்தை நமக்குள் நிகழ்த்த குறிப்பிட்ட காலம் ஆகிறது. ஆனால் அதற்குள் ஒரு விசுவாசி வேதபுத்தகத்தை வாசித்து, தேவனை குறித்து புதிராக உள்ள விஷயங்களைக் குறித்து குழம்பி, குழம்பி ஒருவாறு தெளிவடைகிறான். அந்த குழப்பத்தைப் பயன்படுத்தி பிசாசு அவனை மீண்டும் பயத்துக்குள் தள்ளவும், தேவனைக் குறித்து தவறான எண்ணம் கொள்ளவும் அவனை வழிநடத்த முயல்கிறான். அதற்காக ஒரு விசுவாசியை வேதம் வாசிக்க அனுமதிக்கக்கூடாதா என்றால், அப்படியில்லை. பசிக்கிற குழந்தைதான் பாலுக்கு அழும், அந்தக் குழந்தைதான் தன் பசியையும் போக்கிக்கொள்ளும் என்ற அடிப்படையில் வசனத்தை வாசித்தால்தான் அடுத்த கட்டத்துக்கே நகர முடியும், கேள்வி பிறந்தால்தான் பதிலும் பிறக்கும் என்ற சூழலும் இருக்கிறது.

இந்த இடம்தான் சபைக்கு மிகவும் சவாலாக அமைந்துவிடுகிறது. அந்த விசுவாசி வசனத்தில் வேரூன்றி, “என் கர்த்தர் நல்லவர், அவர் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார், எனக்கு எப்போதும் எனக்கு நன்மையே செய்கிறார்” என்ற அறிவு உணர்வாக மாறும்வரை அவன் குழம்பும் பொழுதெல்லாம் குழப்பத்தைத் தெளிவித்து அவனை மறுபடி மறுபடி சத்தியத்தின் track-கில் கொண்டுவந்து நிறுத்த வேண்டிய பொறுப்பு சபைக்கு இருக்கிறது. இது மிகவும் கடினமான பணிதான். அதை மிகுந்த ஜாக்கிரதையோடும்,ஆவியானவர் தரும் ஞானத்தோடும் அணுக வேண்டும். மாறாக இந்தப் பணியை எளிதாகக் கையாள ஏதேனும் குறுக்கு வழியைக் கையாண்டால் அதற்கான விலையையும் நாம்தான் கொடுக்க வேண்டும்.

ஒரு விசுவாசி ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கக் கூடாமல் அவனுக்குத் தடையாக இருப்பது அவனுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களே என்பதையும், அந்த எண்ணங்களை உண்டாக்கியது கிரியையை மையமாகக் கொண்ட அக்காலத்திய பாரம்பரிய கிறிஸ்தவ பிரசங்கங்களே என்பதை உணர்ந்து கொண்ட மேற்கத்திய செழிப்புப் பிரசங்கியார்கள் அந்த கிறிஸ்தவ எதிர்மறை எண்ணங்களை நீக்க விசுவாசிகளைக் கூட்டிக்கொண்டு அடுத்த extreme-க்கு ஓடினார்கள். நன்மையான அத்தனை விஷயங்களும் தேவனிடத்திலிருந்து வருகிறது, தீமையாகத் தோன்றும் அத்தனை விஷயங்களும் பிசாசிடமிருந்து மட்டுமே வருகிறது என்கிற, இது கறுப்பு, இது வெள்ளை என்கிற ஒரு புதிய, ஒரு rigid-ஆன வரையறையைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இரண்டும் இல்லாமல் grey தோன்றும் விஷயங்களுக்கு புதுப்புது பொருந்தாத விளக்கங்களும் கொடுக்க ஆரம்பித்தார்கள். இது ஓரளவுக்கு பலனளித்தாலும் இது சரியான, முழுமையான தீர்வா என்றால் நிச்சயமாக இல்லை.

நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் என்ற அறிக்கைதான் விசுவாசத்தின் வெளிப்பாடாக இருக்குமே தவிர, மரண இருளின் பள்ளத்தாக்கு என்ற ஒன்றே இல்லை என்று நிறுவ முயல்வது அப்பட்டமான பயத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். நரகம், நியாயத்தீர்ப்பு, தேவகோபம் என்ற ஒவ்வொன்றைக் குறித்து இவர்கள் தரும் விளக்கங்களும் பயத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது.

நன்மையை தேவனுக்கும், தீமைகளை பிசாசுக்கும் வரையறுப்பதில் தவறில்லை. ஆனால் இதில் எந்த ஓரத்துக்கு ஓடிவிட்டார்கள் என்றால் மரணத்துக்கும் தேவனுக்கும் சம்பந்தமே இல்லை. மரணத்தை தேவன் உண்டாக்கவில்லை என்று பிரசங்கிக்கும் அளவுக்குப் போய்விட்டார்கள். அப்படியெனில் மரணத்தை உண்டாக்கியது யார்? அது சாத்தானோ அல்லது வேறொருவரோ என்றால் தேவனுக்கு சமமான இன்னொரு படைப்பாளி இருக்கிறாரா? இதை எப்படி புரிந்துகொள்வது?

மரணம் என்பது நமது கடைசி மற்றும் பிரதான சத்துரு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் சாவாமையை முழுமையாக விசுவாசிக்கிறேன். அது இந்த பூமியிலேயே சாத்தியம் என்பதையும் நம்புகிறேன். மரணத்தை தேவனோடு தொடர்புபடுத்தி நான் எதையும் சாதிக்கப்போவதில்லை. ஆனால் ஒரு விசுவாசி ஒரு விஷயத்தை எந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும்? அதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதை பகிர்ந்துகொள்ளும் நோக்கில்தான் இந்தக் கட்டுரைத் தொடரையே ஆரம்பித்தேன்.

மரணத்துக்கும் தேவனுக்கும் சம்பந்தமில்லை என்று போதிப்பவர்கள் அதிகம் பயன்படுத்தும் வசனம் ஒன்று இணைத்திருமறை என்று அழைக்கப்படும் தள்ளுபடியாகமத்தில் உள்ளது. “சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை… இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாலும் இறப்பை வரவழைத்தார்கள் (சாலொமோனின் ஞானம் 1:12-16)”

மரணத்துக்கும் தேவனுக்கும் சம்பந்தமில்லை என்றால் கீழ்கண்ட வசனங்களை வாசியுங்கள். இதை எப்படி புரிந்துகொள்வீர்கள்?

பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று…(ஆதி 3:22)

நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை (உபா 32:39)

ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத்திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும் (சங் 104:27-29)

பிரியமானவர்களே! மரணம் எப்போது வந்தது என்று கேட்டால் பலர் ஆதாமின் வீழ்ச்சிக்குப் பின் வந்தது என்பார்கள். ஆனால் ஆதாம் உருவாக்கப்படுவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து மரித்துப்போன மிருகங்களின் புதைபடிவங்கள் (fossils) அனுதினமும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவைகள் யாருடைய விழுகையால் மரணித்தன? ஒருவேளை லூசிபரின் விழுகையால் மரணம் வந்திருக்குமோ?

லூசிபரும் அவனோடுகூட தேவதூதரில் மூன்றில் ஒருபங்கு விழுந்துபோனபோது அவை இரண்டாம் வானத்திற்கு வந்து அவைகளை ஆக்கிரமித்துக்கொண்டதாக கிறிஸ்தவத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. இதற்கு நேரடி வசன ஆதாரம் இல்லாவிட்டாலும் அதை ஓரளவு உறுதிப்படுத்தக்கூடிய வகையில் எபே 2:2, எபே 6:12 ஆகிய வசனங்கள் இருக்கின்றன. அப்படியெனில் சாத்தானின் விழுகைக்கு முன்பதாகவே இந்த முப்பரிமாண உலகம் படைக்கப்பட்டுவிட்டது என்பது உறுதியாகிறது அல்லவா?

இந்த முப்பரிமாண உலகம் எப்படிப்பட்டது? இதில் பலகோடிக்கணக்கான நட்சத்திரங்களும், கோள்களும், துணைக்கோள்களும், விண்கற்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பிறப்பு காலமும் ஒரு மரண காலமும் உண்டு. மரணித்த ஒரு நட்சத்திரம் white dwarf-ஆகவோ, நியூட்ரான் நட்சத்திரமாகவோ, அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும். மரணம் என்பது உயிர் பிரியும் நிகழ்வு மட்டுமல்ல, உருவாக்கப்பட்ட ஒரு பொருள் devay ஆகி வீழ்ச்சியடைவதும் மரணம்தான். ஒருவேளை லூசிபர் விழுந்து போவதற்கு முன்பாகவே எத்தனையோ கோடி நட்சத்திரங்களும் கோள்களும் மரித்திருக்கக்கூடும். அவையெல்லாம் யாருடைய விழுகையால் மரித்தன?

நமது சூரியன் படைக்கப்பட்டு 4.6 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது. அதன் மொத்த ஆயுட்காலம் 9 முதல் 10 பில்லியன் வருடங்கள். அது இப்போது தனது பாதி வயதைக் கடந்திருக்கிறது. ஆம், சூரியன் படைக்கப்பட்டபோதே அது ஒரு குறிப்பிட்ட ஆயுட்கால நிர்ணயத்தோடுதான் படைக்கபப்ட்டது. இப்பொழுது புரிகிறதா, மரணம் என்பது யாருடைய விழுகையினாலும் வந்த விபத்து அல்ல, அது சிருஷ்ட்டிப்பின் ஒரு பகுதி. அதை சிருஷ்ட்டித்தவர் தேவன். மரணம் என்பது இந்த பிரபஞ்சத்தின் தடையற்ற இயங்கியலுக்கு அவசியமாக இருக்கிறது.

இந்த அண்டத்தில் என்ன சுழற்சி நடக்கிறதோ அதுவேதான் மனித உடலிலும் நடக்கிறது. நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. இதை Programmed death என்று அர்த்தப்படுத்தும் விதத்தில் Apoptosis என்று அழைப்பார்கள். உதாரணத்துக்கு நம்முடைய இரத்த சிவப்பணுக்கள் 115 நாட்களும், வெள்ளையணுக்கள் 12 முதல் 20 நாட்களும், தோல் செல்கள் 2 முதல் 3 வாரங்களும் உயிர்வாழும். அதன் பின்னர் அவை மரித்து புதிய செல்கள் உருவாகும். இந்த சுழற்சி விழுகைக்கு முன்னான ஆதாம் ஏவாளின் உடலிலும் நிகழ்ந்திருக்கும். ஏனெனில் மனித உடலின் இயல்பு அதுதான்.

விழுகைக்கு முன்னான ஏதேனில் மரணமே இல்லாதிருந்திருந்தால் தோட்டமே பூச்சிகளால் நிறைந்திருந்திருக்கும், ஏதேனைச் சுற்றி ஓடிய நான்கு நதிகளும் மீன்களால் நிறைந்து வெள்ளக்காடாகி இருந்திருக்கும். ஆக, விழுகைக்கு முன்னதான ஏதேனில்கூட பிறப்பு-இறப்பு என்கிற உயிர் சுழற்சி நடந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. மனிதன் மட்டுமே தேவனைப் போல மரணத்தை அறியாதவனாக இருந்திருக்கிறான். அதற்குக் காரணம் அவர் ஜீவாதிபதியாகிய அவரோடு இணைக்கப்பட்டிருந்தான். பாவத்தின் விளைவாக அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டு மரணம் அவனையும் ஆட்கொண்டது.

தேவன்தான் மரணத்தை உருவாக்கினார் என்பதை நான் இவ்வளவு சிரத்தை எடுத்து நிறுவக் காரணம் அவரே அத்தனையையும் படைத்து, ஆளுகை செய்கிறார். அவர் ஏற்படுத்திய நியமத்தின்படிதான் அத்தனையும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை உறுதியாக உணர்த்தத்தான். அவருடைய ஆளுகைக்குள் ஜீவனும், மரணமும் அடக்கம். மரணத்தை அவரை விட்டுப் பிரித்து அதை பிசாசின் ஆளுகைக்கு உட்படுத்துவதன் மூலம் நாம் தேவனை மட்டுப்படுத்துகிறோம். அவரைப்பற்றிய உண்மையை மறைக்கிறோம்.

இந்தப் பிரபஞ்சம் எனும் நாடகமேடையின் கதாசிரியரும், இயக்குநரும் கர்த்தரே! பாத்திரங்களைப் படைப்பவரும், அழிப்பவரும் அவரே, தேசங்களை உருவாக்குபவரும், ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவரும் அவரே, கட்டுபவரும், இடிப்பவரும், நாட்டுபவரும், பிடுங்குபவரும் அவரே.. பிசாசு வேண்டுமானால் மரணத்தின் அதிபதி என்று அழைக்கப்படலாம், ஆனால் அவனுடைய நித்திய மரணத்தை நிர்ணயிக்கும் அதிகாரமும் அவருக்கே உள்ளது.

(தொடர்ந்து தியானிப்போம்)

Leave a Reply