நீங்க நல்லவரா, கெட்டவரா? – பாகம் 2

மத்தேயு நற்செய்தி நூலில் கர்த்தராகிய இயேசு “மரம்-கனி” என்ற உதாரணத்தை வைத்து இரு வேறு சூழல்களில் இருவேறு வித்தியாசமான காரியங்களைப் பேசுகிறார். முதலாவதாக மத்தேயு 7-ஆம் அதிகாரத்தில் கள்ள தீர்க்கதரிசிகளை நிதானிப்பது எப்படி என்று மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது (மத் 7: 15-18)

ஆடுகளும், ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களும் ஒரே இடத்தில் இருக்கிறது. இங்கே நபர் சரியா தவறா என்று கண்டுபிடிக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே செயலை வைத்து நபரை நிதானியுங்கள் என்கிறார்.

இதற்கு அப்படியே தலைகீழான இன்னொரு சூழல் மத்தேயு 12-ஆம் அதிகாரத்தில் வருகிறது. கர்த்தராகிய இயேசு அனைவராலும் ஏற்கனவே “ரபீ” என்று அறியப்பட்டுவிட்டார். பரிசேயர்களும்கூட அவரை “ரபீ” என்றே அழைக்கிறார்கள்(யோவா 3:1,2). அதனால்தான் அவரால் யூதரின் ஜெபாலயத்துக்குப் போய் அங்கு பிரசங்கிக்க முடிந்தது (மத் 13:54). ஆகவே அவர் “ரபீ” என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர் ரபீயாக இருந்தும் நியாயப்பிரமாணத்தை மீறி ஓய்வு நாளில் ஜனங்களை சுகமாக்குவது சரியா இல்லையா என்று அவரது செயலைக் குறித்து ஒரு தர்க்கம் ஏற்படுகிறது. நன்றாக கவனியுங்கள், மத்தேயு 7-இல் நபர் சரியா இல்லையா என நிதானிக்க வேண்டும், மத்தேயும் 12-இல் நபரைக் குறித்து பிரச்சனையில்லை, அந்த நபர் செய்த செயல் சரியா இல்லையா என்று செயலை நிதானிக்க வேண்டிய சூழல்.

மத்தேயு 7 இருமைத் தன்மையுள்ள மனிதர்களை நிதானிப்பது பற்றியது. இங்கு கர்த்தர் “கனி சரியில்லை என்றால் நபரும் சரியில்லை” என்று மனிதர்களை நிதானிக்கக் கற்றுத்தருகிறார். ஆனால் மத்தேயு 12 இருமைத் தன்மையைக் கடந்த தம்முடைய செயல் பற்றியது, சுகமளித்தல் என்ற அந்தச் செயல் ஓய்வுநாளன்று செய்யப்பட்டபடியால் அது தேவ ஆவியால் செய்யப்பட்டதல்ல, பெயல்செபூலால் செய்யப்பட்டது என்று பரிசேயர் குற்றம்சாட்டுகிறார்கள். அதன்மூலம் அந்த செயலைச் செய்த ஆவியானவர் தூஷிக்கப்படுகிறார். இங்கே அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் கர்த்தர் என்ன சொல்லுகிறார் பாருங்கள்.

“மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும் (மத்தேயு 12:33)” இங்கே கனியை வைத்து மரத்தை நிதானிக்க சொல்லவில்லை, மரத்தை வைத்து கனியை நிதானிக்கச் சொல்லுகிறார்.

இதன் பொருள் என்ன? “நான் ரபீ என்று ஒத்துக்கொள்கிறீர்களல்லவா? நான் பிதாவினிடத்திலிருந்து வந்தவன் என்று அறிந்திருக்கிறீர்களல்லவா? நான் பரிசுத்த ஆவியினால் கிரியை செய்கிறேன் என்று அறிந்திருக்கிறீர்களல்லவா? மொத்தத்தில் நான் நல்ல மரம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால் என் செயல்களும் நல்லது என்றே சொல்லுங்கள். அது உங்களுக்கு புரிகிறதோ, புரியவில்லையோ, அதை ஜீரணிக்க முடிகிறதோ, முடியவில்லையோ எப்படியிருந்தாலும் நல்ல மரமாகிய நான் நல்ல கனியைத்தான் கொடுப்பேன் என்று விசுவாசியுங்கள்” என்பதே!

கர்த்தருடைய செயல்களை நிதானிப்பது பற்றி அதையேதான் நானும் சொல்கிறேன். அவர் நல்லவர், ஆகவே அவர் செய்யும் செயல்களும் நல்லதாகத்தான் இருக்கும். அதைப் புரிந்துகொள்ள முடியாதது நம்முடைய பிரச்சனை. அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம்தான் வளரவேண்டுமேயொழிய, அவரை நமது புரிதலுக்கேற்ப குறுக்கக் கூடாது. அவர் மனிதனை எரிநரகத்தில் தள்ளுவார் என்று வேதம் சொல்லுகிறதென்றால். “அன்புள்ள தேவன் தன் மக்களை நரகத்தில் தள்ளுவாரா?” என்று கேட்க நமக்கு முழு உரிமையும் இருக்கிறது. அதை ஆராயும் உரிமையும் இருக்கிறது. தேடலில்தான் விடை கிடைக்கும். ஆனால் விடை கிடைக்கும்வரை அவர் நல்லவர், அவர் செய்யும் செயலெல்லாம் நன்மை என்ற உறுதி இருக்க வேண்டும். அதை விடுத்து ஷியோல், டோக்கியோ என்று கதையளக்கக்கூடாது.

இந்திய கிறிஸ்தவம் முழுக்க நியாயப்பிரமாணத்தில் ஊறிக்கிடக்கும்போது, கர்த்தர் நமக்காக எழுப்பித் தந்த கிருபை பிரசங்கியார்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர்கள் நமது பொக்கிஷங்கள், மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களிடம் இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் “நிலை (State)” என்கிற விஷயத்தை விசுவாசிகளுக்கு சரியாக apply பண்ணுவார்கள். “நீ உனது கிரியையின் படி தீர்க்கப்படுவதில்லை, நீ இப்போது கிறிஸ்துவுக்குள் தேவநீதி என்கிற நிலையில்(State) வைக்கப்பட்டிருக்கிறாய். நீ பாவியல்ல நீதிமான், நீ பாவம் செய்தாலும் நீ நீதிமான்தான்” என்று போதிக்கிறார்கள். அது முற்றிலும் சரியே! இங்கே மரத்தை வைத்து கனியை நிதானிக்கும் சரியான புரிதல் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதே “நிலை (State)” என்கிற விஷயத்தை தேவனுக்கு apply பண்ணுவதில்லை.

தேவநீதியைப் பெற்றவர்களுக்கே அது பொருந்துமானால், நீதியின் தேவனுக்கு அது பொருந்தாதா? அவர் நீதியின் தேவனாக இருக்கிறபடியால் அவர் செய்வதெல்லாம் நீதியே! அவர் கொல்லுகிறவராகவும், பாதாளத்தில் இறங்கப்பண்ணுகிறவராகவும், தரித்திரம் அடையச் செய்கிறவராகவும், தாழ்த்துகிறவராகவும் இருந்தாலும் (1 சாமு 2:6,7) அவர் நல்லவர்தான். அவருடைய செயல்கள் எதுவாக இருந்தாலும் அவரது நிலையின்படி(State) அவர் நல்லவரே என்ற நிலைப்பாடு ஏன் அவர்களுக்கு இல்லை? இங்கே ஏன் கனியை adjust செய்து மரத்தை justify பண்ணும் விபரீத முயற்சியில் இறங்குகிறார்கள்?

செயலை வைத்து தேவனை நீதியுள்ளவராகக் காட்ட வேண்டிய விபரீத தேவை இவர்களுக்கு ஏற்பட்டபடியினால்தான், தேவன் நோவா காலத்தில் வெள்ளத்தை அனுப்பி மக்களை அழித்தாரா என்றால் அதற்கு ஒரு சப்பைக்கட்டு, கொள்ளிவாய் சர்ப்பங்களை அனுப்பி இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்தில் கொன்றாரா என்று கேட்டால் அதற்கு ஒரு சப்பைக்கட்டு, ஜனங்களை நரகத்தில் தள்ளுவாரா என்றால் அதற்கு ஒரு சப்பைக்கட்டு… என மூல மொழியில் அப்படி இருக்கிறது, யூதப்பாரம்பரியம் இப்படிச் சொல்லுகிறது என விதவிதமான பொருந்தாத விளக்கங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்கு ஒரு முடிவே கிடையாது. இது ஜனங்களை மேலும் மேலும் குழப்புமே தவிர எவ்வித தெளிவையும் யாருக்கும் உண்டாக்காது. இப்படிப்பட்ட புரிதலோடு வேதத்தில் ஏறி எங்கு நடந்தாலும் மைலுக்கு ஒருமுறை இடற வேண்டியதிருக்கும்.

முதலாவது மனிதருடைய ஸ்கேலை வைத்து தேவனை அளவிடுவதை நிறுத்துங்கள். மாறாக தேவனுடைய ஸ்கேலைக் கொண்டுவந்து மனிதரிடம் கொடுத்து அதை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். உண்மையில் நம் வாழ்வின் நோக்கமே அதை கற்றுக்கொள்வதுதான். அவரை உள்ளது உள்ளபடியே முழுமையாகப் புரிந்துகொள்வதுதான் சபையின் இலக்கு. அவரை நியாயப்படுத்துகிறேன் பேர்வழி என்ற பெயரில் நாம் மாயையான விஷயங்களை பரப்பிக் கொண்டிருப்போமானால் அந்த மாயையான இருளை நம்மைவிட்டு விலக்கும்வரை அவரால் நமக்கு சத்திய வெளிச்சத்தைத் தரமுடியாது. அதுவரை மணவாட்டியால் மணவாளனை முழுமையாக புரிந்துகொள்ளவும் முடியாது.

(தொடர்ந்து தியானிப்போம்)

Leave a Reply