தேவன் > விருப்பங்கள் > கேட்கும் பிரசங்கங்கள் > மனம் மறுரூபமாதல் > சரியான தேடல் > சரியான பயணம்
சுயம் > இச்சைகள் > செவித்தினவுக்கேற்ற பிரசங்கங்கள் > வஞ்சிக்கப்படுதல் > தவறான தேடல் > திசைமாறிய பயணம்
நமது கிறிஸ்தவ வாழ்வின் போக்கை நிர்ணயிப்பதில் தேடல் (Seeking) என்பது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது தேடல் நாம் கிறிஸ்தவ வாழ்வின் இலக்கைக் குறித்து என்ன அறிந்திருக்கிறோமோ அந்த அறிவின் அடிப்படையிலேயே அமைகிறது. அந்த அறிவு நாம் எதை, யாரிடம், எங்கு கற்றுக் கொள்ளுகிறோமோ அங்கிருந்துதான் கிடைக்கிறது. எனவேதான் நாம் எப்படிப்பட்ட நூல்களை வாசிக்கிறோம், எதுமாதிரியான பிரசங்கங்களைக் கேட்கிறோம் என்பது மிக முக்கியமானது.
நமது இருதயத்தின் விருப்பம் எதுவோ அதற்கேற்ற பிரசங்கங்களைத்தான் நாம் நாடுவோம். இங்குதான் பாதை இரண்டாக பிரிகிறது. விருப்பத்தை நமது இருதயத்தில் தேவனும் உருவாக்க முடியும், நமது மாம்சமும் (சுயம்) உருவாக்க முடியும். தேவன் தருவது விருப்பம், மாம்சம் தருவது இச்சை. விசுவாசிகளில் சிலர் பவுல் போன்ற அப்போஸ்தலரைப் பின்பற்றியதற்கும், வேறு சிலர் செவித்தினவுள்ளவர்களாய் தங்கள் இச்சைக்கேற்ற போதகர்களை சேர்த்துக் கொண்டதற்கும் இதுவே காரணம்.
சரி, யாருடைய இருதயத்தை தேவனுடைய விருப்பம் நிரப்புகிறது, யாருடைய இருதயத்தை சுயம் தரும் இச்சை நிரப்புகிறது? நாம் நமது ஆத்துமாவை யாருடைய ஆளுகைக்கு விட்டுக்கொடுத்திருக்கிறோமோ அதுவே இதனை நிர்ணயிக்கிறது.
சரியான பாதையில் செல்வோர் விசுவாசத்தினாலே கிருபைக்கு கீழ்ப்பட்டு நீதியின் கனிகளைத் தரும் சீஷனாகவும், தவறான பாதையில் செல்வோர் மறுரூபமடையாத, வெறும் சடங்குகளைப் பின்பற்றும். கனியற்ற ஒரு மதவாதியாகவோ அல்லது பிரமாணங்களைப் பிடித்துக்கொண்டு கிரியைகளின் அடிப்படையில் நீதிமானாக துடிக்கும் பரிசேயனாகவோதான் உருவாவார்கள்